பம்பரக் கட்டை


Image result for playing top

வட்டத்தினுள் மட்டீர் மட்டீர் என்று குத்தி கட்டைகள் வெளியேறும் அந்தச் சத்தமும், கோஸ் கோஸ் என்று அத்தனை பேரும் ஆர்ப்பரிக்கும் ஓசையும் இன்னமும் துல்லியமாக் கேட்கிறது :) .பம்பரம் எப்போதுமே ஒரு சீசன் விளையாட்டாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது சாதாரண பள்ளி நாட்களிலோ, வார இறுதி விடுமுறைகளிலோ என ஓரிரு நாட்களுக்கு மட்டுமாக அதை நாங்கள் விளையாடியதே இல்லை. ஆண்டுத் தேர்வு விடுமுறைகளின் பகல் நேரங்கள் தான் எப்போதுமே இதற்குச் சரியானது. ஆனால் ஒரு முறை கூட பம்பரம் விளையாடுவோம் என எல்லோரும் ஒன்றுகூடி முடுவெடுத்தெல்லாம் ஆடியதே இல்லை. It happens. யாரவது ஒருவன் ஏதோ ஒரு யோசனையில் பம்பரம் ஒன்றை வாங்கி தெருவில் சுற்றிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்த இன்னொருவன் உடனே ”எங்கடா வாங்கினே”.
கடையைக் கேட்டு விசாரித்து அவன் வாங்கி அவனும் பொழுதுபோகாமல் சுற்றுவான். இப்படியே ஒவ்வொருவராக வாங்கி எல்லோரும் ஆட்டத்தில் சேர மூன்று நாட்களாவது ஆகும். அது அப்படியே அந்த விடுமுறைக் காலம் முழுவதுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அன்றைக்கு யாராவது குறி வைத்து செய்யப் படுவார்கள். அதெல்லாம் ரேண்டமாக சிக்குவது தான். எப்படியும் அவனுடைய கட்டை அன்றைக்கு பெருத்த சேதத்தைச் சந்திக்கும்.
எல்லாருமே அட்டாக்கிங் ஆட்டக்காரர்களாக இருக்க மாட்டர்கள். சிலர் ”உள்ளே போகாம இருந்தாச் சரி” என கோசெடுப்பதில் கவனம் செலுத்தி ஆட்டத்தில் பெரும்பாலும் வெளியவே இருப்பார்கள்.நானெல்லாம் இரண்டாவது வகை.( வெக்கமா இல்ல நாயே :) ) முதல் கோஸை ஆரம்பித்து ஒவ்வொரு கட்டையாக உள்ளே சேர சேர அட்டாக்கிங் ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் பெருகும். டேய் டேய் என்னைய வெளியேத்துடா ப்ளீஸ்டா ப்ளீஸ்டா என்று கெஞ்சல்கள் கேட்க அட்டாக்கர்களுக்கு அன்றைக்கு மவுசு தான்.
”இருடா எல்லாத்தையும் ஒரே அடில தள்ளுரேன்”
சில நேரம் சரியாக அடித்து வெளியேற்ற முடியும்.
வலதுகாலைத் தூக்கி மட்டேரென்று அடிக்க பல கட்டைகள் வெளியே தெறிக்கும். பல நேரங்களிம் பனாலென்று மொட்டையாகப் போய் விடும்.வேறென்ன செய்ய.
“போ போ போ. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்”.
பம்பரம் விடுவதில் சில பல வகைகள் உண்டு.அதிலொன்று குத்தாட்டம் .இது ஓங்கி பலமாக அடித்து அதே இடத்தில் விறுவிறுவென சுற்ற வைப்பது. இருப்பதிலே சிக்கனாது இதுதான். இதில் எது அதிக மண்ணைப் பிளந்து வெளியே தள்ளுகிறது என்பது மாதிரியான போட்டிகளும் சில நேரங்களில் நடக்கும் .வீச்சாட்டம் என்பது எஸ்கேப்பிங் ஆட்டம். அதாவது ஆள விடுங்கடா சாமி என்று குத்தும் வாய்ப்பை எப்படியாவது சிக்கலில்லாமல் முடிக்கப் பயன்படுத்தப் படும். வட்ட்த்தினுள் பட்டும் படாமலும் சர்ரென்று வீசிவிடுவது . இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் கொஞ்சம் வேகமாக வீசினால் பம்பரம் நேரே போய் வாய்க்காலிலோ அல்லது எந்நேரமும் விளையாடுவதற்காகத் திட்டுகிற எதாவதொரு கிழவியின் வீட்டினுள் விழுந்துவிடும். வாய்க்காலில் விழுந்தாலாவது கூடப் பரவாயில்லை. கழுவிக்கொண்டு ஆட்டத்தை தொடரலாம். கிழவிகளிடம் சிக்கிய பம்பரங்களெல்லாம் அவ்வளவுதான். அவற்றை மறந்துவிடுவதே சிறப்பு. மூன்றாவது பொம்பளாட்டம். இதை பெரும்பாலும் Beginnerகள் தான் ஆடுவார்கள். அடுத்தடுத்த அனுபங்களில் அதை கைவிட்டு விடுவார்கள்.
பம்பரம் விளையாடுவதைப் போல, சிறந்த கட்டையை தேர்வு செய்து வாங்குவது, வாங்கிய பின் ஆணியை அடிகுழாயினுள் விட்டுக் கழற்றி வேறு ஆணி மாற்றுவது என்பன போன்றவற்றிலும் சிலர் நிபுணர்களாக இருப்பார்கள். இவர்களை கரெக்ட் செய்தால் ஆட்டத்துக்காக சில நல்ல யோசனைகள் நிச்சயம் கிடைக்கும்.
பம்பரத்திற்கு சாட்டை எவ்வளவு முக்கியமோ, அதுமாதிரி சாட்டையின் பிடிமானத்திற்கு பாட்டில் மூடிகள் முக்கியம். இவற்றை எங்களூரில் சிங்கிகள் என்போம். பாட்டில் மூடிகளை சேகரிக்க ஊரின் எத்தனை பலசரக்குக் கடை வாசல்களை அலசியிருப்போம். :) சிங்கியின் நடுவே ஒட்டையைப் போட்டு அதில் சாட்டையை நுழைத்து அதை இறுகப் பிடித்துக் கொண்டால் எதோ புது தைரியம் வந்தது போலிருக்கும்.
ஆனால் மரக்கட்டைப் பம்பரங்கள் இருந்த வரைதான் எல்லாமே விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எங்களூர் கடைகள் ப்ளாஸ்டிக் பம்பர விற்பனைக்கு மாறத் தொடங்கியிருந்தன. அதில் விளையாடுவது முன்பைப் போல அவ்வளவு சுவாரஸ்யமாகவும் இருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்களையே அறியாம ஆட்டத்தைக் கைவிட்டோம். இன்னமும் யாராவது பம்பரம் விளையாடுகிறீர்களா என்ன? எதாவது விடுபட்டிருந்தால் உங்களுடைய அனுபங்களால் அதை நிரப்புங்களேன்.

விளையாடுவோம் :)

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182