காந்தி காத்திருப்பார்
எப்போதும் போன்றதொரு காந்தி ஜெயந்தி. கூடவே அவரைப் பற்றிய அவதூறுகளும் தென்படத் துவங்கிவிட்டன. வழக்கம் போல சுபாஷ் சந்திர போஸைப் பற்றிய பொய்யான மிகைப்படுத்தப்பட்ட ”நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?”பாணியிலான வரலாறுகள், அதையொட்டி காந்தியை இழிவு செய்து வசைபாடுவதென ஒவ்வொரு காந்தி ஜெயந்தியும் கடந்துபோகத் தான் செய்கிறது. ”போஸ் ஹிட்லரைப் பார்த்தார். தன் முதுகில் கை வைக்கும் தைரியம் ஹிட்லருக்கு மட்டுமே இருக்கிறதென்றார். முத்துராமலிங்கத் தேவர் தன் தளபதியென ஹிட்லரிடம் சொன்னார்” “போஸ் ஆங்கிலப் படையை துவம்சம் செய்தார். டெல்லியை நெருங்கினார். அவர் புகழ் பரவக் கூடாதென காந்தியால் சுதந்திரம் கிடைத்ததென பிரிட்டிஷ் அரசு அறிவித்தது “ “பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது காந்தி மௌனம் காத்தார்” “தன் தந்தை இறந்து கிடந்த போது தன் மனைவியுடன் காந்தி தனியறையில் உறவுகொண்டார்” “காந்தி ஒரு கோழை” “காந்தி ஒரு துரோகி” “காந்தி ஒரு காமுகன்” இத்தியாதி இத்தியாதிகள். நம் உண்மையான நோக்கம் தான் என்ன. போஸையும் பகத்சிங்கையும் உயர்த்துவதா அல்லது நம் அன்றாட தோல்விகளையும் கசப்புகளையும் மறைப்பதற்காக காந்தி...