Tuesday, 14 February 2017

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

சரவணன் சந்தினின் “ஐந்து முதலைகளின் கதை” நாவலை போன வருடம் உயிர்மை விருதுகள் விழாவின் வாங்கினேன். அப்போது இந்த நாவல் தான் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருந்தது. ஆனால் ஏனோ அப்போது என்னால் படிக்க இயலவில்லை. 20 பக்கங்களுக்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது. சரியென்று கட்டுரைத் தொகுப்பு மாதிரி ஏதாவது ஒரு அத்தியாயத்தை எடுத்து நடு நடுவே வாசித்துப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் பிரச்சனையா, அல்லது அவருடைய மொழிநடையை  என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை . அதை அப்படியே மூடி வைத்து விட்டு அடுத்து வேறு நூல்களைப் படித்தேன்.  பல மாதங்களுக்கு பிறகு திடீரென புத்தக அலமாரியில் “ஐந்து முதலைகளின் கதை” தென்பட்டது. இப்போது படித்துப் பார்க்கலாம் என்று அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “அட்டகாசம்” . அடித்து ஆடியிருக்கிறார் சரவணன் சந்திரன். ஒரே கல்ப்பில் படித்து முடித்துவிட்டேன். கட கடவென வழுக்கிக் கொண்டு போகிறது அவருடைய மொழிநடை. ஏன் இதை இத்தனை நாளாய் படிக்காமல் சும்மா இருந்தோம் என்று தான் தோன்றியது.
இந்த நாவல் இவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று. இந்நாவல் நிகழும் கதைக்களம். நான் இதுவரை கேள்விப்பட்டிராத தைமூர் என்ற தேசத்தில் தான் பெரும்பாலான நிகழ்வுகள் நாவலில் நடக்கிறது.

நாவலின் கதையைச் சொல்ல வேண்டுமென்றால் மிகச் சுருக்கமாக சொல்லிவிடலாம். ஆனால் கதைக்கு மேலே வாசித்து அறிந்து கொள்ள இந்நாவலில் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவற்றையும் பார்க்கலாம். முதலில் கதை. தைமூர் மிக காலதாமதமாக சுதந்திரம் பெற்று வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த தேசம். அங்கே இருக்கும் பெரும்பாலான மக்கள்( கிட்டத்தட்ட தேசத்தின் எல்லா மக்களும்) மிகுந்த ஏழ்மையிலே தான் இருக்கிறார்கள். சந்தையில் என்ன எடுத்தாலும் அநியாய விலை. அங்கே அதிக அளவில் வளங்களும் இல்லை. ஆனால் அங்கே ஏகப்பட்ட வளங்களும் பிரம்மாண்டமான தொழில் வாய்ப்புகளும் இருப்பதாக தன் நண்பர் சந்தோஷ்  சொன்ன தவறான தகவல்களை நம்பிக் கொண்டு நாவலில் கதாநாயகனும் (இவர் சரவணன் சந்திரன் தானென்று நினைக்கிறேன்) தன்னுடைய வீட்டை விற்று பணத்தை தயார் பண்ணி சந்தோஷுடன் தைமூருக்கு கிளம்புகிறான். அங்கே போய் தர்மு ,காவியன் என்ற இரு தொழிலதிபர்களுடன் மற்றும் இன்னொருவருடன் இணைந்து நிறுவனம் தொடங்குகிறார்கள் . இவர்கள் தான் ஐந்து முதலைகள். இவர்களுடைய நிறுவனத்தின் பிராதான தொழில் கடல் அட்டையைப் பிடித்து வேக வைத்து அதை விற்பது. காரணம் இதை சூப்பாக்கிக் குடித்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்குமாம். இதை உண்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று சொல்லி என்ன விற்றாலும் அதை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் மிகப்பெரிய  கூட்டமே சீனாவில் இருக்கிறது . ஆனால் நிறுவனத்துக்கு நினைத்த அளவில் எந்த இலாபமும் இல்லை. இதற்கு முக்கியமான காரணம் தர்மு. அவர் மிகப்பெரிய முசுடு. தன்னோடு இருப்பவன் தன்னவிட முன்னேறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் சிரத்தையுடன் இருப்பவர். அவர் என்றைக்குமே தொழிலில் அக்கறையோடு ஈடுபடவில்லை. முடிந்த அளவுக்கு மற்ற பங்குதாரர்களை ஏமாற்றி செலவுக் கணக்குகளில் ஊழல் செய்கிறார். ஆனால் காவியன் ரொம்பவே நல்லவர். ஆனால் என்ன பயன். இவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்.வேறு வழியின்றி கதாநாயகன் திரும்ப வந்து விடுகிறான்.

இவ்வளவு தான் கதைச் சுருக்கம். ஆனால் இதைத் தாண்டி இந்நாவலில் பேசப் பட வேண்டிவயை நிறைய உள்ளன. முக்கியமாக மொழிநடை. சரவணனின் மொழிநடை தைமூரையே நம் கண்முன் காட்டுகிறது. சரவணன் கதை சொல்லவில்லை. நம் கண்முன் கதையை காட்டுகிறார். இந்நாவலில் நாயகன்  சுவாரஸ்யங்களை விரும்பி அதைத் தேடி பயணிப்பவன்.சாகச மனநிலை கொண்டவன். அவனுக்கு நம்பிக்கைகள் கிடைப்பதில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் ஏதோ சில நிகழ்வுகளில் இருந்து ,தன்னை சுற்றி உள்ள மனிதர்களிடமிருந்து தனக்கான நம்பிக்கையை அவனே உருவாக்கிக் கொள்கிறான். பொறுத்தது போதும் பொங்கி எழு தோழா, தன் கையே தனக்குதவி  என்பது மாதிரியான பழைய தேய்ந்த ரெக்கார்டுகள் கிடையாது. இதில் சரவணன் காட்டுகிற தன்னம்பிக்கை வேறு மாதிரியானது . நம்மை உணர வைப்பது.
 இது நிச்சயாமாக சரவணன் சந்திரனாகவே தான் இருக்கும்.  ஏனெனில் அவருடைய முகநூல் பதிவுகளை நான் ஒன்று விடாமல் படித்துவிடுவேன். அதில் அவருடைய தொழில் முயற்சிகள், பயணங்கள் , தேடல்கள் என அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம்.
இதுபோல நாவலில் சரவணன் சொல்லியிருக்கக் கூடிய தகவல்கள் ஏராளம். நம்மைச் சுற்றி நாம் அறியாமல் திரை மறைவிலும் வெளிப்படையாகவும் இவ்வளவு விஷயங்கள் உலகில் நடக்கிறதா என்று பிரம்மிக்க வைப்பவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதின் நோக்கம் என்ன, எத்தனை தண்டனை கொடுத்தாலும் இந்த மரக் கடத்தலை ஏன் நிறுத்தவே முடியவில்லை, இவற்றை இறுதியாக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர் யார் என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள். இதுமட்டுமல்லாமல் காஃபி லூவாஃக் கொட்டைகள், பறவைக் கூடு சூப்  ,கடல் அட்டைகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் தெரியும். நீங்களும் வாசிக்கும் போது பிரம்மிப்பீர்கள். தைமூருக்கு தொழில் செய்வதற்கு வேறு நாட்டிலிருந்து செல்லும் எல்லாருமே அங்கிருக்கும் மக்களை மிக ஏளனத்தோடு தான் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்த்மட்டில் அவர்கள் அந்த தேசத்தை முன்னேற்ற வந்தவர்கள். அங்கிருக்கும் மக்களோ மூடர்கள், அறிவே இல்லாத கூட்டம். அந்த முட்டாள் மக்கள் கூட்டத்துக்கு கருணை கொண்டு வேலை வாய்ப்பு அளிக்கிறார்கள் என்ற மனநிலைதான் அவர்களிடம் உண்டு. இது தைமூரில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதே தான். நம்மையும் அப்படி ஒரு தொழிலதிபர் கூட்டம் இப்படி தானே நினைத்துக் கொண்டிருக்கும். நாமும் வேலை தருகிறார்கள்,சம்பளம் தருகிறார்கள் என்று மகிழ்கிறோம். ஆனால் நாட்டின் இயற்கை வளங்களை வேகமாக எப்படி அழித்து விடுகிறார்கள் என்பதையும் நம்மை யோசிக்க வைக்கிறது.
இந்நாவலில் சரவணன் காட்டியிருக்கும் முக்கியமான இன்னொன்று தொழிலில் மனிதர்களின் உறவு பற்றி. முக்கியமாக எத்தனை பெரிய நண்பர்கள் என்றாலும் கூட்டுத் தொழிலில் அவர்களால் அந்த நட்பை கொண்டு செல்ல முடிவதில்லை. எதாவது ஒரு புள்ளியில் விரிசல்கள் உண்டாகி விடுகிறது. அந்தப் புள்ளியும் மிக வேகமாகவே வந்துவிடுகிறது. தன்னுடைய இலாபம் கிடைத்தால் போதும் , அவன் என்ன ஆனால் என்று நாம் நினைக்கவில்லையென்றாலும், தொழில் அந்த நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது.

ஐந்து முதலைகளின் கதையில் பின்னடைவாக நான் நினைப்பது ஒன்றே ஒன்று தான். அது சரவணின் வார்த்தைத் தேர்வுகளின் பிரச்சனை. எளிதில் சரிசெய்து விடக் கூடியது தான். குடித்தேன், குடித்தோம், குடித்துக் கொண்டே இருந்தேன்,குடித்துக் கொண்டே இருந்தோம் என்று இந்தச் சொற்கள்  ஒவ்வொரு சில பக்கங்களுக்கும் பலமுறைகள் வந்து சலிப்படைய வைக்கிறது. அட போங்க பாஸ் என்று டென்ஷனாக்கி நம்மையும்  ஒரு ரவுண்டு அடிக்க வைத்துவிடுகிறது (சும்மா பேச்சுக்கு தானுங்க) .
இறுதியாக நான் ஏற்கனவே சொன்னது போல இந்த நாவல் நமக்குத் தருவது தன்னம்பிக்கையை தான். இறுதியான அத்தியாயங்களில் தன்னுடைய தோல்விகள் அவற்றைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையும் கடாசிவிட்டு,புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்ளும் கதாநாயகனின் மனவோட்டத்தை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் சரவணன். நம்பிக்கைதான் நம்மைச் செலுத்துகிறது. அதுதான் நம்மை வாழ வைக்கிறது. இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் நினைத்த எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்று நம்மை ஓட்டிச் செல்கிறது. அது இல்லையென்றால் எதுவுமே முடியாது. இந்நாவலில் தினேஷன் சொல்லுகிற ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது . “வாழ்க்கை ஒரு காட்டாறு போல இருக்கும்பட்சத்தில் அதில் மிதக்கும் தக்கையைப் போல உன்னுடைய எண்ணங்களை மாற்றிவிடு. ஒரே விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காதே. அதுவும் ஒரு அனுபவம் எனக் கடந்துவிடு”.

