வெள்ளை யானை - விமர்சனம்

 



சென்னை நகரை மெரீனாவின் மக்கள் கூட்டமாக, உயர்தர உணவகங்களாக, ஃபீனிக்ஸாக,அலுவலகத்தின் உயரமான ஏசி கட்டிடமாக , மென்பொருள் நிறுவனங்களாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு , இம்மாநகரம் இப்படியொரு பாதையை கடந்து வந்திருக்கிறதென்பது நம்ப முடியாததாகத் தானிருகிக்கிறது . 


இந்தியாவில் ப்ரிட்டிஷ் ஆட்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் விளைவைக் காட்டுகிறது. இப்படி ஒரு வரியில் சொல்லி முடிக்கலாம் தான். ஆனால் ஜெயமோகன் காட்டும் சித்திரங்களும் காட்சிகளும் அனுபவங்களும் நம்மை நிலைகொள்ளாமல் அலையச் செய்பவை, மனதை உடைத்து நொறுக்குபவை.


ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை எத்தனை படித்து பார்த்துத் தீர்த்தாலும் நாமதில் என்றைக்குமே மூன்றாமவர்தான். உண்மையில் ஒடுக்கப்பட்டவனுக்கு மட்டும் தான் அந்த வலியை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். எய்டன் அப்படிப்பட்டவன் தான்.

எய்டன் ஒரு ப்ரிட்ட்ஷ் அதிகாரியாக சென்னையில் நியமிக்கப்பட்டவன். ஆனால் அவன் பெரும்பாலனோரைப் போல பிரிட்டனின் பிறந்தவன் இல்லை. அயர்லாந்த்தைச் சேர்ந்தவன். அங்கிருந்து காலணி நாடுகளின் அதிகாரிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வந்தவன். 


தன் அயர்லாந்து நினைவுகளில் இருந்து முற்றிலும் மறைந்து ஒரு அதிகார போதையில் பணியில் இருந்தவனுக்கு ஐஸ் ஹவுசில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை தான் பஞ்சத்தைப் பற்றிய முதல் சித்திரத்தை அளிக்கிறது. எந்தவித பாதுகாப்பு உடைகளுமின்றி யானை அளவுக்கான பனிக்கட்டிகளை வெறும் கைகளால் கையாளுபவர்கள். இதனால் உடல் பாகங்கள் மறத்துப் போய் உடம்பு முழுக்க வெண் தழும்புகள். இத்தனையும் மிக சொற்ப கூலிக்காக. இவர்கள் ஏன்  இங்கு இப்படியிருக்க வேண்டும். ஏனென்றால் வெளியில் நிலைமை அதைவிட மோசம்.


சில நாட்களுக்கொருமுறை உணவருந்தக் கூடிய, சிறிய குடிசையில் பத்திருபது பேர் குமைந்து கொண்டிருக்ககூடிய, ஒட்டிப்போன எலும்புகளும் தோலும் மட்டுமே இருக்கக் கூடிய தேகங்களைக் கொண்டவர்களின் சென்னையை காத்தவராயனின் மூலம் காண்கிறான். 


பின்பு இப்பஞ்சத்தைப் பற்றி அறிய அவன் செங்கல்பட்டுக்குச் செல்லும் காட்சிகள் இதுவரை நாம் அறியாதவை. இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா , நாம் இன்றைக்கு எத்தனை ஆடம்பரத்தில் இருக்கிறோமென குற்றவுணர்வு கொள்ளச் செய்பவை. நாவலைப் படிக்கிற எவராயிருந்தாலும் தேம்பி அழாமல் இப்பகுதியை கடந்துவிட முடியாது.


இப்பஞ்சத்தின் விளைவுகளை பிரிட்டிஷ் அரசுக்குச் சொல்லி சரிசெய்து விட வேண்டுமென அவனால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் எடுக்கிறான். ஐஸ் ஹவுசில் முதல் தொழிலாளர் போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் தொழிலாளர்கள் முதன் முதலில் எதிர்த்து நிற்கும் காட்சிகள் அத்தனை உணர்ச்சிகரமானவை. ஆனால் எய்டனால் எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் திருநெல்வேலிக்கு மாற்றப் படுகிறான்.


தன் முயற்சிகள் அத்தனையும் வீழ்த்தப்பட்டு அழும்போது மரிசாவிடம் அவன் சரணையும் காட்சிகள் , நம்மையே நமக்குக் காட்டுகிறது. ஆனால் இறுதியில் மரிசாவால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவளால் விலக்கப்படுகிறான்


இந்நாவல் இதைச் சொல்ல வருகிறது, அதைச் சொல்ல வருகிறது என்பதை விட அப்பஞ்சத்தின் கணங்களை நாவலில் நாம் வாழ்ந்து எழுந்து வரும் போது என்னவாக உணர்கிறோம் என்பதே முக்கியம்.


நாவலில் வருகிற காத்தவராயன் பாத்திரம் அயோத்தி தாசர். அவரே எய்டனுக்கு சென்னையின் விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் பஞ்சத்தின் நிஜமான காட்சிகளையும் அளிக்கிறார்.


இதில் யார்தான் நிஜமான வெள்ளை யானை . பனிக்கட்டியா, ஐஸ்ஹவுசா, அதன் உரிமையாளர் ஐயங்காரா, பிரிட்டிஷ் அரசாங்கமா. எவராயிருந்தாலும் சரி தான். ஆனால் தன் முன்னிருப்பவரை நசுக்கிக் கொள்வதற்கு வெள்ளையானை தாமதிப்பதேயில்லை. 


இறுதியில் பைபிளில் தேவகுமாரன் மன்றாடும் குரல் தான் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


தேவனே தேவனே என்னை ஏன் கைவிட்டீர்!!!


Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை