20 வயதில்

சிறுகதை : 

காலை 7 மணிக்கு இங்கே தெருமுனையில் நின்று கொண்டிருக்கிறேன். அதுவும்  அயர் பண்ணிய சட்டை,பேண்ட் அணிந்திருக்கிறேன், உயர்தர வாசனைத் திரவம் பூசியிருக்கிறேன். ஒரு மனிதன் காலை 7 மணிக்கு ஏன் இப்படி பகட்டாக நின்று கொண்டிருக்கிறான். காரணம் இல்லாமலா. ஆனந்தி எங்கள் வீட்டின் அருகே  வசிக்க வந்து 6 மாதங்கள் ஆகிறது. இப்பொழுது இப்பக்கம் வருவாள். காலையில் தண்ணீர் குடத்துடன் , நீர் இறைக்க இந்த வழி தான் தினம் செல்கிறாள். அதனால் இங்கேயே தினம் தினம் காத்திருக்கிறேன். அவள் அத்தனை அழகு கிடையாது. ஆனால் அழகாக இருக்கிறாள். அவளைப் பார்க்கும் போதும் மட்டும் ஏதோ உற்சாகம் வந்துவிடுகிறது. உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒன்றை,என்னால் பார்க்க முடிகிறதென்கிற ஆனந்தம்.

எனக்கு சிகரெட் பிடிக்கும் தினம் நான்கு பிடித்தாக வேண்டும் ஆனால் இப்பொழுது நான் அதைத் தொடுவதில்லை. நான் சிகரெட் பிடிப்பதை அவள் பார்த்துவிட்டால்? பின் என்ன செய்வேன்? என்னைக் கெட்டவன் என நினைத்துவிடுவாளே? பிறகு என்னைப் பார்ப்பாளா? அதனால் வேண்டாம். போதும் . ஏன்  எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. அவள் அப்படி என்ன விஷேசமானவள். அவளிடம் என்ன சிறப்பைக் கண்டுவிட்டேன். ஒன்றும் இல்லை. 20 வயதான எனக்கு, சாலையில் போகும் எந்தப் பெண்ணைக் கண்டாலும்  காதலிக்கத் தோன்றுகிறது. ஆனால் ஆனந்தியைப் பார்க்கும் போது மட்டும் கொஞ்சம் கூடுதலான உற்சாகம் வந்துவிடுகிறது. உண்மையில் இது காதல் தானா ? உண்மையான காதல் தானா? இந்த வயதில் வருவது காதல் கிடையாது எனச் சிலர் சொல்கிறார்கள். அது எதற்கும் உபயோகப்படாத ஈர்ப்பு எனச் சொல்கிறார்கள். எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. அவளைப் பார்ப்பதனால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. எனக்கு குழப்பமாக இருக்கிறது

இது வயதினால்  வருகிற பிரச்சனையா? 20 வயதான எல்லா இளைஞர்களும் என்னைப் போலத்தான்  இப்படி ஒரு பெண்ணுக்காக தெருவில் நின்று கொண்டிருப்பார்களா. இப்படி எந்நேரமும் அந்தப் பெண்ணைப் பற்றி மட்டுமே சிந்திதுக் கொண்டு இருப்பார்களா. தெருவில் போகும் எல்லாப் பெண்களையும் காதலிக்க எண்ணுவார்களா. என்னவோ. எனக்குக் கவலையில்லை. எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவளும் என்னை அடிக்கடி பார்க்கிறாள். அப்படியென்றால் அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. பிடித்தாக வேண்டும். ஒரு நாளில் என்னுடைய விருப்பத்தை நிச்சயம் சொல்லிவிட நினைக்கிறேன். தினமும் அதற்காகத் தான் முயற்சிக்கிறேன். ஏனோ முடியவில்லை. அவளது கண்களைப் பார்த்தாலே ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. ஒருவேளை என்னை அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டால்? என்னைக் கடுமையாக அவள் திட்டிவிட்டால்? பின் என்ன செய்வேன் ? அதன் பிறகு அவளை எப்படி பார்ப்பேன். அதனால் எனக்கு அச்சமாக இருக்கிறது. அவளிடம் பேச நெருங்கினாலே உடல் நடுங்கத் தொடங்கிவிடுகிறது . ஆனால் இன்று அப்படி இல்லை. எப்படியாவது அவளிடம் என் விருப்பத்தைச் சொல்லியாக வேண்டும். தைரியமாக இருக்கிறேன். வீட்டிலேயே பல முறை பேசிப் பார்த்து பயிற்சி செய்திருக்கிறேன். இன்றைக்கு நிச்சயம் வெற்றி தான் .

ஆனந்தி…….நான்…..நான் …..நான்..உங்உங்கஉங்ககிட்ட

ச்செய்!!! அவள் வருவதற்கு முன்னரே இப்படிச் சொதப்புகிறேன். அவளிடம் எப்படித்தான் பேசப்போகிறேனோ. சரி. அவள் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். பலமுறை இப்படி அவளுக்காக காத்திருக்கும்போது ,அவளுடைய அப்பாவும் உடன் வந்துவிடுகிறார். இப்போதெல்லாம் என்னைப் பார்த்து முறைக்கிறார். அவருக்கு என் மேல் கோபம் இருக்கும். நான் ஆனந்தியை காதலிக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்திருப்பார். இது உண்மையில் காதல்தானா ? எனக்கே குழப்பம். ஆனால் எது நடந்தாலும்  அவளிடம் பேசிட வேண்டும். அதோ ஆனந்தி வந்துவிட்டாள். எனக்கு அதிர்ஷ்டம்,ஏனென்றால் தனியாக வருகிறாள். உடன் அவளுடைய அப்பா இல்லை. எனக்கு வேலை சுலபமாகப் போய்விட்டது. ஏனோ இன்றைக்கு ரொம்ப அழகாகத் தெரிகிறாள். ஏன் பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒருவித அழகில் தெரிகிறார்கள். ஆண்களில் பார்வையில் தான் கோளாறு இருக்கிறதா. சரி. என்னருகே நடந்து வருகிறாள் . இதோ நெருங்கிவிட்டேன்.

ஆனந்தி…..ஒருஒரு நிமிஷம் நில்லுங்களேன்…..”

அவள் என்னைப் பார்க்கிறாள். சுற்றி மனிதர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது அவளுக்கு பயமாக இருக்கிறதென நினைக்கிறேன். அப்படி மனிதர்கள் யாரும் அப்போது தெருவில் இல்லை. ஆனாலும் அவள் பதில் ஏதும் பேசவில்லை. ஒரு புன்னகையோடு விரைவாக நடக்கத் தொடங்கிவிட்டாள். அந்தப் புன்னகை என்னைக் கேலி செய்வது போல இருந்தது. ஆம் எனக்கு அது இன்னும் அதிக  மன அழுத்தத்தைத் தந்தது.அவள் என்னைக் கவனிப்பதாக இல்லை. நான் மீண்டும் முயற்சித்தேன்.

ஏங்க..ஆனந்திஉங்களத்தான்..நில்லுங்களேன்……”

ம்ஹூம். இந்த முறையும் தோல்விதான். அதுவும் படுதோல்வி. இதற்காகத் தான் இத்தனை நேரமும் காத்திருந்தேனாஎல்லாம் வீண்உண்மையில் அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா. எதற்காக என்னிடம் பேசாமல் ஓடுகிறாள். ஆனால் சிரிக்கிறாளே . இதற்கு என்ன பொருள். என்னால் கண்டுகொள்ள முடிவதில்லை. இப்போது எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. இதை மனஅழுத்தம் எனவும் கொள்ளலாம். இப்போது ஒரு சிகரெட் பிடித்தே ஆக வேண்டும் .அப்போது தான் தெளிவு கிடைக்கும். அவள் பார்த்துவிட்டாள்? யார் பார்த்தால் என்ன. கவலையில்லை. ஒரு சிகரெட் வேண்டும். அவ்வளவுதான். வீட்டிற்கு போனால் அங்கு தலைவலி இன்னும் அதிகரிக்கிறது. வீட்டினுள் நுழைந்தவுடன் என் அம்மா திட்டுவதற்குத் தொடங்கிவிடுகிறாள்.

