சிறுதெய்வங்கள் வெறும் கற்கள்தானா ?
இது பெரும்பாலானோருக்கு நடந்திருக்கலாம். பதின் வயது முடிந்து இருபதுகளுக்குள் நுழைகிற காலம். ஒரு ஆவேசம் பொங்கும். என்னடா இது இத்தனை கடவுள்கள், தேவையற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள். இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்தி வாழப்போகிறார்களோ என்பது மாதிரி. முக்கியமாக சிறு தெய்வ ,மூதாதைய வழிபாடுகளின் போது தோன்றும் இந்த எண்ணம் மேலோங்கும். எங்கோயோ காட்டுக்குள்ளும் புதருக்குள்ளும் கடினப்பட்டு நடந்து ஒரு கல்லைக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே என ஒரு ஒவ்வாமை. அவர்களை மீட்டு நல்வழிப் படுத்த தோன்றியவன் நான் என நினைக்கிற ஒரு காலம். ஆனால் அதையெல்லாம் கடந்து, நாம் எவ்வளவு பிரம்மாண்ட ஒரு தொடர்ச்சிக்குள் இருக்கிறோமென்றும், வழிபாடுகளின் ஏன் தேவையென்றும் புரிந்து கொள்ள கொஞ்சம் காலமும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம். மனித உருவாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியை உள்ளடக்கியது. உங்கள் வீட்டில் மாட்டியிருக்கிற தந்தை அல்லது பாட்டனின் புகைப்படத்திற்குப் பின்னால் எத்தனை ஆயிரம் முன்னோர் மறைந்திருப்பார்கள். அவர்கள் நமக்கு எத்தனை அளித்துச் சென்றிருப்பார்கள். அந்த தொடர்ச்சியை உதறி, நம் வேர்...