கடவுச் சொல்
ரயில்வே பாதையை ஒட்டிய சாலையில் மெல்ல நடந்து கொண்டிருந்தான் ஆனந்த். அவ்வப்போது அடிவயிற்றை லேசாகப் பிடித்துக் கொண்டு முனகினான். முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் குடித்துவிட்டு எழுந்த நடக்கவே முடியாமல் எதையும் சாப்பிடாமல் அப்படியே படுத்துக் கொண்டதால் வயிறு லேசான எரிச்சலுடன் அவ்வப்போது உள்ளே இழுத்து வலி உண்டாக்கியது. சட்டைப் பையிலிருந்து செல்ஃபோனை எடுத்துப் பார்த்த போது நேற்று அலுவலகம் வராதது ஏன் என்று மேனேஜரிடமிருந்து குருஞ்செய்தியும், அவனுடைய அம்மாவிடமிருந்து ஆறு மிஸ்டு கால்களும்
வந்திருந்தன.எதற்காக இத்தனை முறை அழைக்கிறாள் என லேசாக எரிச்சலாகத் தொடங்கிய நொடியில் , ரயில் ஒன்று பெரும் சப்தத்துடன் அவனை ஒட்டிய தண்டவாளத்தில் வேகமாகச் சென்றது. லேசாக அதில் பயந்திருந்தான். உலகமே அவனைப் பாடாய்ப்படுத்தவதாகத் தோன்றியது. அந்த இடத்திலேயே ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது.
எதற்காக அழ வேண்டும் என்று தான் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழ வேண்டும். ஃபோனை உள்ளே வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான். வீட்டுக்கு உள்ளே நுழைந்த போது கடிகாரம் காலை 10 மணி எனக் காட்டியது. உள்ளே நுழைந்ததும் எப்போதும் போல அம்மா திட்டத் தொடங்கியிருந்தாள். இவனும் எப்போதும் போல தன்னுடைய அறைக்குப் போய் கதவை மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.
எதற்காக இப்படி என்று கோபமாக வந்தது. முந்தைய இரவு இரண்டு குவார்ட்டர்களை முழுதாக உள்ளே கவிழ்த்திருந்தால் போதை இன்னும் இறங்கவில்லை. கொஞ்சம் கிறக்கமாகவே இருந்தது.
தலையணையை இறுக்கமாக கட்டிக் கொண்டு லேசாக கண்களை மூடினான். சடாரென்று சல்மாவின் முகம் நினைவில் தோன்றியது. “த்தா. போடி” என்று பலமாக கத்திக் கொண்டே தலையணைய
விறுட்டென்று சுவரில் ஓங்கி எறிந்தான்.
அவளை முற்றிலுமாக மறந்துவிட வேண்டுமென்று தான் இரண்டு மாதங்களாக தினமும் குடித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் குடித்த பிறகு தான் அவளுடைய நியாபகங்கள் அநியாயத்துக்கு அதிகமாக வந்து தொலைக்கிறது . மூன்றாவது ரவுண்டில்
புலம்பத் தொடங்குபவன் தான். படக்கென்று கண்ணீர் வந்துவிடும். “மச்சி ஏண்டா எனக்கு மட்டும் இப்படி” என்று ஆரம்பித்து மட்டையாகும் வரை அதே கதைதான்.
இந்தக் காதல் தோல்விக்குப் பிறகு யார் தன் மீது பரிதாபப் பட்டாலும் அவனுக்குப் பிடிக்கிறது. தன்னை நினைத்து எல்லாருமே வருத்தப் பட வேண்டும் என்று தான் உள்ளூர நினைக்கிறான். தலையணையை சுவரில் எறிந்த இடத்தில் அவன் சல்மாவின் கன்னத்தில் முத்தமிட்ட காட்சி வீடியோ மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. ஆஆஆஆ... என்று கோபத்துடன் பல் துலக்கச் சென்றான். யாரோ வாசலில் கேட்டைத் தட்டும் சத்தம் கேட்டது.
“மச்சி மணிடா “ என்ற குரல் வந்தது வெளியில் இருந்து.
மணி வந்திருந்தான்.
“இரு மச்சி வந்துட்டேன்.”
ப்ரஷ்ஷை அப்படியே வைத்து விட்டு வெளியே கிளம்பிவிட்டான். இருவரும் சேர்ந்து தெருமுனை டீக்கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
ரொம்ப நேரம் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை. மணி மெல்ல ஆரம்பித்தான்.
“என்ன தான் டா பிரச்சன உனக்கு.”
“தெர்ல மச்சி. என்ன பண்ணனும் புரியலடா”
”அட. இதயே சொல்லுங்கடா. சரி இப்படியே இருந்துறப் போறியா. ஈஸி மச்சி. உலகம் மாறிட்டு இருக்குடா”
“இருந்தாலும். அவளப் போல வருமா . அவ போய்ட்டாடா”
“போடா டேய். அப்றம் என்னத்துக்கு ராத்திரி ஆனா குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள தள்ற. சொர்க்கம் மச்சி. அது சொர்க்கம். மறடா . சல்மா இல்லனா வேற ஒரு கில்மா”
“சரிடா . முயற்சி பண்றேன்.”
“இன்னைக்கு நைட்டும் அழுதேனு வை. த்தா அவ்ளோ தான் . பாட்டில எடுத்து டமார் . மண்ட காலி”
“ரைட்டு வா”
இருவரும் டீக்கடையை அடைந்து ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்து புகை விட்டார்கள். அவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது போல இருந்தது.
எதையுமே மறந்துவிட முடியவில்லை. இவையெல்லாம் அழிந்துபோய் புதிதாக ஒரு நினைவு. எத்தனை நன்றாக இருக்குமென யோசனையில் இருக்கும்போது“தம்பி. டீக்ளாசக் குடுப்பா. எம்புட்டு நேரம் தான் உக்காந்துட்டே கிடக்கிங்க” என்று கடைக்காரர் சலித்துக் கொண்டார். .ச்செய். இவனுக்கென்ன தெரியப்போகிறதென நொந்துகொண்டு
இருவரும் கிளம்பினர். என்னதான் மணி அவ்வளவு சொன்னபோதும் அன்றிரவும் அழுகத்தான் செய்தான். போடா மசிரு என்று எல்லாரும் கடையை விட்டுக் கிளம்பிவிட்டார்கள்.
இந்த வருத்தங்களுடனேயே அவனுக்கு சில மாதங்கள் கடந்திருந்தன.
அப்போது ஆனந்த கொஞ்சம் ஒடிசலாகப் போயிருந்தான். கண்கள் பழுப்பேறிப் போயிருந்தது. நரேந்திர மோடி அளவுக்கு தாடியும் வளர்ந்திருந்தது. அதையெல்லாம் கவனிக்கவும் அவனுக்குத் தோன்றவில்லை. என்ன வாழ்க்கையோ என்று சலித்துக் கொள்வதே அவனுக்கு தினசரிக் கடமையாகிப் போனது.
சல்மாவின் நினைவுகள் தோன்றுவது கொஞ்சம் குறைந்திருந்தது. வருத்தம் இருந்தாலும், அவளுடையை பாதையை அவளே தேர்ந்தெடுத்தாள், எவ்வளவு நாள் தான் வருந்திக் கொண்டே இருப்பது என தனது துக்கத்தின் மீது அவனுக்கே ஒரு சலிப்பு உண்டானது.
அன்றைக்கு மணி வரவில்லை. இவன் மட்டும் தனியாக புகை விட்டுக் கொண்டிருந்தான். மணி எங்கேயோ கோயிலுக்கு வெளியூர் போவதாக இரண்டு நாட்களுக்கு முன் சொன்னதாக நியாபகம்.
ஒழியட்டும் நாய் .எந்த நேரமும் அறிவுரை ஆலோசனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு அவனிடமிருந்து விடுதலை என்றவாறே சிகரெட்டின் தூளை கீழே தட்டும் போது சல்மா அந்தப் பக்கமாக ஸ்கூட்டியில் இவனைக் கோபமாக முறைத்துக் கொண்டே கடந்து போனாள். எதற்கடா இவளைப் பார்த்தோம் என உள்ளங்க்கையை மடக்கி
தொடையில் குத்தி வேறு பக்கம் திரும்பினான்
சல்மா ஆனந்தின் வீட்டருகே ஒரு வருடத்துக்கு முன் குடியிருந்தாள். பார்த்தவுடனேயே அவனுக்கும் காதலெல்லாம் இல்லை. காலையில் அலுவலகத்துக்கு இவன் கிளம்பும் போது தினமும் கடந்து போகிற யாரோ ஒரு பெண். அவன்வரை அவ்வளவுதான். பின்னொரு நாள் இவன் வண்டி பழுதாகி நின்று மடேர் மடேரென்று கிக்கரை உதைக்கிற போது எதிரே வந்த அவளை தற்காலிகமாக பார்த்த வேளையில் அவள் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டான். உடனே சல்மா படக்கென்று தலையை கீழே கவிழ்த்துக் கொண்டாள். நம்மையும் ஒரு பெண் பார்க்கிறாளே என்ற துள்ளலிள் உடனே வண்டியின் கண்ணாடியைப் பார்த்து சிரித்துக் கொண்டே தலையை வாரினான். பின் தினமும் அவளுக்காக அங்கேயே அதே நேரத்தில் காத்திருக்கத் தொடங்கியபோது அவனுக்கு அவையெல்லாமே ஏதோ புதுவுலகத்தில் இருப்பதாக நினைக்கச் செய்தது.
அந்த காத்திருப்புக்காக வீட்டிலிருந்து போர்வை கொண்டு வந்து அவன் படுத்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. தினமும் மணியிடம் “எப்டி மச்சா. கொஞ்சங்கூட தலயத் திருப்பாம நம்மள கரெக்டா பாக்குறாளுங்கோ. நம்ளும் தான் இருக்கோமே”.ஏண்டா தினமும் லேட்டா வர என்று வெறுப்பாகிய மேனேஜரையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவன் இல்லை. கம்ப்யூட்டரில் ப்ரோக்ராமிற்காக எதாவது லாஜிக் யோசித்துக் கொண்டிருக்கையில்
“அடி பெண்ணே,
உன் பார்வையென்பது வில்லா அல்லது கல்லா”
என்கிற மாதிரியான கன்றாவியான கவிதைகளும் வந்து போயின.
இவனுக்கு நிறைய சிரமம் வைக்காமல் சல்மாவே அவனை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொள்ள முடிவு செய்தாள். ஒரு நாள் Salmaa Sweety என்று தனக்கு ஃபேஸ்புக்கில் வந்த நட்பழைப்பைக் கவனித்தான். ஏதோ ஃபேக் ஐடி என்று தோன்றினாலும் நிஜமாகவே பெண்ணாக இருந்தால் என்ற ஆசையும் கொஞ்சம் இருக்கவே செய்தது. உடனே
“ஹூ ஆர் யூ “ என்று அனுப்பி வைத்தான்.
“நான் தான் “ என்று பதில் வந்தது.
“நான் தான்னா”
“என்னைத் தெரியலயா.”
“தெரியலை”
“சரி விடுங்க. குட் நைட்”
“ஏங்க ஏங்க. சொல்லிட்டுப் போங்க”
என்று இவன் அனுப்பிவிட்டு காத்திருந்தபோது “Active before 2 minutes" என்று திரையில் தெரிந்தது. அவள் ஆஃப்லைன் போய்விட்டதிலும் யாரென்றே சொல்லாமல் போனதிலும் கொஞ்சம் கோபம் இருந்தாலும் அது யாரென்று தெரிந்து கொள்வதில் நிறைய ஆர்வமும் இருந்தது. அன்றிரவு தூக்கம் வராமல் பாயைப் பிராண்டினான்.
மறுநாள் அவளுக்காக காத்திருக்கும் போது எப்போதும் இவனை பார்த்துக் கொண்டே போகிறவள் அன்றைக்கு கொஞ்சம் கீழே குனிந்துபார்த்து வாயை கொஞ்சமாக கையால் மூடிக் கொண்டு சிரித்தாள். ”எதற்காகாக கிண்டலாகச் சிரிக்கிறாள், ஒருவேளை நேற்றிரவு ஃபேஸ்புக்கில் வந்தது......“ என்று மெலிதாக சந்தேகம் உண்டானது.
அன்றைக்கும் இரவு அவள் சாட்டைத் தொடங்கினாள்.
“சாப்டிங்களா”
“முதல்ல நீ யாருன்னு சொல்லு”
“எரும. இன்னும் தெர்லயா”
“எருமயா????”
“ஆமா எரும”
“வாய ஒடச்சுருவேன். ஓடிப் போயிரு .யார்னு சொல்டீ மொதா”
ஐந்துநிமிடம் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை. சல்மா ஆஃப்லைன் போயிருந்தாள். அடுத்தநாள் காலையில் இவனைப் பாராமல் நேரே கடந்துபோனாள். நிச்சயம் இவள்தான் என்று அவன்
கண்டுபிடித்து ஒரு முடிவுக்கு வந்துசேர ஒரு வாரம் ஆகியிருந்தது. அத்தனை நாட்களாக அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லையென வேறுவழியின்று இவனே ஒரு மெசேஜை அனுப்பி வைத்தான்.
”ஏங்க . சாரிங்க. கொஞ்சம் கோவத்துல சொல்ட்டேன் . பேசுங்க. ஏங்க ”
இவன் அனுப்பிய மெசேஜுக்கு இரண்டு நாட்கள் கழித்து அவளிடமிருந்து பதில் வந்தது.
“என்ன .சொல்லுங்க”
“நீங்கதான அது. உண்மைய சொல்லுங்க”
“என்ன சொல்றிங்க”
“நாம டெய்லி பாத்துப்போமே. விளையாடாதீங்க. சொல்லுங்க”
இவனை ரொம்ப படுத்துகிறோமோ ,உண்மையைச் சொல்லிவிடலாமா என்று உள்ளூர சிரித்துக் கொண்டே கொஞ்ச நேரம் அவனைக் கெஞ்ச விட்டு கடைசியில் அவள் தான் என உண்மையைச் சொன்னாள். அன்றைக்கு நீண்ட நேரம் பேசிக் கொண்டார்கள். ஒரே வாரத்தில் இவளைப் பற்றி அவனும் இவனைப் பற்றி நிறையவே அவளும் தெரிந்து கொண்டு ஃசெல்போன் எண்ணைப் பகிர்ந்து அடுத்த சில வாரங்களுக்கு
ஃபோனிலேயே பேச்சு தொடர்ந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் காதலிப்பதாக நினைத்தார்கள். ஆனாலும் அதை சொல்லிக் கொள்ளவில்லை. மற்றவர் சொல்லட்டும் என இருவரும் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு போகலாமென நினைத்தவன் , அவனே ஆரம்பித்தான்
“நாம நேர்ல மீட் பண்ணிப் பேசலாமா”
”நேர்லயா. அதான் தினமும் பாக்குறோமே ”
”ஆனா இன்னும் பேசலியே”
”ம்”என்று கொஞ்சம் யோசித்தவள், சில நொடிகள் கழித்து
“எந்த இடத்துல பேசுறது. யாராச்சும் பாத்துட்டாங்கனா”
“அட அதெல்லாம் இல்ல. எவனும் வரமாட்டான்”
“சரி எங்க”
அன்று மாலையே பேருந்து நிலையத்தினருகில் இருக்கும் பூங்காவில் சந்தித்துக் கொண்டனர். தொலைபேசியில் அத்தனை பேசியிருந்தாலும் நேரில் பேசத் தொடங்க அவனுடைய வாய் தந்தியடித்தது. சல்மா இயல்பாகவே இருந்தாள். இவனை நம்பி பய்னில்லை என்று புரிந்து கொண்டு அவளே ஆரம்பித்தாள்.
”அப்பறம். சொல்லுங்க”
“சாப்டிங்களா”
”இத கேக்க தான் வந்திங்களா” என்று சொல்லி ,”எரும எரும” என்று முனுமுனுத்துக் கொண்டாள்.
