சுபாஷ் ஜெயித்தாரா ? காந்தி பின்வாங்கினாரா ?
போஸிடம் பிரச்சனையில்லை. அவரது தேசபக்தியில் துளியும் சந்தேகமில்லை. அவரை இழிவு செய்ய வேண்டுமென்பதுஇம்மியளவும் நோக்கமில்லை. பிரச்சனையென்பது அவரின் ரசிகர்களெனச் சொல்லி சிறிதும் உண்மையில்லாத வரலாற்றைப் படைப்பவர்கள்தான். தன்னைச் சுற்றியிருக்கிற சிறிய கூட்டத்திற்கு தான் கற்பனை செய்தவற்றை வரலாறு எனச் சொல்லி நம்ப வைப்பது அத்தனை கடினமில்லைதான் . ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லையே ? போஸ் வெற்றி பெற்றாரா ? போஸ் போன்றோரின் ஆயுத வழிப் போராட்டத்தில் ஏன் காந்தி ஈடுபாடு கொள்ளவில்லை?
தன் ஆயுதப் போராட்டுத்துக்கான ஆதரவைத் திரட்ட இத்தாலி, ஜெர்மனி , என ஐரோப்பிய நாடுகளனைத்திலும் முயற்சித்து எதுவும் நடக்காமல் , இறுதியில் ஒருவழியாக ஜப்பானின் உதவியைப் பெற்றார் போஸ். வேறென்ன வேண்டும் .ஜப்பான் இருக்கிறது, ஐஎன்ஏ ,இருக்கிறது ,உயிரைக் கொடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள், நரம்பு புடைக்க தன்னம்பிக்கை இருக்கிறது. ஆனால் களத்தின் நிலை நாம் நினைப்பது போல் இருந்துவிடுவதில்லை. எதிரிலிருப்பது பிரிட்டன். உதவிக்கு அமேரிக்கா. சர்வ வல்லமை பெற்று ஐரோப்பாவை நடுங்க வைத்த ஹிட்லரையே வீழ்த்திய ஒரு கூட்டணி . அவர்களை ஐஎன்ஏவையும் ஜப்பானையும் கொண்டு வீழ்த்த முடியுமா? போஸின் படை தன் ஆரம்ப கட்டத்திலேயே இம்பாலில் வீழ்ந்தது. அவருடைய கனவுகள் அனைத்தும் தொடங்காமலேயே முடிந்து போனது. ஐஎன்ஏவிலும் ஜப்பானின் படையிலிருந்தும் பெரும்பாலான வீரர்கள் உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் சயாம் மரண ரயில் பாதை என்ற உயிரைக் கொல்கிற பணிச்சுமையில் கொல்லப்பட்டனர். இப்போது சிந்திக்கலாம். காந்தியை உதறி போஸ் எடுத்த முடிவு சரியானதுதானா ?
எனில் காந்தியப் போராட்டமென்பது என்ன ? தன்னை நம்பி போராட வந்தவர்களை பலி கொடுக்காமல், முடிந்து அளவு சேதாரங்களின்றி , தன் நோக்கத்தை எதிரிலிருப்பவர்களுக்குப் புரிய வைத்து அவற்றை அடைவதையே காந்தி திரும்பத் திரும்பச் செய்து காட்டினார். சம்பாரனில் விவசாயிகளுக்கானப் போராட்டத்தில், உப்புச் சத்தியாகிரகத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில், அந்நியத் துணி பகிஷ்கரிப்பு என துளியும் வன்முறையின்றி பிரிட்டனை நடுங்க வைத்தார். மக்களோடு உரையாடி அவர்களின் எண்ணத்தை மாற்றியமைத்தார். பிரிட்டனை எதிர்க்க ஒரே வழி அவர்களின் மீதிருந்த பயத்தை விரட்டுவதேயென மக்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அவற்றில் பெரும்பான்மை வெற்றியும் கண்டார். ஓரிரவில் வன்முறையில் பெற்றுவிடுவதல்ல சுதந்திரம் என்பதை உணர்ந்திருந்தார். எனில் காந்தியப் போராட்டங்களில் இடர்ப்பாடே இல்லையா? ஒத்துழையாமைப் போராட்டத்தின் போது சௌரி சௌரா என்ற ஊரில் காவல்துறையில் நடவடிக்கை மீது கோபம் கொண்ட மக்கள் , அக்காவலர்கள் அனைவரையும் கொன்று காவல் நிலையத்தை எரித்தனர். ஒரு ஊரில் நடந்த நிகழ்வு நாடு தழுவிய அகிம்சைப் போராட்டத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்திவிடப் போகிறதென எல்லாருமே நினைத்திருக்கலாம். ஆனால் காந்தி போராட்டத்தை நிறுத்தச் சொன்னார். ஒரு ஊரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சிறிது சிறிதாக மற்ற எல்லா மக்களுக்கும் ஒரு வெற்று தைரியத்தைக் கொடுத்து வன்முறையை உண்டாக்கி , பிரிட்டனின் பீரங்கிகளுக்கு தன் மக்களை பலி கொடுக்க நேரிடுமோ என எதார்த்தத்தை யோசித்து அஞ்சினார். போராட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உண்ணாவிரதமிருந்தார். மொத்த இந்தியாவும் காந்தியில் சொல்கேட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டது.
ஆவேசமான உணர்ச்சிவயமான பேச்சுகளில் எதுவும் நடந்துவிடாது ,செயலே முக்கியம்,எதார்த்தத்தை அறிந்து சிறிது சிறிதாக முன்னேறுவதே நல்லதென காந்தி நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார்.
உனக்கு ஒன்றும் தெரியாது ,வாயை மூடிக் கொண்டு என் பின்னால் வா என்பவனல்ல தலைவன், தன்னோடு இருப்பவர்களுக்கு எந்நேரமும் கற்பிப்பவன் தலைவன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தன் லட்சியங்களை அடைபவன் தலைவன், அவர்களோடு சேர்ந்து முன்னே செல்பவன் தலைவன்.
காந்தி தலைவன் மாபெரும் தலைவன்.
Comments
Post a Comment