கைவிடப்படுதல்

தேநீர் கடையில் அமர்ந்து

கைகளில் முகம் புதைத்து அழுது

கொண்டிருந்தவனுக்கு அருகில்

ஒரு நிழல் விழுந்தது,


தோள்களில் ஒரு கைபட்டதும்

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்


நீண்ட மேலங்கி, அழுக்கடைந்த தாடி

நெருப்பெரிகிற கண்கள்


"இயேசு கிறுஸ்துவா ?" என்றான்


ஆம் நானே தான், அப்படியென்ன உனக்கு நடந்துவிட்டது,

ஒரு தேநீர் குடிக்கலாமா என்றார்


கைவிடப்பட்டவர்களின் துயரம்

உன்னைப் போன்ற கடவுள்களுக்கு

தெரிந்துவிடப் போகிறதா என்ன

என்னைக் கொஞ்சம் தனிமையில்

விடுங்களேன்


மெலிதாகச் சிரித்துக் கொண்ட இயேசு சொன்னார்

கடவுளாவதற்கு முன்பு நானும் ஒரு

மனித குமாரன் என்பதை மறந்துவிட்டாயா,

நான் நேற்று தான் என் தேவனால்

கைவிடப்பட்டேன்,

சிலுவையில் அறையப்பட்டேன்,

தாகமாயிருக்கிறதென பரிதவித்து அழுதேன்,

இன்றைக்கு நீ அழுகிறாய்,

நாளையும் பலர் அழப் போகிறார்கள்

என் தோழனே,


கைவிடப்படுதல் என்பது யுகங்கள்தோறும்

தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது

கைவிட்டப்பட்ட ஆயிரமாயிரம் கரங்கள் ,

காற்றில் தன் பிடிமானங்களை

தேடி அலைகின்றன


திரும்பவும் பற்றிக் கொள்ள

கைகள் கிடைத்துவிடுமென பரிதவிக்கின்றன


ஆனால் நம் வேண்டுதல்கள்

நிறைவேற்றப்படுகிறதா என்ன


ஆனாலும் எனக்கு

பெரிய மனக்குறைகள் இல்லை மகனே

நான் சிலுவையில் சிந்திய ரத்தம்

உலகின் பாவத்தை போக்கியது


அதுபோல் உன் கண்ணீரும்

நாளை சில பாவங்களை துடைக்கலாம்

பலரை மீட்கலாம்

நம்பிக்கையோடு இரு

ஒரு சிகரெட் சொல்லட்டுமா என்றார்


இருளடைந்து இருந்தவனுக்கு

ஏதோ ஒளிக்கீற்று வந்தது போல இருந்தது,

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு

அவன் எழ முயன்ற போது

இயேசு மெல்லிய குரலில்


"ஆனால் ஆனால்"


ஆனால் என்ன தேவகுமாரனே,

வாருங்கள் போகலாம்


ஆனால் என்னதானிருந்தாலும்

கைவிடப்படுதலைப் போன்ற ஒரு

வலிமிக்க துயரம் இவ்வுலகில்

இருக்கிறதா என்ன என்று

அழுது கொண்டே நடக்கத் தொடங்கினார் இயேசு


-அசோக்ராஜ்




Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182