கோயில் குளந்தான் ஊருக்கு அழகு
எங்கு பார்த்தாலும் கொட்டுச் சத்தம், அதற்கு முன் ஆடுகிற கூட்டம், காதைக் கிழிக்கும் கோஷங்கள். இப்படித் தான் இருந்திருக்க வேண்டிய ஊர். ஆனால் இன்றைக்கு எந்தச் சலனமுமின்றி பெருமூச்சுடன் ஊர் உறங்கிக் கிடக்கிறது. இதற்கு முன் இப்பங்குனித் திருநாள் காலத்தில் எங்களூர் இப்படித்தானிருந்ததா என நினைக்கிற போது மனம் நிலைகொள்ளவில்லை. பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறன்று பொங்கல் சாட்டுதலில் தொடங்கி ஊர் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கும். அன்றிலிருந்து ஊரில் ஒவ்வொருவருமே திருநாளை நோக்கி குதூகலித்துக் கிடப்பார்கள். மற்ற எந்தப் பண்டிகையையும் விட இப்பங்குனிப் பொங்கலையே கொண்டாடித் தீர்த்த மக்கள், இன்று வெறுமையுடன் வெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் தொடங்கி இருபத்தியோரு நாட்களுமே மொத்த ஊரும் கோயிலைச் சுற்றிச் சுழன்று கொண்டுதானிருக்கும். இப்பொங்கலை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென குதூகலித்துக் கிடக்கும் நாட்கள், இத்திருநாளை மட்டுமே நம்பி கடை விரித்துக் கனவு கொள்ளும் எத்தனை சாலையோர பொம்மை வியாபாரிகள், துணி விற்பவர்கள், பலூன் கடைக்காரர், சிறுவர்களைக் கவர அவர் ஊதிக் காட்...