மண்ணில் உப்பானவர்கள்
தண்டியாத்திரை அல்லது உப்புசத்தியாகிரகம். இவ்விரு வார்த்தைகளையும் நிச்சயம் அனைவரும் கடந்து வந்திருப்போம். அதைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது தான். ஆனால் எல்லோருமே அதன் தீவிரத்தையும் ,அன்றைய காலத்தில் அதன் தேவையையும், அது மக்களிடையே உண்டாக்கிய தாக்கத்தையும் உணர்ந்திருப்பதன் சாத்தியங்கள் குறைவு. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு நடந்து சென்று, ஒரு பிடி உப்பை கையில் அள்ளுவதன் மூலம், சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் அரசை பயம் கொள்ள வைக்க முடியுமா எனத் தோன்றுவது இயல்பு தான். ஆனால் அதுவே நடந்தது.
இப்போராட்டத்தின் அத்தனை தகவல்களையும் ,அவ்வளவு விரிவாகவும் நுட்பமாகவும், அதேநேரத்தில் உணர்ச்சிகரமாகவும் தனது ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சித்ரா பாலசுப்ரமணியன்.
இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமே, அதன் கட்டமைப்பு தான். போராட்டம் பற்றிய தகவல்களுக்கு முன், அதில் காந்தியுடன் பங்கு பெற்ற ,நாம் கவனிக்கத் தவறிய அல்லது மறந்து போன களச்செயல்பாட்டாளர்கள் அத்தனை பேரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார் சித்ரா.
ஒவ்வொரு நாளும் காந்தி பயணித்த ஊர்கள், அங்கே நடந்த நிகழ்வுகள், காந்திய ஆற்றிய உரைகள் என மிக விரிவான தகவல்கள்.
இதைப் படித்து முடிக்கிற போது, காந்தி இன்னும் பிரண்டமாகவே மனதிற்குள் நின்றார்.
அன்றைய இந்தியாவில் இப்போராட்டத்தின் முக்கியத்துவம் பெரும்பாலானோருக்குப் புரிந்திருக்கவில்லை. நிறைய காங்கிரஸ் தலைவர்களே அரைமனதுடன் தான் சம்மதித்திருக்கின்றனர். அன்றைக்கு நிலவி வந்த அத்தனை பிரச்சனையில் ,உப்புவரியை எதிர்த்து போராடுவது அவ்வளவு தேவையானதா என்பதே அனைவரின் சந்தேகமும். ஆனால் காந்தி தீர்க்கமாகவே இருந்தார் .அதன் அவசியத்தை வலியுறுத்தி வெற்றிகரமாக செயல் படுத்திக் காட்டினார்.
மனித உடலுக்கு உப்பு எவ்வளவு அவசியமானதென எல்லாருக்குமே தெரியும். அன்றைய பிரிட்டிஷ் அரசு தன் பத்தில் ஒருபங்கு வருமானத்தை உப்பின் மீது விதிக்கிற வரியின் மூலமே பெற்றது. ஒரு சராசரி இந்தியக் குடும்பம், தன் மாத வருமானத்தின் கணிசமான தொகையை உப்பு வரிக்காக மட்டுமே செலவழிக்க வேண்டியிருந்தது. அது இன்னும் அவர்களை ஏழ்மையை நோக்கித் தள்ளியது. அதை எதிர்த்தே காந்தி தன் போராட்டத்தைத் தொடங்கினார். உப்பையும் தாண்டி, ஒத்துழையாமையை உண்டாக்குவதே காந்தியின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. என்னதான் பலம் பொருந்திய பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு அளிக்கிற மதிப்பே அவர்களை நிலைபெறச் செய்தது. ஆயுதங்களும் பீரங்கிகளும் அல்ல . அந்த மதிப்பை ஒழித்து, மக்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் எந்தவொரு அரசுமே சீட்டுக்கட்டு போல சரிந்து விழும் என்பதை காந்தி தெளிவாக உணர்ந்திருந்தார்.
சபர்மதியில் தொடங்கி தண்டியை நோக்கி 79 சத்தியாகிரகிகளுடன் தொடங்கினார் காந்தி.26 நாட்களில் 240 கிமீ நடை பயணம்.இப்பயணத்தில் உணர்ச்சிகரமான அம்சம், அவர்கள் பயணித்தது முழுக்கவே கிராமங்களின் வழியான சாலைகள். கிராமங்கள் மற்றும் அங்கிருக்கும் மக்கள் இந்நாட்டிற்கு எத்தனை முக்கியாமனவர்கள் என்பதை காந்தி இதன் வழியாகவே தெரிவித்தார். ஒவ்வொரு கிராமங்களிலும் அலை அலையாக மக்கள் திரண்டு ,காந்தியை வரவேற்று, அவர்களும் இணைந்து கொண்டனர்.
காந்தி விதித்த முக்கியமான விதி, சத்தியாகிரகிகள் அந்தந்த கிராம மக்கள் அளிக்கிற எளிமையான உணவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எதன் பொருட்டும் மக்களை கடினப்படுத்தக் கூடாது.
இடையில் ஏக இடர்பாடுகள். அத்தனையும் கடந்து 26ஆம் நாள் காந்தி தண்டி என்ற ஊரின் கடற்கரையில் ஒரு பிடி உப்பை அள்ளி உயர்த்திக் காட்டினார்.
அந்த பிடி உப்பின் மூலம் ’இது எங்கள் நாடு, இனி நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு காந்தி சொன்னார்.
தண்டி யாத்திரை மட்டுமல்லாது, தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் நடந்து வேதாரண்ய யாத்திரையையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார். அதே போல் அதில் பங்கு கொண்ட,அதற்கு உதவி புரிந்த முக்கியமாக அத்தனை பேரையும் பதிவு செய்திருக்கிறார்.
இதில் திரும்பத் திரும்ப வியக்க வைப்பது எதுவென்றால், அன்றைக்கு காந்தியின் அழைப்பின் பெயரில் அல்லது காந்தி மீது கொண்ட பற்றினால் அத்தனை ஆயிரம் இளைஞர்கள் தன் வேலைகளையும், வசதி கொண்ட வாழ்வு முறையையும் உதறிவிட்டு, காந்தியுடன் இணைந்து கொண்டனர். எப்படியான ஒரு லட்சியவாத தலைமுறையை காந்தி உருவாக்கியிருக்கிறார்.
நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியாம புத்தகம்.
-அசோக்ராஜ்
Comments
Post a Comment