இது சரவணன் சந்திரனின் முதல் நாவல் என்பது ஆச்சரியமானது . ரோலக்ஸ் வாட்ச், அஜ்வா இரண்டும் ஆர்டர் செய்திருக்கிறேன். :) வாழ்த்துகள் சரவணன் ப்ரோ. :)

அசோக்ராஜ்
14-12-2017

Wednesday, 4 January 2017

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள்

நாம் தினம் தினம் காணுகிற,நம் பார்வைக்குத் தெரிகிற உலகம் வேறு, அதன் பின்னே கடினப் படுகிறவர்களின் ,போராடுகிறவர்களின்,புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களின் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் மிக ஆழமாய் உணர்ந்தேன். பிறர் செய்த தவறுகளால் தன் இளமையை ,மகிழ்ச்சியை, வயதை,சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டேன்.
பிறர் யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக இதை நான் எழுதித் தான் ஆக வேண்டும். இதை இங்கு சொல்லித் தான் என் மனப் பிறழ்வை போக்கிக் கொள்ள முடியும்.
நேற்றைக்கு முந்தைய நாள் அலுவலகம் முடித்து நானும் என் நண்பன் ஒருவனும் மதுரையிலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இரண்டு கட்டைப் பை நிறைய பொருட்களுடன் துணிகளுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த படிதான் வந்தார். மாலை குளிர் காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டே “இப்ப இருக்கிற குளிர எங்க தாங்க முடியுது. குளுரு அதிகமா இருக்குல” என்றார் மெதுவாக எங்களைப் பார்த்து. “ம்.ஆமா” என்றேன் . “இந்த போனுக்கு சார்ஜ் போடனும்யா. உங்கட்ட சார்ஜர் இருக்கா. நாகர்கோவில்ல அனாதை ஆஸ்டல்ல ஆயாவா இருக்கேன். சம்பளமே ஒழுங்கா தர மாட்றானுவ.  இங்க மதுரையில வீட்லயே தங்கி வீட்டு வேலையெல்லாம் பாக்குறியா னு ஒருத்தர் வர சொன்னாரு. அதான் அவர பாத்து என்னனு கேக்கலாம் னு வந்தேன்.இந்த ட்ரெய்னு திருநவேலி வர தான போகும்.  அங்க எறங்கனும்.திருநவேலில 3 மணிக்கு நாகர்கோயில் ட்ரெய்ன் வருமாம்” என்றார். பின் மெல்ல மெல்ல அந்தப் பாட்டி பேசிக் கொண்டே இருந்தார். அதைக் கவனித்தபோது ஒன்று புரிந்தது. அவர் ரொம்ப நாட்களாகவே யாரிடமும் மனம்விட்டுப் பேசவேயில்லை. எந்நேரமும் அமைதியாகவே தன் வாழ்க்கையின் நிலையை எண்ணி வருந்திக் கொண்டே இருந்திருக்கிறார். அந்தத் தனிமைதான் அவரை பேசவைத்தது, தன் கஷ்டங்களை யாரிடமாவாது வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் அடைய நினைப்பது தெரிந்தது.

”எனக்குன்னு பிள்ளைக கிடையாது. உங்கள என் புள்ளைகள மாதிரி தான் நினச்சு சொல்றேன். என் கஷ்டத்த யார்ட்ட சொல்றது” என்றார் எங்களைப் பார்த்து. 
செல்ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த நான் திடுக்கிட்டு அவர் பேசுவதை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.
“நான் வாழ்க்கைய எனக்காக வாழவே இல்லயா. என் அக்கா புள்ளைங்க, தங்கச்சி புள்ளைங்கள வளத்து ஆளாக்குனேன். ஆனா அதுகளே தான் என் நகையையும் பணத்தையும் வாங்கிக்கிட்டு விரட்டி விட்டுட்டாங்க. எங்களுக்கு ஊரு விருதுநகர் தான். எங்கப்பா அப்பவே வாத்தியார் வேலை பார்த்தவரு. எனக்கு சீக்கிரமா கல்யாணம் முடிக்கணும், நான் வசதியா வாழணும் னு அவரு நினச்சாரே தவிர எனக்கு வரவன் நல்லவானா இல்லையானு பாக்க தவறிட்டாரு. கல்யாணம் ஆன அன்னைக்கு இருட்டுனது தான் என் வாழ்க்க. இன்னைக்கு வரைக்கும் விடியவே இல்ல. எனக்கு வந்த புருஷன் எதுக்கும் உதவாதவன். எனக்குன்னு ஒரு ஊசி கூட அவன் வாங்கித் தந்தது இல்ல. என்ன செய்யிற, என்ன சாப்பிட்டனு ஆசையா ஒரு வார்த்தை கேட்டது இல்ல. தினம் குடிச்சிட்டு சாக்கடையெல்லாம் புரண்டு வருவாரு. அப்படி நாறும். அவர் கதவ தட்டுனா ,மெதுவா கதவ திறந்த உடனே ஒடிப் போய் போர்வய பொத்தி படுத்துக் கிட்டு அழுவேன். வேற என்ன செய்ய முடியும். எனக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் ஆனப்ப, 9 மாசம் கர்ப்பமா ஒரு பொம்பள எங்க வீட்ட தேடி வந்தா. எங்க மாமியர் அவகிட்ட என்னனு கேட்டப்ப ,என் வயித்தில இருக்குற குழந்தைக்கு உன் புள்ள தான் அப்பன் னு சொன்னா.  அப்ப எப்படி இருந்துருக்கும் தம்பி எனக்கு”
என்று சொல்லிவிட்டு தன் கண்ணீரை சேலை முனையால் துடைத்தார். எனக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. எந்த நொடியும் அழுதுவிடலாம் என்றிருந்தேன் அப்போது. அவர் தொடர்ந்தார்.
”தம்பி உங்கள ரொம்ப தொந்தரவு பண்றேனோ” என்றார்.
“அதெல்லாமில்ல. ” என்றேன் .
“என்ன அந்த ஆளு ஒரு நாளும் நிம்மதியா இருக்க விடல. என் மாமனார் மகராசன். அவர் மகன நான் திருத்திருவேன் னு நம்பி தான் என்னை எங்க அப்பாட்ட வந்து கேட்டாரு. எனக்குன்னு பேங்குல அப்பவே நிறைய பணமும் போட்டாரு. எங்க அப்பனும் ஒரு மோசக்கார ஆளு. என்கிட்ட என்னனே சொல்லாம ஒரு பேப்பரை மடக்கி வச்சு கையெழுத்து வாங்கி பேங்குல எங்க மாமனார் எனக்கு போட்ட பணத்தையெல்லாம் எங்கப்பா எடுத்துக்கிட்டாரு.அந்த விஷயம் எனக்கு ரொம்ப நாளைக்கு தெரியவே இல்ல. ஒரு நாள் கையில ஒரு பைசா இல்லாம நான் கஷ்டப் பட்டப்போ, பேங்குல பணம் இருக்குதுனு நியாபகம் வந்து அங்க போய் கேட்டேன். அக்கவுண்டுல அஞ்சு ருவா தான் இருந்துச்சு. எங்கப்பா செஞ்ச காரியம் அப்ப தான் தெரிஞ்சது. ஊட்டி ஸ்கூல் ஹாஸ்டல் ல  ஆயா வேலை இருக்கு வரியா னு கேட்டாங்க. அன்னைக்கு போனவ தான். இன்னைக்கு வரைக்கும் வீட்டுப் பக்கம் போகல. ஊருல எல்லாரும் என்ன ஆனாங்க என்ன ஆச்சுனு எதும் தெரியல. “ என்றார்.

கூரிய ஒரு கத்தியை என் தொண்டையில் சொருகியதைப் போல இருந்தது எனக்கு. அப்போது எனக்கு பேச்சே வரவேயில்லை. வைரமுத்துவின் ”கருவாச்சி” தான் எனக்கு நினைவுக்கு வந்தாள். சிறிய தடங்களோ, பிரச்சனை என்றாலோ சோர்ந்து விடுகிறோம். இவள் எப்படி இன்னும் தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறாள். இத்தனை நம்பிக்கை இவள் எங்கிருந்து பெற்றாள் என்று பிரம்மித்து நின்றேன். நியாயமாக அவள் இந்த சமூகத்தின் மீதும்,தனக்கு துரோகம் இழைத்தவர்களின் மீதும் கடுமையான கோபம் கொண்டிருக்க வேண்டும். அவர்களை தண்டித்திருக்க வேண்டும். ஆனா அடுத்து அந்தப் பாட்டி சொன்ன விஷயங்கள் இன்னும் எனக்கு பலமான அதிர்ச்சியை கொடுத்தது.

“என்ன ரெண்டவதா கல்யாணம் பண்ணிக்கோனு எல்லாரும் சொன்னாங்க தம்பி. ஆனா எனக்கு அதில விருப்பம் இல்ல. இந்த வாழ்க்கைல இவரு தான் எனக்குனு முடிவு செஞ்சுட்டேன். என் இளமையெல்லாம் வயசெல்லாம் இப்படி காணாம போயிருச்சு. என்ன செய்யிறதுயா. எனக்கு  யார் மேலையும் கோவம் இல்ல.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் னு நான் மூனாம் வகுப்புல படிச்ச பாட்டு. இன்னைக்கு வரைக்கும் அதுபடி தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு கஷ்டம் இருக்குனு நான் கடவுள் கிட்ட வருத்தப் பட்டதில்ல. எனக்கு எந்த நோயும் இல்ல,சாப்பாட்டுக்கு குறை இல்ல னு அல்லாவுக்கு தினமும் நன்றி தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். “

என்று சொல்லி பெருக்கெடுத்த கண்ணீரை மீண்டும் தன் சேலை முனையால் துடைத்தார். விருதுநகருக்கு அருகில் ரயில் வந்து சேர்ந்திருந்தது. அங்கிருந்து நானும் நண்பனும் எழுந்து கொண்டோம்.
நாங்கள் இறங்குகிற போது வாசல் வரை வந்து “இந்த விருதுநகர் என் ஊருதான். நான் வளந்தது இங்கதான். இங்க இருந்து ராத்திரிக்கு நாகர்கோவில் ரயில புடிக்கலாம். ஆனா எனக்கு மனசு ஒப்பல. இங்க ஒரு நிமிசம் உக்காந்தா பழைய நெனப்பு எல்லாம் மனசுக்குள்ள வரும். நாங்க வசதியா வாழ்ந்த ஊரு இது. பாத்து போயிட்டு வாங்க. உங்கள பிள்ளையா நினச்சு தான் எல்லாம் சொன்னேன். உங்கள தொந்தரவு செஞ்சுட்டேன் னு நினச்சுக்காதிங்க. ” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் இருக்கைக்கு போய் அமர்ந்து கொண்டார்.
அந்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் அந்தப் பாட்டியைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். கடல் அலை போல அந்த நினைவுகள் மனதை மோதிக் கொண்டே இருக்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று சொன்னதெல்லாம் பொய் எனத் தோன்றுகிறது இப்போது. ஏன் அந்தப் பாட்டிக்கு இப்படியெல்லாம்
நடந்தது . அவரின் இந்த நிலைக்காக மொத்த ஆண்களின் சார்பாக
அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. இப்படி என்னுடைய இளமையும் ஒரு நாள் தொலைந்து தூரமாகப் போகும், எனக்கும் இதே நிலைமை வருமே என்ற பயம் தோன்றியது.
இறுதியாக ஒன்று.
தங்கள் மகளுக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து ,அவள் ஒரு குழந்தையைப் பெற்றால் தான் தங்கள் கடமை முடியும்,அப்போது தான் நிம்மதி, அப்போது தான் சுற்றி இருக்கும் மனிதர்கள் தங்களை மதிப்பாக எண்ணுவார்கள் என்று இன்றும் நினைக்கிற பெற்றோர்களின் அறியாமையும் அவசரமும் தன் மகளை ஒரு பொருள் போல நினைத்து ,தான் என்ன சொன்னாலும் அவள் ஒப்புக் கொள்வாள் என்ற எண்ணமும்  இருக்கிற வரை இப்படியான கொடுமைகள் எல்லாம் பெண்களுக்கு நடந்து கொண்டே தான் இருக்கும்..

-அசோக்ராஜ்
05.01.2017
Wednesday, 18 November 2015

சதுரங்கத்தின் வரலாறு

நண்பர்கள் அனைவருக்கும் செஸ் விளையாடத் தெரியும் . மின்னல் வேகத்தில் நகர்த்தி எதிரில் உள்ளவரைத் திணறடிக்கத் தெரியும்.  ஆட்டத்தின் நுட்பமான விஷயங்கள் நன்றாகவே தெரியும் . ஆனால் செஸ் ஆட்டம் வளர்ந்து வந்த வரலாறு தெரியுமா? செஸ் ஆட்டத்தின் முன்னாள் ஜாம்பவான்களைப் பற்றி அறிவீர்களா ? உலகத்தில் நடந்த பிரபலமான செஸ் ஆட்டங்கள் பற்றி அறிந்ததுண்டா? இவை அனைத்தையுமே சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்கிறது ஆயிஷா நடராஜன் எழுதிய “ஒரு தோழனும் மூன்று 3 நண்பர்களும்” புத்தகம். இது சிறுவர்களுக்காக எழுதப் பட்ட சிறிய நாவல் தான். ஒரே கல்ப்பில் படித்து விடலாம். ஆனால் இது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது.
செஸ் ஆட்டம் மட்டுமல்லாது, பிரபலமான பல புத்தகங்கள் பற்றி, வரலாற்று நிகழ்வுகள் பற்றி என பிரம்மிக்க வைக்கிறது. ராகுல் ஜி என்ற சிறுவன் தான் கதையைச் சொல்கிறான். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் தான் கதைக்களம். அவனது குடும்பம் சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் செல்கிறது. அப்போது அவர்கள் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, சர்தார்ஜி என பல அறிவுஜீவி நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் கண்ணில் மெலிந்த ,ஏழ்மை நிலையில் ஒரு சிறுவன் தென்படுகிறான். அவன் பெயர் தான் தோழர். அவன் தான் கதாநாயகனும். அவன் குழந்தையாக இருந்தபோது பெற்றோர்களிடமிருந்து கயவர்களால் திருடப் பட்டவன். அந்த ரயில் தான் அவனுக்கு இருப்பிடமே. அங்கே இருக்கும் டி.டி.ஆருக்கும் பயணிகள் சிலருக்கும் ஏதாவது உதவிகளைச் செய்து கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவன்.  கொஞ்ச நேரத்திலேயே ராகுல்ஜி குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் தோழர் நண்பனாகி விடுகிறான். அப்போது தான் அந்த டிடிஆர் இவனைக் கொடுமைப்படுத்துவதையும் ,அடிமை போல வேலை வாங்குவதையும் சொல்லி அழுகிறான். அப்போது அவனை மீட்க ராகுல்ஜி யின் அப்பா டிடிஆரிடம் பேசியபோது அவன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தோழர் செஸ் ஆட்டத்தில் தன்னை ஜெயித்துவிட்டால் அவனை விட்டுவிடுவதாகச் சொல்கிறான். ஆனால் தோழருக்கு செஸ் விளையாட்டு பற்றி கொஞ்சமும் தெரியாது. சவாலை ஏற்ற ராகுல்ஜியின் அப்பா தோழருக்கு செஸ் கற்றுக் கொடுக்கிறார். இவர்களே எதிர்பாரா விதமாக தோழர் செஸ் ஆட்டத்தை படக்கென்று கற்றுக்கொண்டு ஜாம்பவான் போல விளையாடத் தொடங்குகிறான். கடைசியில் டிடிஆரை வீழ்த்தியும் விடுகிறான்.  இதுதான் கதைச் சுருக்கம்.

இதில் எங்கேயா சதுரங்கத்தின் வரலாறு வருது, கொல்லப் போறேன் என நீங்கள் கோபப்படுவது புரிகிறது :) . இவர்களின் உரையாடல்களுக்கு நடுவே தான் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, ராகுல்ஜியின் அப்பா எல்லோருமே செஸ்ஸின் வரலாறு, புத்தகங்கள் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல்கள் நம்மை பிரம்மிக்க வைக்கும். உதாரணமாக செஸ் ஆட்டத்தில் ராணிக்கு ஏன் அவ்வளவு பலம். செஸ் ஆட்டம் இந்தியாவில் தோன்றி சைனா, அரேபியாவுக்குப் பரவிய நாட்களில் சதுரங்கத்தில் ராணிக்கு இவ்வளவு பலம் கிடையாது. மந்திரி தான் பலம் வாய்ந்தவராக இருந்தார். இப்போது நாம் விளையாடும் சதுரங்க விதிகள் ஐரோப்பாவில் மாற்றப் பட்டவைதான். ஐரோப்பாவில் இங்கிலாந்து போன்ற அநேக நாடுகளில் ராணிகள் தான் அதிகாரங்கள் நிறைந்தவராக இருந்திருக்கின்றனர் . (எலிசபெத் ராணி போல). அதனால் ராணி மீது கொண்ட பற்றின் காரணமாக சதுரங்க ஆட்டத்திலும் ராணியை பலம் வாய்ந்தவராக விதிகளை மாற்றியிருக்கின்றனர். இதைப் போலவே நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் புத்தகத்தில் உள்ளன,

பெற்றோர்கள் சிறுவர்களுக்கு கதைப் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள் வாங்கித் தராதது பற்றிச் சொல்லியும் நடராஜன் பெற்றோர்களின் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போதைய பெற்றோர்கள் சிறுவர்களுக்கு புத்தகம் வாங்கித் தராமல் இல்லை. ஆனால் அவர்கள் வாங்கித்தரும் புத்த்கங்கள் “உங்கள் மகன் விஞ்ஞானியாக வேண்டுமா?” “உங்கள் மகன் டாக்டரகா வேண்டுமா?” போன்றவை தான். தன் மகன் பெரிய வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாங்கித் தரப் படு[பவை. கதைப் புத்தகங்கள் படித்தால் தன் மகன் ஒழுங்காகப் படிக்க மாட்டானோ எனப் பயந்து பெற்றோர்கள் சிறுவர்களை நூலகங்கள் பக்கம் அனுமதிப்பதேயில்லை. இதைப் பற்றி புத்தகத்தில் நடராஜன் விரிவாகப் பேசியிருக்கிறார்.
சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது என இந்த நூலைச் சொல்வேன். முக்கியமாக பெற்றோர்கள்.