அவனுக்கு தான் ஒரு பேக்காக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தாலும் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் இயல்பாகப் பேசவே முடியவில்லை. ஒரு மணிநேரம் என்னென்னவோ பேசியபின், அவர்களுடைய முதல் சந்திப்பு கொஞ்சம் தடுமாற்றத்தினுடனேயே முடிவு பெற்றது. ஏதோ ஒரு தொலைபேசி உரையாடலில் அவளை காதலிப்பதாக சொல்லியே விட்டான். அவளும் கொஞ்சம் அதிர்ச்சி ஆவதாக நடித்து பின்
அதை ஒப்புக் கொண்டாள். வழக்கத்திற்கு மாறாக அன்றைக்கு நீண்ட நேரம் பேசினார்கள். தான் இனி வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக
இருக்கப் போவதாக இருவருமே நினைத்து நினைத்து அலைக்கற்றைகளிலேயே முத்தங்களை பரிமாறினார்கள் அதன் பின் அடிக்கடி சந்த்தித்துக் கொண்டனர். தொலைபேசியைப் போல நேரிலும் சில கொஞ்சல்களெல்லாம் செய்யத் தொடங்கினான். தினமும் பூங்கா என்றில்லாமல், உணவு விடுதியில், கோயிலில் என நிறைய இடங்களில் சந்திப்புகள் நடந்தன.முன்பெல்லாம் அலுவலகமே மூடினாலும் ஆர்வமாக அமர்ந்து ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்தவன்,
6 மணி ஆனாலே எல்லாருக்கும் டாட்டா காட்டி கிளம்பிவிடத் தொடங்கினான். வீட்டில் பையைப் போட்டுவிட்டு விறுவிறுவென கிளம்பும் போது அவன் அப்பா வந்துசேர
“டேய் டேய். நில்றா. எங்கடா போற”
“பத்து நிமிஷம்ப்பா வந்திருவேன்”
அன்றைக்கு என்ன நினைத்தானோ தெரியவில்லை ,பேசிக் கொண்டிருக்கும்போதே படக்கென்று அவளை அணைத்து கன்னத்தில் ஒன்று கொடுத்தே விட்டான். கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் ,சிரித்துக் கொண்டே சொன்னாள்
“எரும.. இதெல்லாம் பண்ணுவியாடா. அவ்வளவு தைரியமாப் போச்சு. உம்”
அவள் பேசிக் கொண்டிருக்குபோதே அவளுக்கு இடைவெளி கொடுக்காமல் இன்னொரு முத்தத்தையும் இறக்கினான். அவளும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். சில மாதங்களுக்கு மாய்ந்து மாய்ந்து காதலித்தனர். அலுவலக நேரத்தைத் தவிர அவளுடன் பேசுவதையே முழு நேர வேலையாக அமைத்துக் கொண்டான். அடிக்கடி சில சண்டைகள், சில கோபங்கள், சில அழுகைகள், அதற்கான சமாதானங்கள், உடனேயே சில முத்தங்கள் என ஒரு சராசரி காதலுக்குரிய எல்லாமே இருந்தது.
ஏதோ ஒரு புள்ளியில் அது விலகத் தொடங்கியது. தினமும் பேசி, தினமும் பார்த்து இனி பேச என்ன இருக்கிறதென இருவருக்குமே உள்ளூர தோன்றினாலும் யாரும் சொல்லிக் கொள்ளவில்லை. தொலைபேசியில் மட்டுமல்லாது ,நேரிலும்
”அப்றம். சொல்லேன்”
“ஏன். நீ சொல்லேன்”
“நீ சொல்லமாட்டியாடீ”
சிறிது சிறிதாக அவர்களே அறியாமல் இடைவெளி உருவாகத் தொடங்கியது. தினமும் சந்தித்துக் கொள்ளவோ, நிறைய உரையாடவோ ஒரு தயக்கம் உண்டானது.
“இன்னைக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் வொர்க்டீ. நாளாக்கு பாக்கலாமா”
“டயர்டா இருக்குடா. தூக்கம் வருதுடா. நாளைக்கு பேசிக்கலாமா”
காதலிக்கத் தொடங்கி ஒரு வருடம் கழிந்திருந்தது. இதற்கு மேல் போகாது என இருவருக்குமே உறுதியாகத் தோன்றியது. ஆனாலும் அவளே சொல்லிவிட எண்ணினாள் . ஆனால் என்ன காரணம் சொல்வதெனக் குழம்பி ஒரு வழியாக முடிவு செய்து அவனை தொலைபேசியில் அழைத்தாள்.
”ஆனந்த். நாம பிரிஞ்சிரலாம்டா”
“என்னடீ சொல்ற. என்னாசு தீடீர்னு ”
“இல்லடா. எனக்கு ரொம்ப பயமா இருக்குது. இது நடக்குமானு”
“ஏண்டீ நடக்காது. இப்போ என்ன”
“இது வேணாம்டா”
ஏதோ சிக்கலில் மாட்டி பின் விடுதலையடைந்த ஆசுவாசம் உள்ளே தோன்றினாலும், நிறைய கோபமாக இருந்தது.கதறி அழுதே விட்டான்.
”ப்ளீஸ்டீ. போவாதடீ . எனக்கு யாருடீ இருக்காங்க”
“சாரிடா. எனக்கு என்ன பண்ணனு தெர்ல. அழாதடா. கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்”
”வேணாண்டீ. நான் உன்ன பாக்க “ என்று இவன் அழுது புலம்பிக் கொண்டிருக்கும்போதே அவள் தொலைபேசியை அந்தப் பக்கம் துண்டித்தாள்.
இவன் திரும்பத் திரும்ப அழைத்த போதும் தொடர்ந்து துண்டித்தாள். என்ன செய்வதென்று வாட்ஸப்பை திறந்த போது அவளுடைய ஃபோட்டோ தெரியவில்லை, ப்ளாக் செய்திருந்தாள். அழுதுகொண்டே சிகரெட் பற்ற வைத்து இழுத்தான். அது முடிந்ததும் இன்னொன்று . அவ்வப்போது அழுகையை மறைக்க முயன்று கண்ணை துடைத்துக் கொண்டே இருந்தான். உள்ளூர தப்பித்தோம் என கொஞ்சம் மகிழ்ச்சி இருந்தாலும் ,ஏன் தன்னை தீடீரென இப்படி நிராகரித்தாள் என்பது தான் அவனுக்கு புரியவேயில்லை.
விறுவிறுவென ஏடிஎம் போய் ஐநூறு எடுத்து ஹால்ஃப் பிராந்தி வாங்கி குடித்துமுடித்து சரிந்து விழுந்த போது சல்மா நிழலாக தன்னைப் பார்த்துக் கேலி செய்வது மாதிரியே அவனுக்குத் தெரிந்தது.
அப்படியே கண்கள் இருண்டது.
டேய் என்னடா இங்கே உக்காந்திருக்க. மணி வந்து டீக்கடையில் அமர்ந்திருந்தவனை உலுக்கியபோது தான் மீண்டும் கடந்த கால நினைவை விட்டு மீண்டான். வாடா ஊர்ல இருந்து எப்போ வந்த என்று சம்பிரதாயமாகக் கேட்டான். எல்லாமே நேற்றைக்கு நடந்த மாதிரி இருக்கிறது. எத்தனை மாதங்கள் கடந்துவிட்டன . சல்மா தன்னை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பாளா என்று தீடீரென தனக்குள்ளே கேட்டுக்
கொண்டான். மச்சி தம் போடலாமா என்று கேட்டு, ஆளுக்கு ஒன்றாக மணி வாங்கி வந்தான். சிகரெட்டை இழுத்துக் கொண்டே அன்று வீடு போய்ச் சேர்ந்தனர். அன்றைக்கு நீண்ட நேரமாக அவனுக்கு உறக்கமே வரவில்லை . இனி அவளைப் பார்க்கக் கூடாது,சீக்கிரமே வேறு ஊரிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு போய்விட விரும்பினான். அப்படியாவது அவளை சந்திக்காமல் இருக்கலாமே. ஆனாலும் அவளை விட்டுப் பிரிந்து போவதை நினைக்கிற போதும் ஒருமாதிரியாகத் தானிருந்தது. ஏதோ இனம்புரியாத
ஒரு வருத்தததினுடயே தூங்கிப் போனான்.
