இன்று திடீரென பள்ளிக் காலத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய காட்சி ஒன்று துல்லியமாக நினைவில் வந்துபோனது . அதன் பின் நாங்கள் சிறுவயதில் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டாக மனதில் ஓடவிட்டுப் பார்த்தேன். அட. எத்தனை அற்புதமான காலங்கள். சுரீரென்ற வெயிலையும் சீக்கிரம் வரச் சொல்லி வீட்டில் விழுகிற திட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆடிய கிரிக்கெட்டும் , பம்பரமும் , கோலியும் , எறிபந்தும், கிட்டியும் ,இரவில் மட்டுமே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கிற கப்பைஸும், மாய்ந்து மாய்ந்து திண்ணையில் அமர்ந்து பேசிய பேய்க் கதைகளும், அண்டர்டேக்கர் கதைகளும், வாய்க்காலில் விழுந்த பந்தை யாரெடுப்பது என்ற
பிரச்சனையும், நாங்கள் தெருத் தெருவாக பின் தொடர்ந்து சென்ற கோயில் யானைகளும், ஜனவரி பிப்ரவரியும், ரஸ்லிங் கார்டும், எங்களிடைய இருந்த அஜித், விஜய் ரசிகர் குழுக்களும், அதன் சண்டைகளும் , அடேங்கப்பா. நினைத்துப் பார்க்கையில் பெருமூச்சை வரச் செய்கிறது. . இதில் நிறைய விளையாட்டுகள் தெருவில் எங்கள் தலைமுறையோடு வழக்கொழிந்து விட்ட சோகக் கதையும் நடக்கத்தான் செய்தது.

பதினைந்து பேராவது இருந்திருப்போம். இன்றைக்கு மிகச் சிலரே. வேலைக்காகவும் , வீடு மாறியும் என்று அந்தக் குழு சிதறிவிட்டது . சில பேரிடம் தொடர்பே இல்லையென்றானது. படாரென்று ஒரு யோசனை . இந்த ஒவ்வொரு தெருவாட்டங்களைப் பற்றியும் எங்கள் தெருவைப் பற்றியும் இன்னும் அனுபவங்களைப் பற்றியும் விரிவாக எழுதினால் என்ன. யாருக்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது இதை எழுதத் தான் வேண்டும். எழுத்தினூடாக அந்த வாழ்க்கையை இன்னொரு முறைபோய் வாழ்ந்து பார்த்துவிட்டு வருகிற ஒரு பேராசைதான். எனக்கு மட்டுமா என்ன. எல்லாருக்குமே அவர்களின் சிறுவயது என்பது விளையாட்டுகளால் நிரம்பியது தானே. :) . இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறேன். விளையாடுவோம். :)



Comments

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை