சிறுதெய்வங்கள் வெறும் கற்கள்தானா ?
இது பெரும்பாலானோருக்கு நடந்திருக்கலாம். பதின் வயது முடிந்து இருபதுகளுக்குள் நுழைகிற காலம். ஒரு ஆவேசம் பொங்கும். என்னடா இது இத்தனை கடவுள்கள், தேவையற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள். இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்தி வாழப்போகிறார்களோ என்பது மாதிரி. முக்கியமாக சிறு தெய்வ ,மூதாதைய வழிபாடுகளின் போது தோன்றும் இந்த எண்ணம் மேலோங்கும். எங்கோயோ காட்டுக்குள்ளும் புதருக்குள்ளும் கடினப்பட்டு நடந்து ஒரு கல்லைக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே என ஒரு ஒவ்வாமை. அவர்களை மீட்டு நல்வழிப் படுத்த தோன்றியவன் நான் என நினைக்கிற ஒரு காலம். ஆனால் அதையெல்லாம் கடந்து, நாம் எவ்வளவு பிரம்மாண்ட ஒரு தொடர்ச்சிக்குள் இருக்கிறோமென்றும், வழிபாடுகளின் ஏன் தேவையென்றும் புரிந்து கொள்ள கொஞ்சம் காலமும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம். மனித உருவாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியை உள்ளடக்கியது. உங்கள் வீட்டில் மாட்டியிருக்கிற தந்தை அல்லது பாட்டனின் புகைப்படத்திற்குப் பின்னால் எத்தனை ஆயிரம் முன்னோர் மறைந்திருப்பார்கள். அவர்கள் நமக்கு எத்தனை அளித்துச் சென்றிருப்பார்கள். அந்த தொடர்ச்சியை உதறி, நம் வேர்களை மறந்து போக உண்மையிலேயே முடியுமா என்றால் ,அது கேள்விக்கு உட்பட்டது தான். அப்படி ஒரு பாசாங்கு செய்யலாம். இல்லவே இல்லையென மறுக்கலாம்.ஆனால் தன் வேர்களைப் பற்றிய ஆர்வம் சிறிதும் இல்லையெனச் சொல்வதற்கு மிகப் பெரிய துறவு மனநிலை நிச்சயம் தேவைப்படும். ஞானிகளால் , யோகிகளால் அது இயலலாம். ஒரு சாதாரண மனிதனாக நாம் கடந்து போகவே முடியாது.
அப்படியான வேர்களையும் மூதாதையர்களையும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் நினைத்து நன்றி தெரிவிக்கிற ஒரு பண்பாடு நமக்கு அளிக்கப் பட்டிருக்கிறதெனில், எத்தனை மகத்தானது அது.
சரி. சிறு தெய்வங்களினால் சாதிவெறி மேலோங்குவதை மறுக்க முடியுமா எனக் கேட்டால். மறுக்க முடியாது தான். ஆனால் இது சாதி மட்டுமே கொண்டதும் கிடையாதே. நாம் சாதிகளைக் கடக்கத் தொடங்கி சில பத்தாண்டுகள் ஆகியிருக்கும். பல்லாயிரம் வருடங்களாக இனக்குழுவைத் தாண்டிச் சிந்திக்காத ,இன்னொரு இனக்குழுவை கொன்று தீர்க்கிற சமூகமாகவே வளர்ந்து வந்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு மதத்தில் இருக்கிற பிரச்சனைகளை களைந்து எவ்வளவு முன்னேறி வந்திருக்கிறோம். சதி, ஆலய நுழைவு மறுப்பு என பல மூடப் பழக்கங்களை களைந்து இந்த இடத்தில் நிற்கிறோம்.
சிறு தெய்வங்களையும் மூதாதையர்களையும் வணங்குகிற அந்நேரத்தில் அந்த தொடர்ச்சியில் நம்மைப் பொருத்திக் கொள்கிறோம். அவர்கள் நமக்கு பெற்றளித்தவைகளுக்காக உணர்ச்சிகரமாக நன்றி தெரிவிக்கிறோம். அவர்களின் பசிக்காக படையலிடுகிறோம் . ஆம். மூடநம்பிக்கையாகத் தெரியலாம். இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் பிற்போக்குத் தனமாகத் தோன்றலாம். ஆனால் சடங்குகள் நமக்கு பெற்றளிப்பவை நிறைய. இறந்தவர்களையும் இருப்பவர்களையும் நேர்கோட்டில் இணைக்கிற ஒரு மகத்தான பண்பாட்டை மூடநம்பிக்கையாகப் பார்த்தால் இழப்பு நமக்கே.
👌🏼👌🏼👌🏼
ReplyDeleteGood one.
ReplyDelete