அன்றைக்கு அலுவலகத்திலும் கொஞ்சம் கலக்கத்தினுடனேயே தான் இருந்தான். இடைவேளையில் காப்பியை இவன் உறிஞ்சிக் கொண்டிருந்த போது வினிதா வந்தாள். அலுவலகத்தில் எல்லோருக்கும் வினு.
“என்ன ஆனந்த். கொஞ்சம் டல் போலயே இன்னைக்கு”
எப்போதுமே தன்னிடம் பேசாதவள் இன்றைக்கு என்ன வந்து ஆரம்பிக்கிறாளே என்று இவனுக்குக் கொஞ்சம் வெறுப்பாகத் தானிருந்தது .இவ்வளாவு நாட்களாக ஒரே அலுவலகத்தில் தான் இருக்கிறார்கள்
என்ற போதும் இவன் அவளை சட்டை செய்ததில்லை. அதிலும் இந்தக் காதல் தோல்விக்குப் பிறகாக பெண்கள் என்பவர்களையே வேற்றுலக வாசிகளாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
“ஒன்னுமில்ல வினு. நைட் தூக்கமில்லை. அதனாலயா இருக்கலாம்”
”ஓ . ஓகேய். தேர் இஸ் அன் ப்ராப்ளம் இன் மை பிசி. கொஞ்சம் என்னன்னு பாக்குறிங்களா”
இருக்கிற தலைவலியில் இவள் வேறு என்று முனங்கிக் கொண்டே ஓரு மணிநேரமாக போராடி அவளுடைய கணினியை சரிபடுத்தினான்.
தேங்க்ஸ் என்று அவள் புன்னகையுடன் அவன் கையை குலுக்கியபோது ஏனோ அன்றைக்கு வினு கொஞ்சம் கூடுதல் அழகுடன் இருப்பதாகத் தோன்றியது. அவளுடைய சிரிப்பு சில நொடிகள் என்னவோ செய்தது. ஆனாலும் சிறிது நேரத்தில் க்ளைண்ட்டுடன் சந்திப்பு இருந்ததனால் விறு விறுவென தன் அறைக்கு ஓடினான்.
அன்றைக்கு இரவு சல்மாவோடு அவ்வப்போது வினுவும் நினைவுக்கு வந்து போன போது அந்த இரவு கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது. அவ்வப்போது அவளுடைய “தேங்க்ஸ்” இவனுக்குள் கேட்ட போது
மெலிதாக சிரித்துக் கொள்வான். இடைவேளைகளில் வினு இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கடந்து போவாள். இவனும் அதற்காகக் காத்திருந்தது அசடாக வழிவான். தேநீர் வேளைகளின் போது இவனே அவளுக்கருகே போய் எதாவது பேச முயற்சித்தது கொஞ்சம் பலனளிக்கவே செய்தது. சல்மாவினுடனான காதலின் போது கிடைத்த அனுபவங்கள் அவனுக்கு நிறையவே உதவியது. அடிக்கடி அவளை சிரிக்க வைத்து அசத்தினான். ஒரு மாதம் போயிருக்கும். இருவருமே காதலைச் சொல்ல தயங்குகிற வழக்கமான ஒரு நிலை வந்தது.
அன்றைக்கு அலுவலகம் முடிந்து படியில் இருவர் மட்டுமே மெல்ல இறங்கிக் கொண்டிருக்குந்தனர்.
“வினு. இன்னைக்கு எப்டி போச்சு”
“போச்சுடா . கேக்கனும் னு நினச்சேன். நேத்து ஃபோன்ல ரொம்ப கொஞ்சுனியே .என்ன திடீர்னு“
”அப்படியா. சொல்லவே இல்ல”
“ஏய். ரொம்ப வழிஞ்சடா”
“ஓ. இப்போ அதுக்கு எதும் பண்ணனுமா என்ன”
“ச்சீ. போடா .எரும எரும”
சல்மா !!! இவள் ஏன் இப்போது நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறாள் !!ச்செய்!!!இது எத்தனை நாட்களுக்கோ என்றொரு தயக்கம் வந்தபோதும்
வினுவை இருக்கமாக அணைத்துக் கொண்டான்.
சர்தான்..
ReplyDeleteசல்மாஆஆஆ
ReplyDelete