-அசோக் ராஜ்

Tuesday, 22 September 2015

இதற்குத் தான் ஆசைப்பட்டாரா காமராஜர்???


முகநூலில்  காமராஜரின் பிறந்த தினத்திற்கான வாழ்த்துக்கள் எண்ணிக்கைற்றது . முகநூலில் இருக்கும் எல்லா தமிழர்களுமே , ஒரு பதிவையாவது  அன்று எழுதியிருப்பார்கள். நாம் காமராஜரின் கல்வித் திட்டங்களை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பது மட்டுமே போதுமானது தானா ? இதைத் தான் அவர் எதிர்பார்த்தாரா ? இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் ,நம் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் முறைகளையும் , கற்கும் முறைகளையும் பார்த்து , நிச்சயம் அழுதே விடுவார்.

இன்று பெரும்பாலான தமிழக பள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் தரும் கல்விப் பயிற்சி இதுதான் .

"இந்தக் கேள்வியை வீட்டுக்குப் போய் , பார்த்து ரெண்டு தடவ, பாக்காம ரெண்டு தடவ , எழுதிட்டு வா . நாளைக்கு செக் பண்ணுவேன் . எழுதலைனா அடிதான் விழும் "

புதிய கல்வித் திட்டங்களை காமராஜர் தொடங்கிய போது எவ்வளவோ கனவுகளைக் கண்டிருப்பார் . தமிழகம் கல்வியில் உலகின் முன்னோடியாகத் திகழும் என நினைத்திருப்பார் . ஆனால் துரதிர்ஷ்டம் , அவர் கண்ட கனவு முற்றிலும் அழிந்துபோய் விட்டது. இன்று பத்தாம் வகுப்பு , 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் என்பது மாணவர்களின் நலனுக்காக நடக்கிறது என என்னால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை . இந்தத் தேர்வுகள் பெற்றோர்கள் மத்தியிலான ஒரு நிழல் யுத்தம் . அவர்களின் யுத்தத்தில் மாணவர்களை பகடைக் காய்களாக உபயோகப் படுத்துகின்றனர் . பத்தாம் வகுப்பு எழுதும் ஒரு சிறுவனுக்கு 15 வயது இருக்கும் . அவனுக்கு 15 வருடங்களாக , வருடம் ஒருமுறை பிறந்த தினம் வருகிறது . ஆனால் எந்தவொரு உறவினருமே ஒரு பிறந்த நாளுக்கு கூட தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் . அது அவர்களுக்குத் தோன்றாது . ஆனால் தேர்வு மதிப்பெண்கள் வந்துவிட்டால் போதும் , இதுவரை யாரென்று தெரியாத உறவினர்கள் எல்லாம் வரிசையாக அழைத்து மதிப்பெண் கேட்கிறார்கள் . நம் மதிப்பெண்களில் அவர்களுக்கென்ன அப்படியொரு அக்கறை. இதில் அக்கறையென எதுவுமே கிடையாது . எல்லாமே சுயநலம் தான் .அவர்களின் மனவோட்டம் இதுதான் .

"என் மகன் 435 மார்க் வாங்கியிருந்தான் . அவன் மகன் எவ்வளவு வாங்கியிருப்பான் . நம் மகனை விட அதிகம் வாங்கியிருப்பானோ "

அல்லது "நம்ம பையன் அடுத்த வருசம் 10 th . இவன் மகனை விட நிச்சயம் அதிக மார்க் வாங்க வச்சுரனும் . இப்போவே நல்ல ட்யூசன்ல சேத்துரனும் "

இவைதான் நிதர்சனம் . வருத்தமாக இருக்கிறது . பெரும்பாலான பெற்றோர்கள் தொலைபேசியில் அழைத்து மதிப்பெண்களைக் கேட்பதன் காரணம் இதுதான் . ஏன் இதெல்லாம் ?. உங்கள் தேவையில்லாத சண்டைகளுக்காக பிள்ளைகளை ஏன் வதைக்கிறீர்கள் .

பகல் முழுவதும் ஆசிரியர்களின் மிரட்டல்களினால் நொந்து போன சிறுவர்களால் , வீட்டிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை . அவர்கள் பள்ளிவிட்டு வந்ததும் அவசரமாக உணவை அள்ளித் திணித்து,

"அடேய் ! மணி 5 ஆச்சு.நேரமாயிருச்சு .ஓடுறா டியூசனுக்கு ."

டியூசனிலாவது சிறந்த முறையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப் படுகிறதா ? அங்கும் அதே அரைத்த மாவு தான் . "பார்த்து ஒரு தடவ . பாக்காம ஒரு தடவ எழுதனும் ".

சிறைச்சாலைகளை விட மோசமானது இந்த டியூசன் வகுப்புகள் . இவர்களுக்கு முதல் தேதியில் Fees கொடுத்துவிட்டால் போதும் . மாணவர்களை மூன்று மணிநேரம் சும்மா உட்கார வைத்து, அடித்து அனுப்பிவிடுகிறார்கள்.

சீனாவில் , மாணவர்களை விட ஆசிரியர்கள் தான் அதிகம் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள் என ஒரு செய்தியில் படித்தேன் . ஏனெனில் கற்றுக் கொடுப்பவருக்கு , கற்பது தான் அவசியமானது. ஆனால் நம் ஆசிரியர்களோ , அவர்கள் கல்லூரியோடு படிப்பதையும் வாசிப்பதையும் நிறுத்தி விடுகின்றனர் . மாணவர்களை மிரட்டி ,பயம் கொள்ள வைப்பதற்காக மட்டுமே தினம் பள்ளிக்கு வருகின்றனர். அடச்செய் !!!!

