பள்ளி மாணவர்களுக்கெல்லாம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டதென்பதை ஊரின் எந்தச் சாலையில் செல்லும்போதும் ஏழெட்டு சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிகிறது. கோடை விடுமுறையென்றாலே கிரிக்கெட் இல்லாமல் வேறென்ன. சுரீரென்ற வெயிலையே எனர்ஜி ட்ரின்க்காகக் குடித்து விளையாடிய எங்கள் ஆட்டங்களெல்லாம் நினைவில் வந்து போகாதா என்ன. அதையெல்லாம் யோசிக்க வேண்டுமென்றால் ஒரு கொசுவத்திச் சுருளைச் சுற்றி ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ....டிங் டிங் டிங் டிங்..
என்றைக்கும் உருப்படியான மட்டையென்பது இருந்ததே கிடையாது. கைப்பிடி இல்லாதது, பாதி உடைந்தது, விறகுக் கட்டை, கதவு செய்து மிச்சமென கீழே போட்டது இவைகளில் தானே அத்தனை ஆயிரம் ரன்களும் குவிக்கப்பட்டன. சரி பந்தாவது ? ஹும். பிளாஸ்டிக் பந்து போதாதா. அன்றைய பந்து ஆளுக்கு ஐம்பது காசுகள் வசூல் செய்து வாங்கப்பட்டு விடும். அப்படியென்றால் முந்தைய நாள் விளையாடிய பந்து ? யாரவது ஒரு சண்டாளன் ஏதோவொரு கிழவியின் வீட்டு மொட்டை மாடியில் அடித்து அன்றைய மேட்சுக்கு மூடுவிழா நடத்தியிருப்பான். சரி .ஸ்டெம்ப்புகள் உண்டா என்ன. அட. மின்கம்பம், எல்லா சுவற்றிலும் இருக்கிற கரியால் வரையப்பட்ட மூன்று கோடுகள், இவற்றுக்கெல்லாம் வேறு என்ன வேலை. ஸ்டெம்ப்பும் ரெடி. எல்லாவற்றையும் தயார் செய்து ஆட்டத்தை தொடங்கலாமா என்றால் ,அது தான் முடியாது. வழக்காமாக வசைச் சொற்களை வாரி வழங்கும்
கிழவிகளெல்லாம் ஆக்டிவாக இருக்கிறார்களா , எந்தக் கிழவி இப்போதைக்கு வீட்டில் இல்லை என்பதையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து தான் தெருவின் எந்தப் பகுதி
மைதானாமாகப் போகிறதென முடிவெடுக்க முடியும். இரண்டு அணிகளைப் பிரிப்பதென்பது தான் அடுத்த சிக்கலான காரியம்.
“அவன் எனக்கு”
“ அவன் எனக்கு”
”டேய் அவன் நேத்தைக்கு தான உங்களுக்கு விளையாண்டான், இன்னைக்கு எங்க டீம்தான் டா ”
” அதெல்லாம் இல்லை அவனையே கேட்டுருவோம், .”
ஆனாலும் கடைசியாக ஒருவன் மட்டும் மீதமிருப்பான். அன்றைக்கு அதிர்ஷ்டம் அவனுக்குதான். அந்த ஜீவனுக்குப் பெயர் காமன். இரண்டு பக்கமும் பேட்டிங் , பவுலிங்
உண்டு. சரி. எப்படியோ அணியை உருவாக்கி டாஸைப் போட்டு முதல் பேட்டிங்கை ஆரம்பித்து முதல் பந்தை வீசப் போகும்போது
”ஏங்கடா. மதியம் கொஞ்சம் தூங்கவே விட மாட்டிங்களா. வேற பக்கம் போங்கடா”
இந்தக் கிழவி வீட்டில் இல்லையென நினைத்துதானே ஆரம்பித்தோம். அடச்செய். உடனே நிர்வாகம் கூடி முடிவெடுத்து மைதானத்தை தெருவின் இன்னொரு பகுதிக்கு மாற்றும். ஓவர் கணக்கெல்லாம் இருந்ததே இல்லை. அணியில் எல்லாரும் அவுட்டாக்கி முடிக்கும் முன் உடலில் பாகங்கள் பல கழன்றுவிடும் . ஆனாலும் அந்த ஆட்ட விதிகள் இருக்கிறதே.
“ஓடி வந்து போட்டால் நோபால் , வாய்க்காலில் விழுந்தால் ஒரே ரன் தான், அம்மா கூப்பிட்டார் ஆயா கூப்பிட்டார் என பாதியில் போனால் அவுட்,பேட்டைத் திருப்பி பிடித்துவிட்டால் அவுட்,
மாடியில் போய் விழுந்தால் அவுட், சாலையில் போகிறவர் மேல் அடித்து அவர் திட்டினால் அவுட் ,இல்லையெனால் அவன் பேட்டிங்கை தொடரலாம்.”
இரு அணியிலும் எப்படியும் வலுவான பேட்ஸ்மேன்கள் சிலர் இருப்பார்கள் . அவர்களை வெளியேற்றுவதற்குத் தான் அட்டகாசமான உத்திகள் பயன் படுத்தப்படும்.
எப்படி பவுல்ட் ஆக்குவதென்ற உத்தியா என்ன. ம்ஹூம். அலேக்கான பந்தைப் போட்டு அவனை மொட்டை மாடிக்கு அடிக்க வைப்பதென்பது தான் திட்டம். இந்த வியூகத்துக்குள் சிக்காமால் அன்றைக்கு பொறுமையுடன் ஆடி ரன் குவிப்பவன் தான் மேன் ஆஃப் தி மேட்ச்.
எந்த ரன் அவுட்டுமே லேசாக ஒத்துக் கொள்ளப் பட்டதில்லை. அதைப் பேசி சண்டையிட்டு முடிவு செய்வதிலேயே பாதி நேரம் பனால். இரண்டு நிமிடத்துக்கொருமுறை பந்து வாய்க்காலுக்குப் போய்விடும்,
”பந்த எட்றா”
”நீ எடேன்”
”நீதான அடிச்ச”
“நீதான ஃபீல்டிங்கு”
“அதுக்கு” .
அடுத்த பஞ்சாயத்து .மீத நேரமும் முடிந்தது.கடைசி பேட்ஸ்மெனான காமன் என்றைக்குமே நடுநிலையாக விளையாடியதாகச் சரித்திரமில்லை. நடுநிலையென்பது வேறெங்கும் இருக்கிறதா என்ன ? 
எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருக்கிற மாதிரி தெரியும் போது , ஒருவன் சடாரென்று கிழவியின் வீட்டுக்குள் அடித்துவிடுவான்,
முடிந்தது கதை. ஓட்றா ஓட்றா ஓட்றா. ஆளுக்கொரு பக்கமாகத் தெரித்து , திண்ணையில் ஒன்று கூடி, அன்றைக்கு மீதமிருக்கிற பொழுதை அண்டர்டேக்கர் கதைகள் பேசிக் கழிப்போம். 

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182