AI எனும் ஏழாம் அறிவு
AI செயலிகளின் அசாத்திய திறன் மீதான பிரம்மிப்பும், அவை மனிதர்களின் வேலையை பிடுங்கிக் கொண்டு துரத்தியடிக்கும் என்ற பயமும் ஒரு சேர நம்மை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டம். இப்படியான சூழலில் தமிழில் AI குறித்து வந்திருக்கும் முக்கியமான புத்தகம் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய “AI எனும் ஏழாம் அறிவு” புத்தகம். ஏஐ யின் ஆரம்பகட்டம் ,அத்துறையில் உண்டான படிப்படியான முன்னேற்றங்கள், அதன் இன்றைய அசுரப் பாய்ச்சல் என எல்லாவற்றையும் விரிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாகவும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இருந்து இப்புத்தகம் துவங்குவது நமக்குக் கொஞ்சம் ஆச்சரியம் அளிக்கலாம்.ஆனால் அது அப்படித்தான் துவங்கியிருக்க வேண்டுமென புத்தகத்தை வாசிக்கிற போது புரிந்து கொள்ள முடியும். அப்போரில் தான் AIக்கான முதல் விதை ஆலன் டூரிங்கால் போடப்பட்டது. ஆனால் அதற்கு ஆலன் டூரிங் சந்தித்த இடர்களும் சவால்களும் ரொம்பவே அதிகம். போரின் போது படைகளுக்கு செய்திகளை அனுப்ப புது முறையை கையாள்கிறது ஹிட்லரின் ஜெர்மானிய ராணுவம். அதற்காக எனிக்மா என்னும் இயந்திரத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் அனுப்புக...