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு முக்கியப் பிரச்சினை . ஒரு குழந்தை பிறந்த மூன்றே ஆண்டுகளில் , ஒரு மொழியின் சகல வார்த்தைகளையும் கற்றுக் கொள்கிறது . ஆனால் பள்ளியில் 12 வருடங்களாக ஆங்கிலம் படிக்கும் மாணவர்களால் ஏன் இந்த ஆங்கிலத்தை நன்றாக கற்று ,சரளமாக அதில் உரையாடவோ எழுதவோ முடிவதில்லை . ஏனெனில் , நம் வரையில் ஆங்கிலம் என்பது மதிப்பெண்களைக் குவிப்பதற்கான ஒரு கருவி. அதைப் புரிந்து படிப்பதெல்லாம் அவசியமில்லாதது என நினைக்கின்றனர். ஆங்கிலத்தில் தான் படிக்கிறோம் . ஆனால் ஆங்கிலம் தெரியாது. இதைவிட அவல நிலை ஏதும் உண்டா ?

எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிற புத்தகங்களை வாசிக்க அனுமதிக்கிறார்கள் ? எந்த பெற்றோர் பிள்ளைகளை விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர் ? சரி, எந்த பெற்றோர் சிறுவர்களை செய்தித் தாளையாவது வாசிக்கச் சொல்கிறார்கள்.

கேட்டால் " புத்தகம் படித்தால் அவன் கவனம் சிதறி விடும் . அப்புறம் நல்ல மார்க் வாங்க முடியாது ".

என்ன சொல்லி இவர்களைத் திருத்துவதெனத் தெரியவில்லை . இன்று கல்வித் திட்டங்களுக்காக செலவு செய்யப்படும் அத்தனை பணமும் , எந்தவொரு பயனையும் அடையாமலே போய்விடுகிறது.
காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினம் என கொண்டாடுகிறோம். ஆனால் கல்வியென்பது சிறிதும் வளர்ச்சியடையாமல் குழியில் தான் கிடக்கிறது . காமராஜரின் கல்வித் திட்டங்களை புகழும் நாம்  அதை சரியான முறையில் பின்பற்றுகிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியதும், பெற்றோர்கள் மாற வேண்டியதும் , மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டியதும் அவசியமானது , அத்தியாவசியமானது.

~அசோக் ராஜ்
 
 

என் இளமை நாட்கள்- ஜவஹர்லால் நேருநேரு எழுதிய ”என் இளமை நாட்கள்” புத்தகம் படித்தேன். உண்மையில் அற்புதமானது. சத்திய சோதனை போலவே .ஆனால் இது அளவில் மிகச் சிறிய புத்தகம். காந்தியைப் போலவே எந்த இடத்திலும் நேரு தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதவில்லை. அதுபோல தன்னைப் பற்றிய செய்திகளையே அவர் அதிகம் எழுதவில்லை. தன் தந்தை மோதிலால் நேருவைப் பற்றி விரிவாக, அவரது அத்தனை குணங்களையும் சொல்லியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் பற்றியும், வீரர்களில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இருந்த மன வேறுபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.நேருவின் தந்தை மோதிலால் நேரு முதலில் தீவிரவாதிகளின் மீது ஆர்வம் செலுத்தியிருக்கிறார் , ஆனால் தீவிரவாதத்தின் மூலம் நீண்டகால பலன் எதுவும் கிடைக்காது என உணர்ந்து கொண்டவர் மிதவாதத்துக்கு ஆதரவாளரானார். ஜவகர்லால் நேரு பள்ளியிலும் கல்லூரியிலும் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கக் கூடியவராக இருக்கவில்லை. எப்போதுமே உலகில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார். தான் படித்த செய்திகளை நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறார். நேருவிற்கு படித்து முடித்தவுடன் ICS(Indian Civil Service) அதிகாரியாகும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் தந்தை மோதிலால் அதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் ICS அதிகாரியானால் ,தன் அன்பு மகன் தன்னை விட்டு வெகு தூரம் பிரிந்து சென்று வேலை பார்க்க நேரிடலாம் .அவனை வெகுகாலம் தன்னால் பிரிந்திருக்க முடியாது .அதனால் அவனுக்கு அந்த வேலை வேண்டாம் என முடிவு செய்தார் மோதிலால். தந்தையின் முடிவை ஏற்றுக் கொண்ட நேரு ,பின் சட்டத்துறையில் பாரிஸ்டர் ஆனார். அதுவும் நல்லதே . இதன்மூலம் தான் நேருவுக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் ஆர்வம் வந்திருக்கிறது. ஒருவேளை ICS அதிகாரி ஆகியிருந்தால் ,சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் ஏற்படாமல் போயிருக்கக்கூடும். முக்கியமாக சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தலைமை எத்தனை வலிமையானது என்பதையும் நாம் இந்த புத்தகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். காந்தியைப் பொருத்தவரையில் சுதந்திரத்தை வெள்ளையர்களை தாக்கி அழிப்பதின் மூலம் பெற்றுவிட முடியாது. அவர்களின் மூளையில் உள்ள ஆணவத்தை அழிக்க வேண்டும். அதற்கு ஆயுதங்கள் தேவையில்லை. அஹிம்சை அவசியம், ஒத்துழையாமை அவசியம் ,அதைவிட பொறுமை அவசியம். காந்தியின் கடிதம் எழுதும் முறையைப் பற்றி நேரு இப்படி விவரிக்கிறார் நேரு.

