ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள்
நாம் தினம் தினம் காணுகிற,நம் பார்வைக்குத் தெரிகிற உலகம் வேறு, அதன் பின்னே கடினப் படுகிறவர்களின் ,போராடுகிறவர்களின்,புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களின் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் மிக ஆழமாய் உணர்ந்தேன். பிறர் செய்த தவறுகளால் தன் இளமையை ,மகிழ்ச்சியை, வயதை,சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டேன். பிறர் யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக இதை நான் எழுதித் தான் ஆக வேண்டும். இதை இங்கு சொல்லித் தான் என் மனப் பிறழ்வை போக்கிக் கொள்ள முடியும். நேற்றைக்கு முந்தைய நாள் அலுவலகம் முடித்து நானும் என் நண்பன் ஒருவனும் மதுரையிலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இரண்டு கட்டைப் பை நிறைய பொருட்களுடன் துணிகளுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த படிதான் வந்தார். மாலை குளிர் காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டே “இப்ப இருக்கிற குளிர எங்க தாங்க முடியுது. குளுரு அதிகமா இருக்குல” என்றார் மெதுவாக எங்களைப் பார்த்து...