உண்மையான காதல்





இந்த வருடத்தில் படித்த முதல் புத்தகம். அராத்து எழுதிய உண்மையான காதல். ஒரே அமர்வில் படித்து முடிக்கக் கூடிய குறுநாவல். ஆனால் அது சொல்ல வருகிற விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானதும், அதே நேரத்தில் முக்கியமானாதும் கூட.




காதல் தோல்வியால் வேதனையிலிருக்கிற ஒருவரை அவரது நண்பர்கள் சேர்ந்து தேற்றுகிற முயற்சியில் ஈசிஆரில் இருக்கிற ஒரு பங்களாவுக்குச் செல்கிறார்கள்(பார்ட்டிக்கு தான்). அங்கே நண்பர்கள் மத்தியில் நடக்கிற உரையாடல், ஒவ்வொருவரும் காதல் என்பதற்கு தாங்கள் நினைக்கிற விளக்கத்தையும் ,சில காதல் அனுபங்கள் மூலம் அவர்களுக்கு கிடைத்த புரிதல்களையும் சொல்லி விவாதிக்கிறார்கள். இறுதியில் கொஞ்சம் கலவையான மனவோட்டங்களுடன் தான் நாம் நாவலை படித்து முடிக்க முடிகிறது. ஆனால் நிஜத்தில், அது அப்படி மட்டுமே இருக்க முடியும்.




காதலைப் புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதில்லை என்பதுதான் நாம் அடைய வேண்டிய புரிதல். அந்தப் புரிதலை நோக்கித் தான் இந்த நாவலும் அதில் வருகிற ஒவ்வொரு உரையாடலும் நம்மை இட்டுச் செல்கிறது.




முக்கியமாக அஸ்வத் கதாபாத்திரம். நண்பர் குழுவில் சீனியர். சில காதல்கள், அதன் பரவசங்கள் , திருமண முறிவு,விவாகரத்து என .காதலைப் பற்றி அனைத்து பரிமாணங்களிலும் அனுபவம் கொண்டவர். ஒவ்வொருவரும் காதல் பற்றிய புரிதலைச் சொல்லி முடித்தவுடன் பொறுமையுடன் தன் மறுப்புகளையும் ஏற்புகளையும் சொல்லிக் கொண்டே வருவார்.




நாம் காதல் என்றும் கற்புகளென்றும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை ஒவ்வொரு முறையும் நிதானமாக அஸ்வத் உடைப்பார். 


பார்ட்டியில் அதைக் கேட்கிற ஒவ்வொருவரும் சீற்றம் கொண்டு அப்படி இல்லவே இல்லை என மறுப்பார்கள்.




 அவற்றை ஒருமுறை யோசிக்கும்போதும், கொஞ்சம் சரியாத்தானே இருக்கு, நாம தான் இத்தனை நாளா ஜல்லியடித்து காதலுக்கு புனித முலாம் பூசிக் கொண்டிருக்கிறோம், செக்ஸ் என்பதை அடையத் தான் காதல், பாசம் அது இதுவென சுற்றிச் சுற்றி குழம்பிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். 




 பெண்கள் காதலை எப்படி அணுகிறார்கள் என்பதையும் அங்கிருக்கிற பெண்களின் உரையாடல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் காதலும் , காதல் தோல்வியும் பெரும்பாலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்தே புரிந்து கொண்டிருப்போம். நிதர்சனத்தில் காதல் மீதான பெண்களின் அணுகுமுறை எப்படியானது என்றும் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.




ஆனால் கடைசியில் வருகிற பாலு தாத்தா- மங்களம் காதல் கதை மறுபடியும் நம்மை உணர்ச்சிகர நிலைக்கு கொண்டு போய்விடும். கொஞ்சமும் சுயநலமற்ற , அத்தனை அன்பு நிறைந்த கிராமத்துக் காதல். என்னதான் முற்போக்காக பேசினாலும் காதலை விளக்கிக் கொள்ள முயன்றாலும் , தன்னலமற்ற அன்பு நிறைந்த காதல் இருக்கத்தானே செய்கிறது என்பதுபோல.




சரி காதல் என்பது உண்மையிலேயே என்ன என்பதற்கு பதில் கிடைத்ததா என்று கேட்டால். அது முடியவே முடியாது, அதற்கு பதிலாக காதலை கொஞ்சம் புரிந்து கொள்ள முயல்வோம் என்பது தான் இந்த நாவல் திரும்பத் திரும்பச் சொல்கிற ஒரே பதில். :)


Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை