AI எனும் ஏழாம் அறிவு





 AI செயலிகளின் அசாத்திய திறன் மீதான பிரம்மிப்பும், அவை மனிதர்களின் வேலையை பிடுங்கிக் கொண்டு துரத்தியடிக்கும் என்ற பயமும் ஒரு சேர நம்மை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டம். இப்படியான சூழலில் தமிழில் AI குறித்து வந்திருக்கும் முக்கியமான புத்தகம் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய “AI எனும் ஏழாம் அறிவு” புத்தகம். ஏஐ யின் ஆரம்பகட்டம் ,அத்துறையில் உண்டான படிப்படியான முன்னேற்றங்கள், அதன் இன்றைய அசுரப் பாய்ச்சல் என எல்லாவற்றையும் விரிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாகவும் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.


இரண்டாம் உலகப் போரில் இருந்து இப்புத்தகம் துவங்குவது நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் அளிக்கலாம்.ஆனால் அது அப்படித்தான் துவங்கியிருக்க வேண்டுமென புத்தகத்தை வாசிக்கிற போது புரிந்து கொள்ள முடியும். அப்போரில் தான் AIக்கான முதல் விதை ஆலன் டூரிங்கால் போடப்பட்டது. ஆனால் அதற்கு ஆலன் டூரிங் சந்தித்த இடர்களும் சவால்களும் ரொம்பவே அதிகம். போரின் போது படைகளுக்கு செய்திகளை அனுப்ப புது முறையை கையாள்கிறது ஹிட்லரின் ஜெர்மானிய ராணுவம். அதற்காக எனிக்மா என்னும் இயந்திரத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் அனுப்புகிற செய்தி என்க்ரிப்ட் செய்யப்பட்டு வேறு வடிவத்திற்கு மாற்றப்படும். அதைப் பெற்றுக் கொள்கிற இன்னொரு ஜெர்மானிய படை அதே எனிக்மா மூலம் அதை டீக்ரிப்ட் செய்து உண்மையான செய்தியை படித்துக் கொள்வார்கள். இதன்மூலம் எதிரிநாட்டுப்படை அச்செய்தியை இடைமறித்தால் அது அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனால் ஜெர்மனியின் தாக்குதல் திட்டங்கள் மிகுந்த ரகசியத்துடன் செயல்படுத்தப் படும். தாக்குதல் நடக்கவிருக்கிறதைப் பற்றி சிறிதும் அறியாத நேச நாட்டுப் படைகளை ஜெர்மனி துவம்சம் செய்தது. அப்படியான நேரத்தில் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் டூரிங் மிகக் குறைந்த காலத்தில் , ஜெர்மனியின் செய்திகளை டீக்ரிப்ட் செய்கிற இயந்திரதை கண்டுபிடிக்கிறார். அச்செய்தியின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து ஊண்மையான தகவலைக் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு பல நூறு வருடங்கள் ஆகியிருக்கும். அதற்குள் ஜெர்மனி ராணுவம் தன் பேயாட்டத்தை முடித்திருக்கும். ஆனால் டூரிங் அச்செய்தியை உடைக்கிற கருவியை உருவாக்குகிறார். மனிதர்களால் செய்ய இயலாத அசாத்தியமானவற்றை இயந்திரங்களை கொண்டு எளிதில் தானியக்கமாக செய்ய வைக்க முடியும் என நிறுவப்பட்டது. டூரிங் இல்லையென்றால் ஹிட்லர் மொத்த ஐரோப்பாவையும் விழுங்கியிருக்கலாம். உயிரிழப்புகள் இன்னும் பல மடங்காகியிருக்கலாம். ஆனால் டூரிங்கின் அந்த தானியங்கி இயந்திரம் மொத்த உலகையும் அன்று காத்தது. 


அந்த இடத்திலிருந்துதான் இயந்திரங்களை தானியக்கமாக பணிகளைச் செய்வதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின. அதற்கடுத்து அத்துறையில்  ஏற்பட்ட முன்னேற்றங்களை ஆழமாகவும் விரிவாகவும் சொல்லிச் செல்கிறார்.


AIயில் மிகப் பெரிய பாய்ச்சல் 90களின் நடக்கிறது. செஸ் விளையாடும் டீப் ப்ளூ என்ற கணிணியை ஐபிஎம் உடன் இணைந்து மூன்று இளைஞர்கள் உருவாக்குகின்றனர்.  அப்போதைய 13 வயது க்ராண்ட் மாஸ்டர் ஜோயல் பெஞ்சமின் உதவியால் டீப் ப்ளூவை பயிற்றுவிக்கின்றனர். அது அநாயசமாக செஸ் விளையாடி அன்றைய உலக சாம்பியன் காரி காஸ்பரோவை வீழ்த்துகிறது. மொத்த உலகமும் பிரம்மிப்பில் ஆழ்கிறது.


அடுத்தடுத்து அசுர வேகத்தில்  அத்துறை வளர்ச்சி பெறுகிறது. இன்றைக்கு பிரபலமான லாங்குவேஜ் மாடல்களான சாட் ஜிபிடி, பார்ட் முதலியவை உருவான விதம், அதற்கு தரப்பட்ட தரவுகளைப் பற்றியும் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் AI நிறுவனம் லாங்குவேஜ் மாடல் பந்தயத்தில் முன்னனியில் இருந்தாலும் அதன் அடிப்படை கட்டமைப்பென்பது கூகிள் உருவாக்கிய ட்ரான்ஸ்ஃபார்மன் நியூரான் தொழில் நுட்பம் தான். அதை கூகிள் நிறுவனம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி ஓப்பன் சோர்ஸ் ஆக்கியிருந்தது. இன்றைய AI வளர்ச்சியில் கூகிளின் பங்களிப்பு அபரிமானதென்பதை நாம் மறுக்கவே முடியாது.



எதிர்காலத்தில் AI நமக்குத் தரக்கூடிய அணுகூலங்களையும் அதே நேரத்தில் அதனால் நிகழக்கூடிய அபாயங்களையும் சொல்லியிருக்கிறார். மருத்துவம், தொழில்நுட்பம், கட்டுமானம், உற்பத்தி என அனைத்து துறைகளிலும் AI மூலம் பெரிய பாய்ச்சல் நிகழப் போகிறதென்பது மறுக்க முடியாதது. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகளைப் பற்றியும் AIயில் நடக்கக்கூடிய தவறுகளால் உண்டாகிற சேதங்களைப் பற்றிய விவாதங்களும் தவிர்க்க முடியாதவை.


இப்போதைக்கு நம்மால் ஆகக் கூடியது, நாம் பணிபுரிகிற துறையில் AIயால் நடக்கிற மாற்றங்களை ஏற்றுக் கொண்டும், அதை கற்றுக் கொண்டும் வேலை வாய்ப்புச் சந்தையில் முன்னணியில் இருப்பதே.


நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.


Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை