கேள்வி எண் 17182
நான் பணிசெய்கிற மென்பொருள் துறையில் ,முக்கியமான வேலை செய்கிற ஆனாலும் பெரிதாக கண்டுகொள்ளப் படாத ஒரு சாரார் உண்டு. அவர்கள் டெஸ்டிங் குழுவைச் சேர்ந்தவர்கள். டெவலப்பர்கள் நிரல் எழுத, ஒவ்வொரு பகுதியாக அதை சோதனை செய்து கொண்டே இருப்பர் டெஸ்ட்டர்கள். இரு குழுவும் கிட்டத்தட்ட போரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலத் தான் மனதளவில் எண்ணிக் கொள்வார்கள். கடினப்பட்டு மணிக்கணக்காக நிரல் எழுதி தான் உருவாக்கிய மென்பொருளில் , குறைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது டெவலப்பருக்கு கோபம் உச்சத்தில் ஏறும்.
இருக்கிற பணியின் நடுவே அந்தக் குறைகளையும் சரிசெய்து ,அதன்பின் பாதியில் விட்ட பணியையும் தொடர்ந்து ப்ராஜக்டை முடிப்பதற்குள் தலைவலி தான். நாம் இவ்வளவு வேலை செய்கிறோமே, இவன் சுலபமாக குறை கண்டுபிடிக்கிறானே, இவனால் தான் ப்ராஜக்டே நகர மாட்டேன் என்கிறது என்று மனம் கொதிக்கும். குறை கண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேலையா என்று தோன்றும். ஒருவேளை நம்மை தனிப்பட்டு பழிவாங்குகிறானோ என்று கூடத் தோன்றும். ஆனால் கொஞ்சம் விலகி நின்று பொறுமையாக யோசித்தால் புரியும் .
அந்தக் குறைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டு , அதைப் பரிசீலித்தால் மென்பொருள் அசாதாரணமான தரத்தில் உருவாகக் கூடிய சாத்தியங்கள் அதிகரிக்கும். சுற்றி வளைத்து இறுதியில் டெவலப்பருக்கே அது நன்மையாக முடியும். டெஸ்ட்டர்கள் வெறும் குறை கண்டுபிடிப்பவர்களாக மட்டுமின்றி,மென்பொருளின் தரத்தை உயர்த்தவே மெனக்கெடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழக அரசிற்கு அப்படியான ஒரு டெஸ்ட்டர் தான் சவுக்கு சங்கர். இடைவிடாது, ஓய்வின்றி அரசின் தவறுகளை கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். சமீபத்திய இணைய வளர்ச்சியால் புகழ் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அவரின் சமூக செயல்பாடுகளை இருபதாண்டுகளுக்கு முன்பே தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் . இதைப் பற்றிய தகவல்களை அவரது முந்தைய புத்தகமான ஊழல் உளவு அரசியல் புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருப்பார். இந்தப் புத்தகம் கேள்வி எண் 17182 சவுக்கின் சமீப கால சிறைவாசம் பற்றியது .
கசப்புகளுக்கு அப்பாற்பட்டு கவனித்தால் , சவுக்கு எந்த கட்சிக்கும் சார்பற்றவர் என்பதை தெளிவாக உணரலாம். சென்ற ஆட்சியில் முழுமூச்சாக அதிமுகவை விமர்சித்த சவுக்கு திமுகவினரால் பெரிதாக பாரட்டப்பெற்றார். அவரின் பேட்டிகள், அவர் கூறிய தகவல்களை அன்றைய எதிர்கட்சியாக இருந்த திமுக மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்தது.
அதற்கு தேர்தலில் நல்ல பலனும் கிடைத்தது. அதில் நிறைய குற்றச்சாட்டுகள் தானே சேகரித்து, திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மூலமாக திமுகவிற்கு கொடுத்து , அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று சவுக்கே இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சவுக்கிற்கு பிரச்சனைகள் வரத் தொடங்குகின்றன. கட்சிக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டாளராக திமுக அரசின் ஊழல்களையும் சவுக்கு தொடர்ந்து வெளிக் கொண்டு வருகிறார். ஆனால் இது திமுக அரசிற்கு தலைவலியைக் கொடுக்கிறது. இத்தனை நாள் தங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தவர் இப்படி எதிர்த்து நிற்பதைக் கண்டு, அவர்களின் ஆணவமும் கொஞ்சம் சீண்டப் படுகிறது. சவுக்கை வேட்டையாடுவதற்கான முயற்சிகளைத் தொடங்குகிறது திமுக அரசு.