அடேய்.காலையிலே எங்க போனஅதுவும் அயர்ன் பண்ணின  துணியைப் போட்டுக்கிட்டு. சும்மா இருக்கிற நாய்க்கு என்ன வேலை. “

ஏம்மா . ஃப்ரெண்ட பாக்கப் போனேன்.அதுகூட தப்பா

லீவு நாளில் வீட்டுக்கு உதவியா ஏதாவது வேலையைச் செய்யடா. சும்மா வெட்டியா இருக்காத. “

சரி.நீ பேசாம இரு. நான் செய்வேன்

நீ வேலை செய்யிற லட்சணம் எனக்குத் தெரியாதா.சரி. முதல்ல வந்து சாப்பிடு

ஆமா.எனக்கும் கொஞ்சம் பசிக்குது

சாப்பிடும் போதும் ஆனந்தி தான் நினைவுக்கு வருகிறாள். அவளுடைய மௌனம் தான் எனக்குள்ளே பேசிக் கொண்டு இருக்கிறது. சாப்பிட்டு விட்டு,தொலைக்காட்சிப் பார்த்தால் அங்கேயும் அவள் தான். எந்த நடிகையைப் பார்த்தாலும் ஆனந்தியைப் போலவே எனக்குத் தெரிகிறார்கள். காதல் பாடல்கள் அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கிறது. அடச்செய்!!! அவள் என் நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டாள் .அவளைத் தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. இரவில் படுக்கையிலும் இதே.

 இவை போதாது என எதேதோ கவிதைகள் தானாகத் தோன்றுகிறது. காதலிக்கும் ஒவ்வொரு இளைஞனும் இரவு தூங்கும் போது கவிஞனாகி விடுகிறான். ஒரு பெண்ணின்  மீதான ஈர்ப்பை வெளிப்படுத்த அவன் கவிதைகளைத் தான் ஊடகமாகக் கொள்கிறான். உண்மையில் எனக்கு சிரிப்புத் தான் வருகிறது. என் கவிதைகள் எதுவும் தேறவில்லை. சுமாராகத் தான் இருக்கின்றன. அப்படியெனில் இது சிறந்த காதல் இல்லையா? தினம் தினம் இப்படித்தான் குழம்பிக் கொண்டிருக்கிறேன். ஏகப்பட்ட யோசனைகள் மூளையினுள் ஊடாடிக் கொண்டிருக்கிறன.

ச்செய்!!! வாழ்க்கை என்னை அலைகழிப்பு செய்கிறது. எனக்கு வெறுப்பாக இருக்கிறது. சில நேரங்களில் புத்தனைப் போல படுக்கையில் எனக்கு ஞானம் உதயமாகும். என் எண்ணங்கள் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றன.

அத்தனை நேரம் அவளைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். சரி.அவளைக் காண்பதனால் எனக்கு என்ன கிடைக்கிறது. ஒன்றும் இல்லை. சிறிய ஆனந்தம்.ஒரு மகிழ்ச்சி. அவ்வளவு தான். இதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.  இந்த 20 வயதில் எந்தவித  லட்சியம் இன்றியும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் மீதான பயம் அதிகரிக்கிறது. போதும். எல்லாமே போதும். ஆனந்தியும் வேண்டாம் , எவளும் வேண்டாம் . நான் தனிமையாக இருக்க விரும்புகிறேன். சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். என் நண்பர்கள் நிறைய பேர் காதலிக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாலே எல்லாம் தெளிவாக விளங்குகிறது. அவர்கள் முன்பு போல் என்னிடம் பேசுவதில்லை. அவர்களுக்கு காதல் தான் முக்கியம். அந்தப் பெண் ஒருத்தி தான் முக்கியம். அவளோடு சுற்றுவது தான் முக்கியம். வீடு தேவையில்லை. நண்பர்கள் அவசியமில்லை. பெற்றோர்களைப் பற்றிய எண்ணங்கள் இல்லை. அவர்களுக்கு காதலியுடன் நேரத்தைச் செலவழிப்பதும், அவளோடு சண்டை போடுவதும் தான் முக்கியம் . எனக்கு அப்படியான ஒரு வாழ்க்கை வேண்டாம் . எனக்கு மனநிம்மதி தேவைப்படுகிறது. ஆனாலும் என் நண்பன் ஒருவன் என்னை மேலும் குழப்பம் அடையச் செய்கிறான்.

மச்சிஅந்த ஆனந்தி உன்னைத் தான் பாக்குறா. அவ பார்வையிலேயே அது தெரியுது . நானும் அதைப் பாத்திருக்கேன். உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு தானே. பின் ஏன்டா தயங்குற. பயப்படாம போய் எல்லாத்தையும் சொல்லிடு. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்”.

உலகில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் இப்படி ஒரு நண்பர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்அவர்கள் மீது தவறில்லை.நண்பர்கள் நல்லவர்கள். அவர்கள் நமக்கு நன்மை செய்வதையே விரும்புகிறார்கள். ஆனால் விளைவு அப்படி இருப்பதில்லை. எல்லாம் மாறாகத் தான் நடக்கிறதுசிக்கல்  இன்னும் பெரிதாகி விடுகிறது. என் மூளை எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத் தானே செய்கிறது. அவள் என்னைப் பார்க்த்து புன்னகை செய்கிறாளே. அவள் மனதிலும் நான் இருக்கத் தான் செய்கிறேனா? வேண்டாம். எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது. இது காதல் இல்லை .நிச்சயம். எனக்கு மட்டுமல்ல, இந்த வயது இளைஞர்கள் எல்லாருக்குமே இப்படிப் பல குழப்பமான எண்ணங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அந்தப் பெண்ணை என்னால் மறக்க இயலவில்லை. அவளை எனக்குப் பிடித்திருக்கிறது.

 இது எனக்கு கடவுள் போலத் தான் இருக்கிறது. இந்த நூற்றாண்டு அறிஞர்கள் பலரும் கடவுளையும், பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடவுளைக் கண்களால் கண்டால் மட்டுமே நம்புவேன் என  நாத்திகர்கள்  சொல்கிறார்கள் . உண்மையில் கடவுளை நாம் கண்டுவிட்டால் ? பிறகென்ன செய்வோம்? பிறகு எதைத் தேடுவோம். ஒன்றும் கிடையாது . அதன்பின் வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றதாக மாறிவிடும் .எனக்கு அது தேவையில்லை. ஆனந்தியும் அப்படித் தான். அவளிடம் பேசிவிடுவதால் நான் என்ன சாதித்து விடப் போகிறேன்? ஒருவேளை அவளும் பேசினால்? காதலித்தால்? .பின் என்ன நடக்கும்? எல்லாம் சலித்துப் போய்விடும். அவள் மீதான அன்பும், ஈர்ப்பும் குறைந்து போய்விடும்.அது இன்னும் வேதனையை அதிரிக்கும்.  அதனால் எனக்கு இந்தக் காதல் வேண்டாம்.
  
எந்தவொரு இளைஞனுக்கும் இந்த சிந்தனைகள் இருக்கும். இதற்காக கவலை கொள்வது அவசியமில்லாதது என்றே நினைக்கிறேன். முக்கியமாக , 20 வயதில் ஈர்ப்பு என்பது ஒரே  ஒரு பெண்ணின் மீது மட்டும் வருவதில்லை.அது நாம் பார்க்கும் நம் வயதில் இருக்கும் எல்லா பெண்களின் மீதும் தான் ஏற்படுகிறது. எனக்கும் அப்படியே. எனக்கு ஆனந்தியை மட்டுமல்ல,அவளைப் போன்ற எல்லா பெண்களின் மீதும் இந்த ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது . 20 வயதில் இந்த ஈர்ப்பு இல்லையென்றால் தான் பிரச்சனை . இளைஞர்கள் என்றால் இந்தக் குழப்பங்கள் இருந்தாகத் தான் வேண்டும்

என் வரையில் பெண்கள் நிலவைப் போன்றவர்கள். அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது. அதன் அருகே சென்று அதை எனதாக்கிக் கொள்ள  விருப்பமில்லை. அந்த ஒளியின் வசீகரம் போதும். அந்த குளிரான நிலவொளியில் இதமாக உணர்கிறேன். அந்த இன்பம் அளாதியானது. அளவிட முடியாதது. இதயத்தின் நடுவே,அழகான அருவி பாய்வது போல.

இதோ காலை 7 மணி .நான் ஆனந்தியைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். இப்போது என் கையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. அவள் பார்த்துவிடுவாள் என்ற அச்சம் இல்லைபயம் இல்லை. பார்த்துவிட்டால் என்ன நடந்துவிடும்? எனக்குக் கவலையில்லை. அவளைப் பார்க்க வேண்டும் . அது போதும். அவளும் பார்த்தால் இன்னும் சந்தோஷம். அதோ ஆனந்தி வந்துவிட்டாள் . ஆனால் இன்று அவளுக்குப் பின்னே இன்னொரு பெண் வருகிறாள். அவள் கொஞ்சம் அதிக அழகாகவே இருக்கிறாள். அவளும் இந்தத் தெருவில் தான் வசிக்கிறாள் என நினைக்கிறேன் .அவள் பெயரையும்  விசாரித்தாக வேண்டும்.

-அசோக்ராஜ்


Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182