ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள்

நாம் தினம் தினம் காணுகிற,நம் பார்வைக்குத் தெரிகிற உலகம் வேறு, அதன் பின்னே கடினப் படுகிறவர்களின் ,போராடுகிறவர்களின்,புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களின் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் மிக ஆழமாய் உணர்ந்தேன். பிறர் செய்த தவறுகளால் தன் இளமையை ,மகிழ்ச்சியை, வயதை,சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டேன்.
பிறர் யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக இதை நான் எழுதித் தான் ஆக வேண்டும். இதை இங்கு சொல்லித் தான் என் மனப் பிறழ்வை போக்கிக் கொள்ள முடியும்.
நேற்றைக்கு முந்தைய நாள் அலுவலகம் முடித்து நானும் என் நண்பன் ஒருவனும் மதுரையிலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இரண்டு கட்டைப் பை நிறைய பொருட்களுடன் துணிகளுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த படிதான் வந்தார். மாலை குளிர் காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டே “இப்ப இருக்கிற குளிர எங்க தாங்க முடியுது. குளுரு அதிகமா இருக்குல” என்றார் மெதுவாக எங்களைப் பார்த்து. “ம்.ஆமா” என்றேன் . “இந்த போனுக்கு சார்ஜ் போடனும்யா. உங்கட்ட சார்ஜர் இருக்கா. நாகர்கோவில்ல அனாதை ஆஸ்டல்ல ஆயாவா இருக்கேன். சம்பளமே ஒழுங்கா தர மாட்றானுவ.  இங்க மதுரையில வீட்லயே தங்கி வீட்டு வேலையெல்லாம் பாக்குறியா னு ஒருத்தர் வர சொன்னாரு. அதான் அவர பாத்து என்னனு கேக்கலாம் னு வந்தேன்.இந்த ட்ரெய்னு திருநவேலி வர தான போகும்.  அங்க எறங்கனும்.திருநவேலில 3 மணிக்கு நாகர்கோயில் ட்ரெய்ன் வருமாம்” என்றார். பின் மெல்ல மெல்ல அந்தப் பாட்டி பேசிக் கொண்டே இருந்தார். அதைக் கவனித்தபோது ஒன்று புரிந்தது. அவர் ரொம்ப நாட்களாகவே யாரிடமும் மனம்விட்டுப் பேசவேயில்லை. எந்நேரமும் அமைதியாகவே தன் வாழ்க்கையின் நிலையை எண்ணி வருந்திக் கொண்டே இருந்திருக்கிறார். அந்தத் தனிமைதான் அவரை பேசவைத்தது, தன் கஷ்டங்களை யாரிடமாவாது வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் அடைய நினைப்பது தெரிந்தது.