அவசர அவசரமாக தொடங்கி , மிக விரைவில் முடிக்கப்பட்ட ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்க வைக்கப் படுகிறார் சவுக்கு. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்து, ஆறு மாதங்கள் சிறை தண்டனையை ஏற்றுக் கொள்கிறார். சிறிய மன்னிப்பு தான், எளிதாக தப்பியிருக்கலாம் தான். ஆனால் சவுக்கு கடினமான பாதையையே தேர்ந்தெடுக்கிறார். இதை வியக்காமல் மேலே செல்லவே முடியாது. ஆனால் இப்படியான உறுதி தான் இருபது வருடங்களுக்கு மேலாக அவரை செயல்பட வைத்துக் கொண்டேயிருக்கிறது. அந்த உறுதி தான் வலிமையான அரசுகளை எதிர்த்தும் சமர் செய்ய வைத்திருக்கிறது
அரசாங்கத்தின் தவறுகளை தொடர்ந்து விமர்சிக்கக் கூடிய ஒரு தனிமனிதன், கையறு நிலையில் எப்படியெல்லாம் துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
சிறைக்குள் அவர் உண்ணாவிரதமிருக்கிற பகுதிகள் ரொம்பவே உணர்ச்சிகரமானவை. அநியாயமான முறையில் பணிநீக்க உத்தரவுக்கான மெமோ வழங்கப்படுகிறது. அதை வாங்க மறுத்தபோது, சிறைக்காவலர்கள் அவர் சிறைக்கம்பியில் நூலால் கட்டி வீடியோ எடுத்து அவர் அதை பெற்றுக் கொண்டதாக பதிவு செய்கிறார்கள். அதை எதிர்த்து உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் உயிர் போவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. அவரது உறுதியைக் கண்டு சிறைக்காவலர்கள் அஞ்சினாலும், பெரிதாக பலனில்லை. அவரது வேலை பறிக்கப்படுகிறது.
ஜாமீன் வாங்குவதற்காக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்ய முயற்சிக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் எந்த மூத்த வழக்கறிஞரும் அவருக்காக வாதாட முன்வரவில்லை. இறுதியில் ஒரு வழக்கறிஞரின் உதவியால் ஜாமீன் கிடைக்கிறது.
ஆனால் அவர் விடுதலை ஆவதற்கான இறுதி நாளில் மீண்டும் அவர்மீது நான்கு வழக்குகள் சென்னை காவல் துறையால் பதிவு செய்யப்படுகிறது. நான்கு வழக்கு என்பதால் ,குண்டர் சட்டம் பதிவு செய்து ஜாமீனுக்கான வாய்ப்பின்றி , அவரை மீண்டும் உள்ளே அடைத்துவிட முடியும். சுவாரஸ்யம் என்னவெனில் அவை எல்லாமே அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் நரேந்திர மோடியையும் விமர்சித்து எழுதப் பட்ட பதிவுகள். அதற்கு இன்றைய ஆட்சி அறச்சீற்றம் கொண்டு அவரை தண்டிக்கிறது. வினோதம் தான். ஆனாலும் சட்டத்தின் துணையால் அதிலிருந்து வெளிவருகிறார். கடலூர் சிறையின் சூப்பரிண்டட் செந்தில்குமாரால் சிறைக்காலம் முழுவதும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருக்கிறார்.
இதில் சவுக்கு பேசியிருக்கும் இன்னொரு முக்கியமான தகவல் ,போக்சோ வழக்கு எப்படி இளைஞர்கள் மீது தவறாக உபயோகப்படுத்தப்பட்டு அவர்களை வாழ்வை நசுக்கிறது என்பதைப் பற்றியது. பெரும்பாலானவை காதல்கள் தான். பெண் வீட்டாரின் சூழ்ச்சியால், போக்சோ வழக்காக உருவாக்கப்பட்டு அந்த ஆண்களின் வாழ்க்கை அழிக்கப் படுகிறது.
சிறை என்பது ஒரு கைதியை மனம் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களை இன்னும் துயரத்திற்குள் தள்ளி , அவர்களை அதிலிருந்து வெளிவரவே முடியாத சுழலுக்கு தள்ளுவைதைத் தான் சவுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
சவுக்கின் அனுபவங்கள் மட்டுமல்லாது, சிறைத்துறை பற்றியும், ஒரு சிறை எப்படியெல்லாம் இயங்கிறது என்பதையும், ஒரு சாமானியனை அதிகாரம் எப்படியெல்லாம் நசுக்கி அழிக்கும் என்பதையும் அறிந்து கொள்ள மட்டுமல்லாது , உணரவும் முடியும். ஒரு சிறையில் கைதி உள்ளே வருவது தொடங்கி, அவரின் தினசரி செயல்பாடுகள், சிறையின் விதிகள்,சட்டதிட்டங்கள், அவர்களுக்கான உரிமைகள், என சிறைத்துறை பற்றிய ஒரு முழுமையான கையேடாகவும் இதை நாம் வாசிக்க முடியும்.
நாம் முதலில் சொன்னது போல, சவுக்கு தமிழக அரசுக்கான ஒரு கண்டிப்பு மிகுந்த டெஸ்ட்டர். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறார். நிச்சயம் அரசுப் பொறுப்பில் இருப்பவர்களின் ஆணவம் சீண்டப்படலாம். ஒரு அசுரபலம் கொண்ட அரசு, தன்னை நோக்கி குறைகளைச் சொல்லும் சாமானியனை எளிதாக நசுக்கிவிடலாம் தான். பார்த்தாயா உன்னை என்ன செய்தேன் என கொக்கரித்துச் சிரிக்கலாம் தான். ஆனால் அதனால் பைசா பிரயோஜனம் இருக்கிறதா என்ன. யாருக்குமே லாபமற்ற வழி அது.
சவுக்கு மாதிரியானவர்கள் அரசுக்கு மிகப் பெரிய நல்வாய்ப்புகளைத் தான் மறைமுகமாக அளிக்கிறார்கள். இவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நீக்கினால், மக்களிடம் நன்மதிப்பை பெற்று, அரசு இன்னும் சிறப்பாக செயல்படவே வாய்ப்பை அளிக்கும்.
நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
வாசிக்கிறேன் நன்றி ☺️
ReplyDelete100% I agree with you bro.
Delete