நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

முன்பு Steven Covey ன் புத்தகத்திலிருந்து paradigm shift என்ற   கருத்தைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதாவது நமக்குப் பிறர்  தீங்கு  ஏதும் செய்தாலோ, தொந்தரவு செய்தாலோ அவரை உடனே தண்டித்துவிடக் கூடாது. அவர்கள் எந்தத் தருணத்தில் அந்த தவறைச் செய்தார்கள், அவர்களுக்கு ஏன் அப்படி ஒருசூழல் ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும் . அவர்களை மன்னிக்க வேண்டும். இதைத் தான் ஸ்டீவன் கவே சொல்கிறார். இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து உணர்ந்து எழுதியிருக்கிறார்.

அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் ஒரு கம்பராமாயணம் பாடலைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். ஸ்டீவன் கவே சொல்லியிருக்கும் அதே கருத்தை ,கம்பர் மிக அழகாக , உணர்ச்சியுடன் ராமாயணம் பாடல் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.  அதைப் படித்து வியந்து போனேன்.

அந்தப் பாடல் இதுதான் :

’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்
மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்

இந்தப் பாடல் நடக்கும் சூழல் என்னவென்றால் , தசரதனிடம் சூழ்ச்சி செய்து வரத்தைப் பெற்ற கையேயி தன் மகன் பரதனை அரசானாக்கும் வேலையை மேற்கொள்கிறாள். அந்த வரத்தின் மூலம் ராமனை வனத்திற்குப் போகுமாறு தசரதனைக் கட்டளையிடச் சொல்கிறாள்.  ராமனும் தன் தந்தை சொல்லை  மதித்து காட்டிற்குச் செல்ல ஆயுத்தமாகிறார். இந்த சூழ்ச்சியைக் கண்ட லட்சுமணன் , தன் அண்ணன் ராமன் ஏமாற்றப்பட்டதை நினைத்து கையேயியைத் தாக்குவதற்குப் பாய்கிறான். அந்த சூழலில் தான் ராமன் இந்தப் பாடலைப் பாடுவதாகக் கம்பர் எழுதியிருக்கிறார்.
பாடலில் பொருள் இதுதான் .ராமன் இப்படிச் சொல்கிறார்.

“லட்சுமணா. ஏன் வீணாக கோபம் கொள்கிறாய்.  நதி ஒன்று  நீர் இல்லாமல் வரண்டு போய், அழகற்று இருந்தால் அது அந்த நதியின் குற்றமா ? இல்லையே. மழை பெய்யாமல் போனதற்கு நதி மீது நாம் பிழை சொல்லலாமா? . அதுபோலத் தான் இதுவும். கையேயி என்ன செய்வால் பாவம் . இதில் குற்றம் என்பது தாய் கையேயி மீதும் கிடையாது, முடிசூடப் போகும் தம்பி பரதன் மீதும் கிடையாது, வரம் கொடுத்து நம்மை வனத்திற்கு போகச் சொல்லும் தந்தை மீதும் கிடையாது . இது விதியின் பிழை. விதி இப்படி அமைந்துவிட்டது. இதற்குப் பாவம் அவர்கள் என்ன செய்வார்காள் .இதற்காகவா நீ சினம் கொள்கிறாய்? வேண்டாம்”

பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து, அவர்களை அன்புடன் நடத்த வேண்டுமென்பதை கம்பர் எத்தனை அழகாகச் சொல்லிருக்கிறார். :)

Comments

Post a Comment

Popular posts from this blog

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182