இன்சமாம் மற்றும் பிறர்
இன்று போல் எல்லாம் இல்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை தொடர்களில் வருடத்திற்கொரு முறை மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்கின்றன. ஆனால் இரு அணிகளும் சரளமாக மாறி மாறி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயணித்து ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் ஆடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.
ஆச்சரியம் என்னவெனில் தொடக்கப்பள்ளியில் படிக்கிற வயதிருந்த எனக்கு தேசப்பற்றையெல்லாம் தாண்டி ,அன்றைக்கு ஆடிய பாகிஸ்தான் அணியை ரொம்பவே பிடிக்கும். பாகிஸ்தானுக்கும், இந்தியா தவிர இன்னொரு அணிக்குமான ஆட்டமென்றால் ,சந்தேகமின்றி பாகிஸ்தான் பக்கமே மனது நின்றது. இந்தியாவுக்கு எதிரான சில ஆட்டங்களில் கூட பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். : ) கிரிக்கெட்டின் எந்த நுணுக்கமும் தெரியாத அந்த வயதில் ஏன் அப்படி அவர்களை பிடித்தது என யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணமும் பிடிபடவில்லை. வியப்பாகத்தானிருக்கிறது. ஹூம்.
இன்றைக்கும் பாகிஸ்தான் அணி கொஞ்சமும் பலமிழக்கவில்லை. அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு நாம் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த வீரர்கள் அந்த அணியில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள். சரி, பள்ளி வயதில் நான் ரசித்த பாகிஸ்தான் அணியில் வீரர்களை கொஞ்சம் பார்க்கலாமா :)
இன்சமாம் உல் ஹக் :
அன்றைக்கு அந்த அணியின் தலை சிறந்த பேட்ஸ்மேன். நிறைய நேரங்களில் தடுமாறும்போது அவரது பேட்டிங்கினால் மீட்டெடுத்துக் கொடுப்பார். சொல்லிக் கொள்ளும் படியான ஸ்டேன்சோ ஸ்டைலோ கிடையாது. ஆனால் அவரது கவர் ட்ரைவ்களும், புல் சாட்களும் மடேர் மடேர் என பந்தை பவுண்டரிக்கு விரட்டும். நீண்ட காலமாக பாகிஸ்தானின் கேப்டனாக அணியை வழிநடத்தி, பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர்.
அப்துல் ரசாக்:
அப்போது ஆடியவர்களில் உலக அளவில் மிகச் சிறப்பான ஆல்ரவுண்டர் யார் என்றால் , கொஞ்சமும் சந்தேகமின்றி ரசாக்கை சொல்லிவிடலாம். பேட்டிங்கின் போது ஏகப்பட்ட சிறப்பான ஃபினிஷர் இன்னிங்ஸ்களை கொடுத்தவர். அனைத்து ஸ்டம்புகளையும் காட்டி நிற்கும் அவரது ஸ்டான்சைப் பார்க்கவே மிரட்டலாக இருக்கும். பவுலிங்கிலும் மிரட்டிவிடுவார்.
முகமது யூசுப்:
யூசப் யொகானா என்றால் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முகமது யூசுப் தொடக்கத்தில் அந்தப் பெயரில் தான் ஆடினார். பின் கிறஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பின் தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்.
யூசப் ஒரு பாகிஸ்தான் டிராவிட். விக்கட்டுகளை இழந்து அணி உடைந்து போயிருக்கும் பெரும்பாலான நேரங்களில் மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவசரமின்றி பொறுமையுடன் ரன் சேகரிக்க வேண்டிய நிறைய நேரங்களின் யூசுப் அதை சிறப்பாக செய்து கொடுப்பார்.
முகமது ஆசிப்:
ஸ்விங்கும் சீமும் கலந்த இவரது பந்துகளைக் கண்டு மிரளாத பேட்ஸ்மேன்கள் உண்டா என்ன. மெக்ரத்தின் அதே பாணி. இறுதிவரை வேகத்தை விட துல்லியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். பீட்டர்சன்,ஆம்லா போன்ற அதிசிறந்த பேட்ஸ்மேன்களால் மனதார பாராட்டப் பெற்றவர். ஸ்பாட் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கியிருக்கவில்லையெனில் உலகின் என்றைக்குமான தலைசிறந்த பவுலர்களின் வரிசையில் வந்திருக்க வேண்டியவர். மிகக் குறைவான போட்டியில் விளையாடிய போதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மிகச்சிறந்த பவுலிங் மேதை முகமது ஆசிப்.
சல்மான் பட்:-
அதே ஸ்பாட்பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட்டிலிருந்து விலகிப்போன இன்னொரு பேட்டிங் சூப்பர் ஸ்டார். தொடக்க வீரராக களமிறங்கி ஏகப்பட்ட சிறந்த இன்னிங்ஸ்களை தந்தவர்.
கம்ரான் அக்மல்:-
அன்றைய பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர். அன்றைய ஒரு நாள் போட்டிகளில் கூட அதிவேகமாக ரன் குவிக்கத் தெரிந்தவர். இன்சமாம் மாதிரி அதே மடேர் மடேர் பாணி.
சொல்லிக் கொண்டே போகலாம். அதிரடியில் மிரட்டும் சயத் அஃப்ரிதி போன்றவர்கள், பேட்டிங்கயே ஒவியம் போல கைகொள்ளும் மிஸ்பா உல்ஹக் , யூனிஸ் கான், பந்து வீச்சில் மிரட்டும் சோயப் அக்தர், முகமது சமி, உமர் குல் , ஜுனைட் கான், ஸ்பின்னில் கலக்கும் டானிஷ் கனேரியா. எத்தனை எத்தனை மாஸ்டர்கள் இருந்த அணியது.
வெளிப்படையாகச் சொன்னால், ஐசிசி தொடர்களைத் தவிர இதர தொடர்களில் பாகிஸ்தான் நம்மை விடச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். அதை ஒப்புக் கொள்வதனாலும் நமது தேசபக்திக்கு பாதிப்பு வந்துவிடாது என்றே எண்ணுகிறேன்.
இரு அரசுகளுக்குமான மனக்குறைகள் விலகி, பரஸ்பர நட்புடன் மீண்டும் இரு அணிகளும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்கள் விளையாடும் காலமொன்று விரைவில் வருமென்று.நம்புவோம்.
Comments
Post a Comment