”எனக்குன்னு பிள்ளைக கிடையாது. உங்கள என் புள்ளைகள மாதிரி தான் நினச்சு சொல்றேன். என் கஷ்டத்த யார்ட்ட சொல்றது” என்றார் எங்களைப் பார்த்து. 
செல்ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த நான் திடுக்கிட்டு அவர் பேசுவதை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.
“நான் வாழ்க்கைய எனக்காக வாழவே இல்லயா. என் அக்கா புள்ளைங்க, தங்கச்சி புள்ளைங்கள வளத்து ஆளாக்குனேன். ஆனா அதுகளே தான் என் நகையையும் பணத்தையும் வாங்கிக்கிட்டு விரட்டி விட்டுட்டாங்க. எங்களுக்கு ஊரு விருதுநகர் தான். எங்கப்பா அப்பவே வாத்தியார் வேலை பார்த்தவரு. எனக்கு சீக்கிரமா கல்யாணம் முடிக்கணும், நான் வசதியா வாழணும் னு அவரு நினச்சாரே தவிர எனக்கு வரவன் நல்லவானா இல்லையானு பாக்க தவறிட்டாரு. கல்யாணம் ஆன அன்னைக்கு இருட்டுனது தான் என் வாழ்க்க. இன்னைக்கு வரைக்கும் விடியவே இல்ல. எனக்கு வந்த புருஷன் எதுக்கும் உதவாதவன். எனக்குன்னு ஒரு ஊசி கூட அவன் வாங்கித் தந்தது இல்ல. என்ன செய்யிற, என்ன சாப்பிட்டனு ஆசையா ஒரு வார்த்தை கேட்டது இல்ல. தினம் குடிச்சிட்டு சாக்கடையெல்லாம் புரண்டு வருவாரு. அப்படி நாறும். அவர் கதவ தட்டுனா ,மெதுவா கதவ திறந்த உடனே ஒடிப் போய் போர்வய பொத்தி படுத்துக் கிட்டு அழுவேன். வேற என்ன செய்ய முடியும். எனக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் ஆனப்ப, 9 மாசம் கர்ப்பமா ஒரு பொம்பள எங்க வீட்ட தேடி வந்தா. எங்க மாமியர் அவகிட்ட என்னனு கேட்டப்ப ,என் வயித்தில இருக்குற குழந்தைக்கு உன் புள்ள தான் அப்பன் னு சொன்னா.  அப்ப எப்படி இருந்துருக்கும் தம்பி எனக்கு”
என்று சொல்லிவிட்டு தன் கண்ணீரை சேலை முனையால் துடைத்தார். எனக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. எந்த நொடியும் அழுதுவிடலாம் என்றிருந்தேன் அப்போது. அவர் தொடர்ந்தார்.
”தம்பி உங்கள ரொம்ப தொந்தரவு பண்றேனோ” என்றார்.
“அதெல்லாமில்ல. ” என்றேன் .
“என்ன அந்த ஆளு ஒரு நாளும் நிம்மதியா இருக்க விடல. என் மாமனார் மகராசன். அவர் மகன நான் திருத்திருவேன் னு நம்பி தான் என்னை எங்க அப்பாட்ட வந்து கேட்டாரு. எனக்குன்னு பேங்குல அப்பவே நிறைய பணமும் போட்டாரு. எங்க அப்பனும் ஒரு மோசக்கார ஆளு. என்கிட்ட என்னனே சொல்லாம ஒரு பேப்பரை மடக்கி வச்சு கையெழுத்து வாங்கி பேங்குல எங்க மாமனார் எனக்கு போட்ட பணத்தையெல்லாம் எங்கப்பா எடுத்துக்கிட்டாரு.அந்த விஷயம் எனக்கு ரொம்ப நாளைக்கு தெரியவே இல்ல. ஒரு நாள் கையில ஒரு பைசா இல்லாம நான் கஷ்டப் பட்டப்போ, பேங்குல பணம் இருக்குதுனு நியாபகம் வந்து அங்க போய் கேட்டேன். அக்கவுண்டுல அஞ்சு ருவா தான் இருந்துச்சு. எங்கப்பா செஞ்ச காரியம் அப்ப தான் தெரிஞ்சது. ஊட்டி ஸ்கூல் ஹாஸ்டல் ல  ஆயா வேலை இருக்கு வரியா னு கேட்டாங்க. அன்னைக்கு போனவ தான். இன்னைக்கு வரைக்கும் வீட்டுப் பக்கம் போகல. ஊருல எல்லாரும் என்ன ஆனாங்க என்ன ஆச்சுனு எதும் தெரியல. “ என்றார்.

கூரிய ஒரு கத்தியை என் தொண்டையில் சொருகியதைப் போல இருந்தது எனக்கு. அப்போது எனக்கு பேச்சே வரவேயில்லை. வைரமுத்துவின் ”கருவாச்சி” தான் எனக்கு நினைவுக்கு வந்தாள். சிறிய தடங்களோ, பிரச்சனை என்றாலோ சோர்ந்து விடுகிறோம். இவள் எப்படி இன்னும் தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறாள். இத்தனை நம்பிக்கை இவள் எங்கிருந்து பெற்றாள் என்று பிரம்மித்து நின்றேன். நியாயமாக அவள் இந்த சமூகத்தின் மீதும்,தனக்கு துரோகம் இழைத்தவர்களின் மீதும் கடுமையான கோபம் கொண்டிருக்க வேண்டும். அவர்களை தண்டித்திருக்க வேண்டும். ஆனா அடுத்து அந்தப் பாட்டி சொன்ன விஷயங்கள் இன்னும் எனக்கு பலமான அதிர்ச்சியை கொடுத்தது.