”நாம் வெள்ளையர்களுக்கு நம் கோரிக்கைகளை கடிதம் எழுதுபோது தேவையற்ற வீண் அழகுச் சொற்கள் , வாக்கியங்கள் கூடாது. நம் கோரிக்கையை நேர்மையுடன், சுருக்கமாக ,அழுத்தமாக எழுதிட வேண்டும். பின் நம் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை போராடுவதை விடக்கூடாது. உயிரே போனாலும் சரி.அதுதான் முக்கியம்”

ஆர்.சி.சம்பத் அருமையாக புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
 
 

சந்திர பாபு - முகில்

முகில் எழுதிய சந்திரபாபு "கண்ணீரும் புன்னகையும்" படித்தேன். இதை வாழ்க்கை வரலாறு என்று சொல்வதை விட,மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகமாக் கொள்ளலாம். முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது , முகில் அவர்களின் எழுத்து நடை. அது சந்திரபாபுவின் வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிக அழுத்தத்துடன் நமக்குச் சொல்கிறது. சந்திரபாபு என்னை ரொம்பவே பாதித்துவிட்டார்.இதைப் படிக்கும் முன்வரை , அவர் ஒரு காமெடி நடிகனாக மட்டுமே எனக்கு அறிமுகம்.ஆனால் அவர் செய்த நகைச்சுவைகளுக்குப் பின் உள்ள வலிகள் அதிகம் . உணவு இல்லாத நாட்கள் , உறக்கம் இல்லாத இரவுகள் அவர் வாழ்வில் ஏராளம். சந்திரபாபு எந்தத்
தோல்விக்காகவும் தேங்கிவிட்டதே கிடையாது. "போனால் போகட்டும் போடா" எனச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைத் துவங்கிவிடுவார். ஒருவரைப் பற்றி பிறரிடம் குறை பேச அவருக்குத் தெரியாது.ஏனெனில் நேரடியாக அந்த நபரிடமே சென்று அதைச் சொல்லிவிடுவார் . அதுதான் சந்திரபாபு ஸ்டைல் . பொய் சொல்லத் தெரியாத சந்திரபாபு , எதிரியாக இருந்தாலும் , அவனுக்குத் திறமை இருந்தால் பாய்ந்து சென்று முத்தமிடும் சந்திரபாபு , நன்றி மறக்காத சந்திரபாபு, யாருக்காவும் கனவுகளை விட்டுத்தராத சந்திரபாபு , சிறிய விஷயமானாலும் மிகச் சிறப்பாக செய்து முடிக்கும் சந்திரபாபு , நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத சந்திரபாபு ,யாருக்கும் அஞ்சாத சந்திரபாபு . மொத்தத்தில் சினிமாவுக்காக வாழ்க்கை முழுவதும் உழைத்துவிட்டு , விளம்பரம் காட்டிக் கொள்ளாமல் நம்மைப் பிரிந்து விட்ட சந்திரபாபு. சந்திரபாபு இறந்தபோது , M.S.விஸ்வநாதனும் , சிவாஜி கணேசனும் அழுத காட்சிகள் ரொம்பவே அழுத்தமானது . சந்திரபாபுவின் வாழ்க்கை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது. காணாமல் போன அந்தக் கலைஞனை , மிகக் கடினப்பட்டுச் சேகரித்து தொகுத்திருக்கிறார் முகில் . இதில் ஆச்சரியம் , இது முகிலுடைய முதல் புத்தகம். ஆனால் படிக்கும்போது அப்படித் தோன்றவேயில்லை .இளைஞர் என்றாலும் ,அனுபவம் மிக்க எழுத்து அவருடையது .திரைப்படத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் மட்டுமல்ல , அனைவருமே அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

~அசோக் ராஜ்.

 

ஆலன் டூரின் - கடித்த ஆப்பிள்

இன்று ஆப்பிள் நிறுவனம் கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக(LOGO) கொண்டிருப்பதன் காரணம் இவர் தான் . இவர் பிரிட்டனைச் சேர்ந்த கணிதவியல் ஆராய்ச்சியாளர் ஆலன் டூரின் . ஆலன் கணினி பொறியியலிலும் மிகச்சிறந்து விளங்கியவர் . சென்ற நூற்றாண்டில் கணினிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் . இரண்டாம் உலகப்போரின் போது இவர் தான் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் . ஜெர்மன் நாஜிப் படைகள் தங்களுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த செய்திகளை நடுவிலேயே வழிமறித்து , அதை DECODE செய்தார் ஆலன். ஆனால் DECODE செய்வதென்பது எளிதான வேலை அல்ல. அதற்கு மிகச்சிறந்த கணித , அறிவியல் அறிவு தேவை. ஆலனிடம் அது இயல்பாக இருந்தது. நாஜிக்களின் செய்தியை DECODE செய்ததன் மூலம் , அடுத்து பிரிட்டனின் எந்தப் பகுதியைத் தாக்குவதற்கு ஹிட்லர் திட்டமிடுகிறார் என்ற ரகசிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது . அதன்மூலம் பல பிரிட்டன் மக்களின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால் இத்தகைய சாதனை செய்த ஆலன் டூரினுக்கு வரலாறு வேறு விதமாக வாழ்க்கையை அமைத்து விட்டது. அப்போது பிரிட்டனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் . அப்போது ஆலனும் ஓரினச்சேர்க்கையாளர் தான் என்ற சந்தேகம் ஏற்பட்டு, பிரிட்டன் அரசு அவரை சிறையில் தள்ளியது . ஆனால் அவர் செய்த மாபெரும் சாதனைகளை மறந்து அவருக்கு தண்டனை கொடுத்தனர் . அவமானத்தால் மனமுடைந்து போனார் ஆலன்.நஞ்சை ஒரு ஆப்பிளுக்குள் செலுத்தி , அப்பகுதியை கடித்து உண்டு தற்கொலை செய்து கொண்டார் . ஆனால் அவருடைய சாதனையை மறக்க முடியுமா ? ஆலனின் கம்ப்யூட்டர் திறமையினால் ஈர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ் . அதனால் தான் தன்னுடைய ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக வைத்து , ஆலனை எப்போதும் நினைவு படுத்துகிறார் .

~அசோக் ராஜ் .

From Steve jobs biography by Walter issacson.