ஒரு Fan Boy ன் பிறந்தநாள் வாழ்த்து

 


கல்லூரி இறுதியாண்டில் தான் ,பாடத்துக்கு வெளியே தமிழில் கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். எழுத்தாளரைப் பற்றியெல்லாம் தெரிந்து புத்தகத்தை தேர்ந்தெடுக்கத் தெரியாது. ஆனால் கிழக்குப் பதிப்பகமென்றால் சிறிதும் யோசனையின்றி எடுத்துக் கொள்வேன். அதற்கு முன் சொக்கனை இடைவிடாது படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம் :) . குறிப்பாக வாழ்க்கை வரலாற்று நூல்கள். அப்படித்தான் திருச்சி கார்முகில் நிலையத்தில் ஒருநாள் ,ஹிட்லரின் படத்தோடு கூடிய கிழக்குப் பதிப்பக நூலை பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி கல்லூரி விடுதிக்கு வாங்கிக் கொண்டு போய் வாசிக்கத் தொடங்கினேன்.

வழக்கமான வாழ்க்கை வரலாறு போல் இதுவும் ஒன்று என படிக்க ஆரம்பித்தவனுக்கு எதிர்பாரத ஆச்சரியம். முதல் அத்தியாயமே ஹிட்லரின் மரணத்தில் தொடங்கியது. பிறந்த நாளன்று காலையில் எழுந்த ஹிட்லர் கொஞ்சம் கொஞ்சமாக அன்று மரணத்துக்காக தயாராவதைப் பற்றியது. அதுவரை நான் வாசித்திராத ஒரு மொழிநடை. அந்த உணர்வை  இன்றைக்குமே சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் போனது, சாப்பிட்டேனா இல்லையா எதுவும் தெரியவில்லை. முழு புத்தகத்தையும் வாசித்து முடித்த பிறகு தான் நிமிர முடிந்தது. அந்த மொழிநடை. எப்படி இந்த ஆள் இப்படி எழுதுகிறார், இப்படியெல்லாம் கூட வரலாற்றை சொல்லிக் கொடுக்க முடியுமா, எங்கே போய் இந்த மொழிநடையை கற்றுக் கொண்டிருப்பாரென பல நாட்களாக ஆச்சரியத்திலேயே தான் கிடந்தேன். 


அதன் பிறகு ஒவ்வொரு முறை ஊருக்குப் போய் வரும்போதும் திருச்சி வாடகை நூலகத்தில் பாரா நூல்களை கட்டுக்கட்டாக வாங்கி வரத் தொடங்கினேன். தூக்கம், உணவு, சுற்றுப்புறம் என எதிலும் கவனமற்று அறை கட்டிலில் படுத்துக் கொண்டு வாசித்துக் கொண்டேயிருப்பேன். இன்றைக்கு விடுதி அறையை நினைத்தால் டாலர் தேசமும், நிலமெல்லாம் ரத்தமும்,பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயுமே நினைவுக்கு வருகின்றன. பாரவின் அத்தனை அபுனைவு நூல்களையும் வாசித்துத் தீர்த்துவிட வேண்டுமென்று வெறிகொண்டு வாசித்த நாட்கள். நானா அப்படியெல்லாம் படித்தேன் என இன்றைக்கு யோசிக்கிற போதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. 

இது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம். வரலாறு,உலக அரசியல், தீவிரவாதம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதென்பதை விட அந்த மொழி நடையைப் படித்து கிறங்கிக் கிடப்பதே எனக்கு பிரதானமாக இருந்தது.


கிட்டத்தட்ட ஒரு வழிபாடு. 


டாலர் தேசத்தில் அவர் காட்டிய அமேரிக்கா. இன்றைக்கும் மறக்க முடியாது. 


வரலாற்றை ஏன் தட்டையாகவும், முன் முடிவுகளோடும் அணுகக் கூடாது என்றும், இரண்டு பக்கங்களையும் அலசிப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் பாரா தான் கற்றுக் கொடுத்தார். 



கிழக்கின் பதிப்பாசிரியராக பாரா செய்த பணி அளவிட முடியாதது. அக்காலத்தில் கிழக்கு வெளியிட்ட நூல்களின் வேகமும் தரமும் அவர் அறிமுகப் படுத்திய எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் நம்மால்  கற்பனை செய்ய முடியாதது. அபுனைவு நூல் வெளியீட்டில் தகர்க்க முடியாத சாதனை அது.


பாரா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். "என்னதான் எழுத்துங்குறத Passion, Dream னு லாம் சொல்லிக்கிட்டாலும்,அதுக்கு பின்னாடி ஒரு பெரிய லேபர் வொர்க் இருக்கு. உழைக்கணும். அத தர முடிஞ்சவங்களால மட்டு இங்க சாதிக்க முடியும்"


இதை சொல்கிறேனென்றால் , அதை அவர் எந்நாளும் செய்கிறவர். அவர் மொழியில் சொல்வதென்றால் பேய்த்தனமான உழைப்பு. கிழக்கிலிருந்து வெளியே வந்த பிறகும் கூட நான்கைந்து சீரியல்களுக்கு எழுத வேண்டிய வேலைப் பளுவின் நடுவே தான் ஐஎஸ், தாலிபான், யதி, பூனைக்கதை என அனைத்தையும் எழுதினார்.


50ஆம் வயதில் நுழைகிறார் பாரா.அதிசயங்களை கண்டு பிரம்மிக்கவும் வணங்கித் தொழவும் மட்டுமே முடியும். வணங்குகிறேன்.



Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182