“என்ன ரெண்டவதா கல்யாணம் பண்ணிக்கோனு எல்லாரும் சொன்னாங்க தம்பி. ஆனா எனக்கு அதில விருப்பம் இல்ல. இந்த வாழ்க்கைல இவரு தான் எனக்குனு முடிவு செஞ்சுட்டேன். என் இளமையெல்லாம் வயசெல்லாம் இப்படி காணாம போயிருச்சு. என்ன செய்யிறதுயா. எனக்கு  யார் மேலையும் கோவம் இல்ல.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் னு நான் மூனாம் வகுப்புல படிச்ச பாட்டு. இன்னைக்கு வரைக்கும் அதுபடி தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு கஷ்டம் இருக்குனு நான் கடவுள் கிட்ட வருத்தப் பட்டதில்ல. எனக்கு எந்த நோயும் இல்ல,சாப்பாட்டுக்கு குறை இல்ல னு அல்லாவுக்கு தினமும் நன்றி தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். “

என்று சொல்லி பெருக்கெடுத்த கண்ணீரை மீண்டும் தன் சேலை முனையால் துடைத்தார். விருதுநகருக்கு அருகில் ரயில் வந்து சேர்ந்திருந்தது. அங்கிருந்து நானும் நண்பனும் எழுந்து கொண்டோம்.
நாங்கள் இறங்குகிற போது வாசல் வரை வந்து “இந்த விருதுநகர் என் ஊருதான். நான் வளந்தது இங்கதான். இங்க இருந்து ராத்திரிக்கு நாகர்கோவில் ரயில புடிக்கலாம். ஆனா எனக்கு மனசு ஒப்பல. இங்க ஒரு நிமிசம் உக்காந்தா பழைய நெனப்பு எல்லாம் மனசுக்குள்ள வரும். நாங்க வசதியா வாழ்ந்த ஊரு இது. பாத்து போயிட்டு வாங்க. உங்கள பிள்ளையா நினச்சு தான் எல்லாம் சொன்னேன். உங்கள தொந்தரவு செஞ்சுட்டேன் னு நினச்சுக்காதிங்க. ” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் இருக்கைக்கு போய் அமர்ந்து கொண்டார்.
அந்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் அந்தப் பாட்டியைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். கடல் அலை போல அந்த நினைவுகள் மனதை மோதிக் கொண்டே இருக்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று சொன்னதெல்லாம் பொய் எனத் தோன்றுகிறது இப்போது. ஏன் அந்தப் பாட்டிக்கு இப்படியெல்லாம்
நடந்தது . அவரின் இந்த நிலைக்காக மொத்த ஆண்களின் சார்பாக
அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. இப்படி என்னுடைய இளமையும் ஒரு நாள் தொலைந்து தூரமாகப் போகும், எனக்கும் இதே நிலைமை வருமே என்ற பயம் தோன்றியது.
இறுதியாக ஒன்று.
தங்கள் மகளுக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து ,அவள் ஒரு குழந்தையைப் பெற்றால் தான் தங்கள் கடமை முடியும்,அப்போது தான் நிம்மதி, அப்போது தான் சுற்றி இருக்கும் மனிதர்கள் தங்களை மதிப்பாக எண்ணுவார்கள் என்று இன்றும் நினைக்கிற பெற்றோர்களின் அறியாமையும் அவசரமும் தன் மகளை ஒரு பொருள் போல நினைத்து ,தான் என்ன சொன்னாலும் அவள் ஒப்புக் கொள்வாள் என்ற எண்ணமும்  இருக்கிற வரை இப்படியான கொடுமைகள் எல்லாம் பெண்களுக்கு நடந்து கொண்டே தான் இருக்கும்..

-அசோக்ராஜ்
05.01.2017








Comments

  1. வாழ்க்கையை ஒரு நெறிமுறையோடு நகர்த்திய அவளுக்கு ஒரு பெரிய வணக்கம்....!
    அவளுக்கு பிள்ளை வரம் கிடைக்காததே பெரிய அடி....
    ஆண்களாள் ஏமாற்றம் அடைந்த்து என்னமோ போன ஜென்ம பாவம்....
    ஆயா வேலை பார்த்த பின்...அதே பணிப்பாசத்தில் உன்னிடமும் அக்கறை காட்டியது நிதர்சனம்
    என்ன சொல்ல அவளை பற்றி
    வாழ்வை முடித்துவிட்டாள்....
    இறைவனிடம் வேண்டுவது ஓன்று மட்டுமே
    இயற்கை மரணம் வரட்டும்
    நிம்மதியாக போகட்டும்...

    படித்த பிறகு உன்னுடைய மனசிதைவு என்னையும் சிதைத்தது ....

    அருமையான பதிவு...

    ReplyDelete
  2. மனம் மிகவும் பாரமாக இருக்கிறது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182