சில வருடங்களாக அமேரிக்கர்கள் வியந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்கும் பெயர் ”கே.ஆர்.ஸ்ரீதர்”.யார் இந்த ஸ்ரீதர்? என்ன செய்தார்? இவர் கண்டறிந்த ப்ளூம் எனெர்ஜி(Blomm Energy) என்னும் ஆற்றல் உலகையே இவர் பக்கம் திருப்பியுள்ளது.
”என்னய்யா இது! இந்த மின்சாரத்தைத் தயாரிக்க தான் இத்தனைப் பாடா? அணுசக்தியாம்,அனல்மின் நிலையமாம்,ஜெனெரேட்டராம்.இதனால் சுற்றுச் சூழலுக்கு எத்தனைப் பாதிப்பு தெரியுமா? ஒன்றும் செய்ய வேண்டாம்.என்னோடு வா.பெட்டியை எடு ,இணைப்பைக் கொடு,மின்சாரத்தைப் பெறு,முடிந்தது வேலை”
இதுதான் இவரது சித்தாந்தம்.ஸ்ரீதர் திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில்(NIT) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.பின் மேற்படிப்பிற்காக அமேரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில்




இணைந்தார்.அங்கு நியூக்லியர் டெக்னாலஜி துறையில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று அங்கிருந்து வெளியேறினார்.ஸ்ரீதர் செய்த சிறந்த ஆராய்ச்சிகளுக்காக நாசா அவரைத் தன்னுடைய ஆராய்ச்சியாளார் குழுவில் இணைத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்(Aero space technologies) ஆய்வுக்கூடத்தின் இயக்குனராகவும் நியமிக்கப் பட்டார்.2001 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் “MARS MISSION” என்னும் திட்டத்தை தொடங்கியது நாசா.இதற்காக ஸ்ரீதரின் குழுவிற்கு  கொடுக்கப்பட்ட வேலை,எப்பாடுபட்டாவது மின்சாரத்திலிருந்து ஆக்ஸிஜனைத் தயாரிக்கும் ஒரு இயந்திரத்தை உண்டாக்கிவிட வேண்டும்.அது போதும்.கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாய் செய்து முடித்தார்.ஏதோ சில பொருளாதார சிரமங்களால்  MARS MISSIONஐ நிறுத்தியது நாசா.ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பை வீணாக்க ஸ்ரீதருக்கு விருப்பமில்லை.யோசித்தார்.ஆழமாய் யோசித்தார்.மின்சாரத்தை அனுப்பி ஆக்சிஜனை உருவாக்குவது சாத்தியமெனில்,ஆக்சிஜனை அனுப்பி மின்சாரத்தை பெற முடியுமா? ஏன் முடியாது? முயற்சி செய்தால் தவறில்லை.நல்லது.இதுதான் ப்ளூம் எனெர்ஜியின் தொடக்கம்.குறுகிய காலத்திலேயே இதை அசாதாரணமாய் செய்து முடித்தார்.இதன்  பிறகுதான் ஸ்ரீதரின் தலைமயில் ப்ளூம் எனெர்ஜி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.ஸ்ரீதர் தான் அதன் முதன்மை அதிகாரி(CEO).அவர்கள் உருவாக்கிய இயந்திரத்தின் பெயர் ப்ளூம் பாக்ஸ்(Bloom box).நாம் பள்ளி நாட்களில் அறிவியல் பாடத்தில் படித்த FUEL CELL தான் ப்ளூம் பாக்ஸின் அடிப்படை.இதன் முக்கிய தேவைகள் ஆனோட்(anode),கேத்தோட்(cathode).இவைகள் இரண்டையும் சேர்த்து எலெக்ட்ரோட்(electrode) எனக் கூறலாம்.மற்றொரு அடிப்படை தேவை எலெக்ட்ரோலைட்(electrolyte).எலெக்ட்ரோலைட்டை நடுவில் வைத்து ஆனோடையும் கேத்தோடையும் மேலும் கீழும் பொருத்தும் பர்க்கர் அமைப்பு தான் இந்த ப்ளூம் ப்யூல் செல்(Bloom fuel cell).சாதாரணா ஃப்யூல் செல்களில் ப்ளேட்டினம் எலெக்ட்ரோடாக பயன்படுத்தப்படும்.ஆனால் இந்த ப்ளூம் பாக்ஸில் பயன்படுத்தப்படும் அனோட்,கேத்தோட் பற்றி யாருக்கும் தெரியாது.அதைப் பற்றிய செய்திகளை மிகப் பத்திரமாய் பாதுகாக்கிறது ப்ளூம் எனெர்ஜி நிறுவனம்.இதன் எலெக்ட்ரோலைட் மிக எளிதில் கிடைக்ககூடிய பொருள்.அது சிலிக்கா(silica).புரியவில்லையா?.அது மண்.சாதாரண கடற்கரை மண்.இந்த மண்ணை ஒரு ரகசிய வினையின் மூலம் மெல்லிய தகடாக மாற்றி விடுகிறார்கள்.இப்போது இதனுள் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்.ஆனோடின் வழியாக ஹைட்ரஜனும் நீராவியும் கலந்து செலுத்தப்படும்.இதன் பெயர் மாற்றியமைக்கப்பட்ட எரிபொருள்(Reformed Fuel).கேத்தோடின் வழியே ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.இதன் விளைவு எலெக்ட்ரான்கள்.அதாவது மின்னோட்டம்.அதாவது மின்சாரம்.தீர்ந்தது விஷயம்.

ஒற்றைத் தகட்டினைக் கொண்டு 25வாட் மின்சாரத்தை உண்டாக்க முடியும் .இதே போல் ஒரு ரெஃப்ரிஜிரேட்டர் அளவு தகடுகளை அடுக்கினால்,அதன் மூலம் 100கிலோவாட் மின்சாரத்தை அசாதாரணமாய் உண்டாக்கலாம்.இதனைக் கொண்டு ஒரு பெரிய அலுவலகக் கட்டிடமே தனக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியும். ஆனால் இந்த ப்ளூம் பெட்டிகளை உற்பத்தி செய்ய அதிக முதலீடு தேவை.இதற்காக ஸ்ரீதர் சென்றது, ஜான் டோயரிடம்(john doerr).டோயரின் முழுநேர வேலையே இதுதான்.திறமையான தொழில் முனைவோரைக் கண்டறிவது.அவர்களின் தொழிலில் முதலீடு செய்து உதவுவது.கூகிள்(Google),நெட்ஸ்கேப்(Netscape),அமேஸான்(Amazon) போன்ற ஜாம்பவான்கள் கூட தன் ஆரம்ப நாட்களில் பணம் இன்றித் தவித்தார்கள்.அப்போது அவர்களிடம் முதலீடு செய்தவரும் இதே ஜான் டோயர் தான்.ப்ளூம் எனெர்ஜி நிறுவனத்தில் டோயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர்கள்.இதற்கு முன் இவ்வளவு பணத்தை எங்கேயும் முதலீடு செய்ததில்லை டோயர்.காரணம்.அவர் ஸ்ரீதர் மீது கொண்டுள்ள நம்பிக்கை.ப்ளூம் எனெர்ஜியின் வெற்றியைக் கணிப்பது எப்படி? ஸ்ரீதருடைய வாடிக்கையாளார்களின் பட்டியலைப் பார்த்தால் எளிதில் விளங்கிவிடும்.அவை
Google,eBay,Yahoo,Walmartl,Adobe systems,coco cola.
eBay வின் முதன்மை அதிகார்(CEO) ஜான் டொனோ(john donahoa) கூறியது:
”100 கிலோவாட் மின்சாரத்தை தயாரிக்கும் பெட்டியை 7 லட்சம் டாலர் செலவில் பொறுத்தியுள்ளோம்.எங்களுக்குத் தேவையான 500கிலோவாட் மின்சாரத்தையும் இந்த பெட்டிகளின் மூலமே பெறுகிறோம்.இதனால் ஒன்பதே மாதங்களில் 1 லட்சம் டாலர் வரை சேமிக்க முடிந்தது.உண்மையில் என்னை இது பிரம்மிக்க வைத்துள்ளது.இது அசாதாரணமானது.”


ப்ளூம் என்பதற்கு தமிழில் பூ என்று பொருள்.ஆம்.பூவை போலவே மென்மையாய்,சத்தம் இல்லாமல்,சுற்றுச் சூழலுக்கு தீங்கு செய்யாமல் உருவாக்கும் ஆற்றலை வேறென்ன சொல்லி அழைப்பது.சரியான பெயர்.புவியின் வெப்பம் அதிகரிக்கும் இன்றைய நாட்களில் இது போன்ற கண்டுபிடிப்பு நிச்சயம் தேவையானது.அவசியமானது.இந்த ப்ளூம் பாக்ஸ் ,இல்லை,இந்தப் பூக்கள் சீக்கிரமே நம் வீட்டை அலங்கரிக்கும்.நன்றி ஸ்ரீதர்.

Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை