கடவுச் சொல்
ரயில்வே பாதையை ஒட்டிய சாலையில் மெல்ல நடந்து கொண்டிருந்தான் ஆனந்த். அவ்வப்போது அடிவயிற்றை லேசாகப் பிடித்துக் கொண்டு முனகினான். முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் குடித்துவிட்டு எழுந்த நடக்கவே முடியாமல் எதையும் சாப்பிடாமல் அப்படியே படுத்துக் கொண்டதால் வயிறு லேசான எரிச்சலுடன் அவ்வப்போது உள்ளே இழுத்து வலி உண்டாக்கியது. சட்டைப் பையிலிருந்து செல்ஃபோனை எடுத்துப் பார்த்த போது நேற்று அலுவலகம் வராதது ஏன் என்று மேனேஜரிடமிருந்து குருஞ்செய்தியும், அவனுடைய அம்மாவிடமிருந்து ஆறு மிஸ்டு கால்களும் வந்திருந்தன.எதற்காக இத்தனை முறை அழைக்கிறாள் என லேசாக எரிச்சலாகத் தொடங்கிய நொடியில் , ரயில் ஒன்று பெரும் சப்தத்துடன் அவனை ஒட்டிய தண்டவாளத்தில் வேகமாகச் சென்றது. லேசாக அதில் பயந்திருந்தான். உலகமே அவனைப் பாடாய்ப்படுத்தவதாகத் தோன்றியது. அந்த இடத்திலேயே ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது. எதற்காக அழ வேண்டும் என்று தான் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழ வேண்டும். ஃபோனை உள்ளே வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான். வீட்டுக்கு உள்ளே நுழைந்த போது கடிகாரம் காலை 10 மணி எனக் காட்...