800





 இன்றைய கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பேட்டிங்கிற்காகவே பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்டிங்கை கொண்ட போட்டிகளாலும், பேட்ஸ்மென்களாலும்தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்பதே உண்மை. அப்படியொரு காலத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னரைப் பற்றி திரைப்படம் நமக்கு என்ன உற்சாகம் தந்துவிடப் போகிறதென்று நிறைய பேர் நினைக்கலாம். எனில் அவர்கள் முரளியின் வாழ்க்கையைச் சொல்லும் 800 திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும். விளையாட்டு வீரர்களைப் பற்றிய திரைப்படங்களில் இப்படத்திற்கு கண்டிப்பாக ஒரு தனி இடம் கிடைக்கும்.


முரளியின் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமில்லாது , அதில் தலைசிறந்த இடத்தைப் பிடிக்க அவர் எத்தனை தூரம் போராட வேண்டியிருந்தது என்பதையும் , கிரிக்கெட்டுக்கு வெளியே முரளி எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதையும் தான் இப்படம் முக்கியமாக நமக்குக் காட்டுகிறது.


முரளி 800 விக்கெட் எடுக்கிற கடைசி போட்டியின் போது ஒரு பத்திரிக்கையின் தலைமை எடிட்டர் நாசருக்கும் ,இன்னொரு பத்திரிக்கையாளருக்குமான உரையாடலாகவே இப்படம் தொடங்கும்


வாழ்நாள் முழுவதும் தனது பௌலிங் ஆக்சனுக்காகவும் தன் இனத்திற்காகவும் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருக்கிறார் முரளி.


பெரும்பாலான காட்சிகள் நம்மை உணர்ச்சியின் விளிம்பிளேயே தான் வைத்திருக்கும்.  தன் நாடான இலங்கையில் முரளி பிறந்த தமிழனம் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகிறது . தமிழன் என்பதற்காக நிறைய இடங்களில் சிங்களர்களால் அவமதிக்கப்படுகிறார்.


ஆனால் அப்படியான சிங்களவர்கள் மத்தியில்தான், முற்றிலும் மாறுபட்ட அர்ஜுனா ரனதுங்காவும் இருந்தார். முரளியின் கிரிக்கெட் வாழ்வில் அர்ஜுனா மிக முக்கியமானவர். முரளி பிரச்சனைகளையும், அவதூறுகளையும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் அர்ஜுன ரனதுங்கா தான் உடன் நிற்கிறார். முரளியை காப்பாற்ற போராடுகிறார்.



ஆஸ்திரேலியாவுடனான அவர் விளையாடிய ஒரு தொடரில் ,முரளியின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸி வீரர்கள் திணறுகின்றனர். இப்படியொரு பந்துவீச்சை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. முரளியின் பௌலிங் ஆக்சனை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். அவர் கையை வளைத்து பந்தை எறிவதாக புகாரளிக்கின்றனர். 


ஆனால் உண்மையில் இயற்கையாகவே முரளியின் கை சற்று வளைந்திருக்கக் கூடியது. அதனால் அவர் பந்துவீசும்போது, எறிவது மாதிரி ஒரு மாயை ஏற்படுகிறது. பவுலிங் டெஸ்ட் மூலம் ஐசிசியிடம்  தன்னை நிரூபிக்க முடிவெடுக்கிறார் முரளி. வளைக்கவே முடியாத அளவு உறுதியான உலோகத்தாலான ஒரு கவசத்தை அணிந்து கொண்டு அதே துல்லியத்தில் பந்துவீசிக் காட்டுகிறார். ஐசிசி அவர் பந்துவீச்சை அங்கீகரிக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் பந்தை எறிவதாக எதிரணி வீரர்களால்  ஸ்லெட்ஜ் செய்யப்படுகிறார்.


இத்தனைக்குப் பிறகும் இங்கிலாந்துடனான ஒரு போட்டியில் முரளி வீசுகிற ஒவ்வொரு பந்தையும் அம்பயர் நோபாலாக அறிவிக்கிறார். கேப்டன் ரனதுங்கா இப்படியான ஒரு நிலையில் முரளியை பந்துவீச வேண்டாமெனச் சொல்லியிருக்கலாம். ஆனால் ரனதுங்கா முரளிக்கு அரணாக நிற்கிறார். எத்தனை முறை முரளி நிரூபித்துக் கொண்டே இருக்கமுடியுமென அம்பயரிடம் கூறிவிட்டு, தன் மொத்த அணியையும் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றுவிடுகிறார். இதனால் அர்ஜுன ரனதுங்காவின் கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகும் அத்தனை சாத்தியங்களும் உண்டு. ஆனால் அவர் முரளியின் பக்கமே நிற்கிறார்.


பின் மீண்டும் ஒரு ஐசிசி பவுலிங் டெஸ்ட். மீண்டும் உலோகக் கவசம்.

இந்தமுறை தன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்

அன்றைக்கு கிரிக்கெட் உலகம் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்கிறது. பொதுவாக எந்தவொரு பவுலாராலும் கையை சிறிது வளைக்காமல் பவுலிங் செய்யமுடியாது. அதனால் ஐசிசி ஒரு விதிமுறை வகுத்திருந்தது. ஸ்பின் பவுலர்கள் 5டிகிரி கையை வளைக்கலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் 10டிகிரி. 

முரளியை சோதிக்கும்போது , மற்ற வீரர்கள் எவ்வளவு கையை வளைக்கின்றனர் என பரிசோதிக்கின்றனர் ஐசிசி நிபுணர்கள். ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வருகிறது.  க்ளென் மெக்ரா, ஜிம்மி ஆண்டர்சன், ஸகீர் கான் என பெரும்பாலான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் 10டிகிரிக்கு அதிகமாகவே கையை வளைக்கின்றனர். எனில் அவர்கள் அத்தனை பேரின் பவுலிங் ஆக்சனும் தவறானதுதானே. எனவே ஐசிசி ஒரு புதிய விதிமுறையைக் கொண்டு வருகிறது. இனி பவுலர்கள் 15டிகிரி வரை கையை வளைக்கலாம். வெறும் கண்களால் பார்த்து ஒருவர் பந்தை எறிகிறார் எனச் சொல்வது எத்தனை அபத்தமானது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

முரளி தன் சோதனையின் மூலம் அத்தனை பவுலர்களையும் காப்பாற்றியிருக்கிறார்.


இத்தனை இன்னல்களையும் மீறித்தான் கிரிக்கெட் உலகிலேயே அதிக பட்சமாக 1347 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் முரளி.


முரளி எதிர்கொண்ட இன்னொரு சிக்கல் வித்தியாசமானது. முரளிக்கு தமிழர்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகம். அவரின் முந்தைய தலைமுறை பெரும்பாலும் இந்தியாவில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். எனில் இந்தியாவும் இலங்கையும் விளையாடும் போது இவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும். முரளியும் ,அவரின் மனைவியும் பொதுவிடங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தக் கேள்விகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் முரளி இவற்றைக் கடந்து தன்னை ஒரு கிரிக்கெட்டராக மட்டுமே நினைக்கிறார். முரளி இச்சிக்கல்களை எதிர்கொண்ட விதம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.


விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய முரளியின் கருத்துக்களும் ரொம்பவே அபத்தமானது. முரளி கொண்டிருந்த தவறான கருத்துக்களும் இப்படித்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


முரளியாக நடித்திருக்கும் மாதுர் மிட்டல் ,கிட்டத்தட்ட முரளியாகவே மாறியிருக்கிறார். அத்தனை தத்ரூபமாக முரளியை நம் கண்முன்னே கொண்டுவருகிறார். இயக்குநர் ஸ்ரீபதிக்கு பாராட்டுகள்.


அரசியல், இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து ஒரு விளையாட்டு வீரனை ஏன் கொண்டாட வேண்டுமென்றே இப்படம் சொல்ல முயற்சிக்கிறது.


படத்தின் தொடக்கத்தில் அந்தப் பத்திரிக்கையாளர் நாசரிடம் கேட்பார், “முரளி 800 விக்கெட் எடுப்பதால் எங்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது”. 


ஒரு மலையகத் தமிழனாக முரளி வந்து சேர்ந்த இந்த இடம் அத்தனை எளிதானதும் , சாதரணமானதுமல்ல என்பதை இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது உணர முடியும். 



Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை