டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு




ஏதோ டீ தினமாமே 
சிறுவயதில் தாத்தாவுடன் காலை நடை செல்லும் போது, டீக்கடைக்கு அழைத்துச் செல்வார். அவர் பின்னே கொஞ்சம் ஒளிந்து கொண்டு காப்பி வேண்டுமெனக் கேட்டுக் குடிப்பேன். அக்கடையில் டீயுடன் சிகரெட்டை ஊதிக் கொண்டிருப்பவர்களெல்லாம் கெட்டவர்களன்றி வேறு யாராகவும் இருக்க முடியாதென எண்ணிக் கொண்டிருந்த காலம். இப்போதும் சிரிப்பாகத் தானிருக்கிறது . கல்லூரி முடித்து வேலையின்றி ஊரில் திரிந்து கொண்டிருந்த ஏதோவொரு சுபயோக தினத்தில், ஒரே நாளில் 3 முறை பேருந்து நிலையம் இறைவன் அருள் டீக்கடைக்கு அழைத்துச் சென்று ஆரம்பித்து வைத்தான் மணி. இன்றும் முடிந்த பாடில்லை.  .
காலையில் எழுந்தாகிவிட்டதா டீ, போராடிக்கிறதா டீ, வருத்தமா டீ, ரயிலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறதா டீ, நண்பர்கள் சந்தித்திருக்கிறோமா டீ, இன்றைக்கு நாள் மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரி இருக்கிறாதா டீ, போன டீயைக் குடித்து ஒரு மணி நேரம் ஆகி விட்டதா , போடு அடுத்த டீயை.
எந்தவொரு நாளும் டீயின்றிக் கழிந்ததில்லை. ஆனால் மேலே சொன்னாதெல்லம் வீட்டில் போடுகிற தேநீருக்குப் பொருந்தாது என்பதையறியவும்  . கண்ணாடி தம்ளர் இல்லாமல் குடிப்பது டீயே இல்லையென்று முடிவு செய்து வருடங்களாகிவிட்டது. நானெல்லாம் பரவாயில்லை. ஒரு நாளைக்கு 10 முறை டீ குடிக்கும் மணியென்றொருவனிருக்கிறான்.
வேலைக்கென சென்னை வந்த பிறகு டீ குடிப்பதெல்லாம் முன்னைப்போல உற்சாகம் தருவதாகயில்லை. டீயாடா போட்றிங்க  சொல்லி வைத்தாற் போல சென்னையில் இருக்கிற எல்லா கடைகளிலும் பாலைவிட தண்ணீரே அதிகமாகயிருக்கிறது. குடிக்க முடியாத அளவு கசப்பு தான் நிறைந்திருக்கிறது.
ஊரில் சக்தி டீ ஸ்டாலில் உட்கார்ந்து குடித்தவைக்கும் , பேசியவைக்கும் கணக்கிருக்கிறதா என்ன. நடையாய் நடந்து, சைக்கிளில் அலைந்து எத்தனை கடைகளில் குடித்திருப்போம். விருதுநகரில் மூன்று சாலைகள் சந்திக்கிற எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் நானும் மணியும் கோபாலும் டீ குடித்த ஒரு கடையை உறுதியாகப் பார்க்கலாம்  . ஹூம் . டீயுடன் சேர்ந்த சுவையான நினைவுகளையெல்லாம் ஊரிலேயே விட்டுவந்த மாதிரி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182