அரங்கம்

பாராவின் பொலிக பொலிக படித்ததிலிருந்தே திருவரங்கம் போய் ராமனுஜரைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.  இறுதியில் சென்றவாரம் அவ்வாசை நடந்தது. உண்மையில் எனக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் ராமானுஜரின் அந்த அர்ப்பணிப்பு தான் அவரை மிகவும் நேசிக்க வைத்தது.
எப்படியான மனிதர். தனது முப்பதாவது வயதில் திருவரங்கத்திற்கு வந்ததிலிருந்து மரணித்த நூற்றியிருபதாவது வயது வரை அரங்கனை மட்டுமே நினைவில் கொண்டு அவருக்காகவே வாழ்ந்திருக்கிறார். அசுரத்தனமான பக்தி. முழுமையாக தன்னை அர்ப்பணித்தல் என்பது அதுதான்.  


ஞாயிறு காலையில் நானும் நண்பன் மணியும் திருச்சி செல்லும் ரயிலைப் பிடித்தோம். எனக்கு ராமனுஜரை அறிமுகப் படுத்தியதே அவன் தான்.
ரயில் திண்டுக்கல் போய்ச்சேரும் வரை எந்தக் குழப்பமும் இல்லை. அங்கே போனவுடன் ரயிலை இரண்டாகப் பிரிப்ப்பார்கள். ஒரு பாதி ஈரோட்டுக்கும் இன்னொன்று திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கும். பிரச்சனை அதுவல்ல. எந்தப் பகுதி எங்கே போகுமென்பது எவருக்கும் உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அதே ரயிலில் போனபோது பின் பகுதி ரயில் திருச்சிக்கு போனது. அதே மாதிரிதான் இப்போதும் இருக்குமென நினைத்து  ஒரு டீயை வாங்கி உறிஞ்சிக்
கொண்டிருந்தோம். திடீரென்று யாரோ ஒரு மகான் வந்து இது ஈரோடுல போகுது என்றார். பகீரென்றது எங்களுக்கு. கடகடவென இறங்கி முன்னே ஓடினோம். போகும் வழியில் ரயில்வே பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது செய்தி உறுதியானது. ஆனால்  சில நிமிடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்குப் போக வேண்டுமென எங்களருக்கே அமர்ந்திருந்த இரண்டு பேரை முன்னாடி போங்கன்னே என்று அனுப்பிவிட்டிருந்தோம். அந்த ஜீவன்கள் என்ன ஆனார்கள் என்றுதான் இறுதிவரை தெரியவில்லை.


ஒருவழியாக திருச்சியில் இறங்கி, இன்னொரு பேருந்து பிடித்து திருவரங்கம் அடைந்தோம். பேருந்திலிருந்து இறங்கியவுடனே பிரம்மாண்டமான அந்த வாயிலைக் காண முடிந்தது. இங்கேதான் ராமனுஜர் வாழ்ந்தாரா, ராமனுஜர் வாழ்ந்த இடத்தில் நிற்கிறோமா என்று உள்ளம் குதூகலமானது.
தாமதிக்காமல் விறுவிறுவென உள்ளே நுழைந்து ராமனுஜரின் சன்னதியைத் தான் முதலில் தேடினோம். ஆனால் அது மூடப்பட்டிருந்தது. திறக்க நான்குமணியாகும் என்றனர். வயிறும் காலியாக இருப்பதாகப் பட்டது. வெளியே வந்து ஒரு கடையில் சாப்பிட்டு முடித்து உள்ளேபோக
மணி சரியாக நான்கு . ராமனுஜரைப் பார்த்தபோது அவரின் இறுதி நிமிடங்கள் நினைவில் வந்தன. திரும்பவும் அதே ஆச்சரியம். அர்ப்பணிப்பு. நம்மால் நினைத்தே பார்த்திருக்க முடியாத அர்ப்பணிப்பு. ராமானுஜரை நினைக்கும் போதெல்லாம் தோன்றியது அது ஒன்று மட்டும் தான்.


அங்கிருந்து நகர்ந்து கோவிலின் மற்ற இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பலாமா என்றால் “கிளம்பனுமா. ரங்கனாதரை யார் பார்ப்பா. வா போகலாம் அங்க” என்றான் மணி. என்னடா இது என்று அங்கே போனால் குபீரென்றது கலக்கம்.
அரங்கனைப் பார்க்க வேண்டுமென  அங்கே பல கிலோமீட்டர்களுக்கு வரிசையில் நின்றிருந்தார்கள் மக்கள்.நாங்களும் போய் நின்றோம்.


விஷ்ணுபுரம் நாவலின் முன்னுரையில் பெருமாளின் பாதத்தில் ஒரு அலை மோதி சுழித்துத் திரும்பி தன்னிடம்
வந்தது என்று ஜெயமோகன் எழுதியிருப்பார். அந்த வரியெல்லாம் அடிக்கடி வந்துபோனது. நாமும் ஜெயமோகன் மாதிரி எஸ் ரா மாதிரி எதாவது தரிசனத்தைக் கண்டுவிடலாம் என்று நரம்புகள் புடைத்து முறுக்கேறின
ஒருமணிநேரம் வரிசையில் நின்று கடைசியில் அரங்கனைக் கண்டோம். ஜெயமோகனுக்கு கிடைத்தது போல் நமக்கும் எதாவது தெரிகிறதான் என்று பார்த்தேன். ம்ஹூம்.  காற்றுதான் வந்தது. “சீக்கிரம் போங்கோ “ என்று ஒரு ஐயங்கார் மாமா விரட்டி விட்டார் . வடிவேலு சொல்வாரே “அதுக்குளாம் மொகராசி வேணும்டா மொகராசி” .ஹூம். ஆனால் மணிக்கு அரங்கனைப் பார்த்தபோது எதோ அதிர்ச்சி உண்டானது என்றான்.  போடா பொங்கல் என்று சொல்லி அவனை வெளியே கூட்டி வந்தேன்.


நான்கு வருடங்கள் திருச்சியில் படித்திருந்தபோதும் இங்கே ஒருமுறை கூட வராமல் போய்விட்டோமே என்று தான் தோன்றியது. இறுதியாகத் தான் நினைவுக்கு வந்தது. “அட.ஸ்ரீரங்கம் நம்ம வாத்யார் சுஜாதா ஊருல”.ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வருகிற மாதிரியெல்லாம் இப்போது அங்கு எதுவுமே இல்லை. இன்றைய ஸ்ரீரங்கம் திருச்சியில் ஒரு சிறிய பகுதியாக மாறிவிட்டது என்றும் தான் வாழ்ந்த அரங்கம் போல் இன்றைக்கு இல்லை என்றும் வாத்யாரே அதில் வருத்தப்பட்டிருப்பார்.
ஹூம்.  ஒரு டீயைப் போட்டுவிட்டு ஊருக்கு ரயிலேறினோம்.

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182