பசியோடு இரு
”பசியோடு இரு;
ஏமாற்றத்தோடு இரு”
ஸ்டீவ் ஜாப்ஸின்
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் இந்த நேரத்தில் அவர் சொல்லிய இந்த வரிகள் தான் என்
மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் ஜான் மெக்கின்ஸி. ஸ்டீவ் ஜாப்ஸின் நெருங்கிய
நண்பன். புற்று நோய் காரணமாக நேற்றிரவு ஸ்டீவ் இறந்துவிட்டதாக
கூறினார்கள். அவருடன் உரையாடியே நிறைய மாதங்கள் ஆகிவிட்டன. அவரின் கடைசி நேரத்தில்
உடன் இருக்கமுடியவில்லை என்ற வேதனை என்னை பெரிதும் அழுத்துகிறது. என்னால் சரியாக பேசக்கூட
முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது .கண்ணீர் வழிகிறது. இந்த துயரமான நேரத்தில்
ஸ்டீவுடன் ஆப்பிளில் நான் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பல வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம். இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர்களை வடிவமைத்திருக்கிறோம்.
ஆனால் என்னால் ஸ்டீவை முழுதாகப் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. ஸ்டீவ் ஒரு புதிர்.
தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டு முன்னேற்றத்தைச் செய்து கொள்ளும் விடைதெரியாத புதிர்.
அதைப் பிறரால் புரிந்து கொள்ளவே முடியாது.
கம்ப்யூட்டிங்
துறையில் இத்தனை புரட்சி செய்து ,கம்ப்யூட்டரையும் செல்ஃபோன்களையும் ஒரு குழந்தை கூட
சுலபமாக பயன்படுத்தும்படி அவற்றை வடிவமைத்தார் ஸ்டீவ். மக்களுக்கு கம்ப்யூட்டர் என்பது
மிக எளிமையானதாக இருக்க வேண்டும் என்று தான் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். ஆனால்
ஸ்டீவுக்கு வாழ்க்கை என்றுமே எளிமையானதாக இருந்ததில்லை. ஒவ்வொரு நாளுமே போராட்டங்கள்
தான். ஒவ்வொரு நாளுமே சிக்கல்கள் தான். எத்தனை புறக்கணிப்புகள், எத்தனை அவமானங்கள்.ஆனால்
ஸ்டீவ் என்றுமே சோர்ந்து போனதில்லை. தான் விரும்பிய வடிவத்தைக் காணும் வரை ஓய்வைப் பற்றிய சிந்தனையே அவருக்கு வராது. பொறியாளர்களுக்கும்
ஓய்வு கிடையாது.
பொதுவாக எலக்ட்ரானிக்ஸ்
என்பது கொஞ்சம் கடினமான துறை என்ற பிம்பம் தான் மக்களிடையே உண்டு. ஆனால் ஸ்டீவுடன்
ஆப்பிளில் பணியாற்றிய இத்தனை வருடங்களில் நான் எலக்ட்ரானிக்ஸை கடினமானதாக அணுகியதேயில்லை.
சினிமா பார்ப்பது போல, கால்ஃப் விளையாடுவது போல ஒவ்வொரு நிமிடத்தையும் சுவாரஸ்யமாக
அனுபவித்து பணியாற்ற ஸ்டீவ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். எனக்கு மட்டுமில்லை.
ஆப்பிளில் பணியாற்றிய அத்தனை பணியாளர்களிடமும் வேலையின் போது இந்த சுவாரஸ்யத்தைக் காண
முடியும். காரணம் ஸ்டீவ் தான்.
ஸ்டீவுக்கு ஏன்
வடிவமைப்பில் இத்தனை ஆர்வம்? ஏன் இப்படி பணியாற்றிக் கொண்டே இருந்தார் .செய்பொருளின்
மீது தீராத காதல். ஒரு பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக ,ஏளிமையாக வடிவமைக்க
வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமே ஸ்டீவுக்கு இருந்தது.
இதைத்தவிர வேறு எதைப் பற்றியும் அவர் யோசித்ததே இல்லை. இந்நேரம் ஸ்டீவ் உயிரோடு இருந்தால்
என்ன செய்து கொண்டிருப்பார். நிச்சயம் வெறுமனே உட்கார்ந்து கொண்டு இருந்திருக்க மாட்டார்.
ஏதாவது புது யோசனையை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருப்பார்.
நான் ஸ்டீவை முதலில் சந்தித்த
அந்தத் தருணம் மிகவும் சுவாரஸ்யமானது.
1975 ஆம் ஆண்டு
வெளிவந்த அல்ட்டேர் என்ற புதிய மைக்ரோ கம்ப்யூட்டர் ,அன்றைய அமேரிக்க இளைஞர்களை தன்
பக்கம் வெகுவாக ஈர்த்தது. கணக்குப் போடுவதைத் தாண்டி அது தனக்குள் அதிக சிறப்புகளைக்
கொண்டிருந்தது. அல்ட்டேர் மீது ஆர்வம் கொண்ட அமேரிக்க இளைஞர்கள் பலர், அதைப் பற்றியும்
அதில் புதிய ப்ரோக்ராம்கள் எழுதுவது பற்றியும் விவாதிக்க ஒரு குழுவைத் தொடங்கினோம்.
அடிக்கடி சந்தித்து உரையாடினோம் அது ஹோம்ப்ரூ கம்ப்யூட்டர் க்ளப். அங்கு தான் ஸ்டீவ்
ஜாப்ஸை சந்தித்தேன். அவருடைய நண்பர் வாஸ்னியாக்கும் உடனிருந்தார். உண்மையில் ஸ்டீவை
விட வாஸ் அதிக திறமை கொண்டவர். ஆப்பிளின் ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை வடிவமைத்து, அந்த நிறுவனத்தை உச்சிக்கு
அழைத்துச் சென்றது வாஸ் தான். ஆனால் ஒரு நிறுவனத்தின் சிறப்பான பொருட்கள் மட்டும் அதன் வளர்ச்சிக்கு போதாது என்பது நிதர்சனமான
உண்மை. பொருளின் வடிவம், ஊழியர்களின் ஒத்துழைப்பு, சந்தைப் படுத்துதல், வாடிக்கையாளர்களை
கவர்தல் இப்படி எத்தனையோ தேவைப்படுகிறது. இவை முழுவதையும் தான் ஸ்டீவ் செய்தார். வேறெந்த
நிறுவனமும் செய்ய முடியாத அளவில் மிகச் சிறப்பாக செய்தார். ஹோம்ப்ரூ கம்ப்யூட்டர் க்ளப்பில்
ஸ்டீவும் வாஸும் உரையாடிக் கொண்டிருப்பதை அருகில் சென்று கவனித்தேன்.
”வாஸ்னியாக் ,இந்த
அல்ட்டேரைப் பார்த்தாயா. மைக்ரோ கம்ப்யூட்டர்களில் இது ஒரு புரட்சி போலவே எனக்குத்
தோன்றுகிறது” என்றார் ஸ்டீவ்.
“ஆம் ஸ்டீவ். உண்மை
தான். இதற்கு முன் வெளிவந்த கம்ப்யூட்டர்களை விட இது முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது”
“வாஸ் எனக்கு ஒரு
யோசனை தோன்றுகிறது. இதே போல , இதைவிட ஒரு மேம்பட்ட கம்ப்யூட்டரை உன்னால் உருவாக்க முடியும் தானே. அந்த புதிய கம்ப்யூட்டரை விற்பனை
செய்ய ஒரு புதிய நிறுவனத்தை நாம் தொடங்கலாம். பெயர் கூட முடிவு செய்துவிட்டேன். “ஆப்பிள்”
.கொஞ்சம் சுமாரான பெயராக இருக்கிறதோ”
“அருமையான யோசனை.
நிச்சயம் முடியும். கொஞ்ச நாள் பாடுபட்டு உருவாக்கிவிடலாம். ஆனால் நிறுவனம் தொடங்குவது
சாதாரண வேலையா என்ன .அதற்கு நிறைய பணம் வேண்டுமே”
“பணத்தை விட்டுத்தள்ளு.
அது உறுதியாக நமக்கு கிடைத்துவிடும். என் கவனமெல்லாம் நாம் தயாரிக்கப் போகும் கம்ப்யூட்டர்
மீது தான் . அதன் வடிவமைப்பு மீதுதான். “
“ஸ்டீவ்.அல்ட்டேர்
போல ஒரு கம்ப்யூட்டர். அவ்வளவு தானே . பிரச்சனையில்லை. கவலைப்படாதே.”
“இல்லை வாஸ்னியாக்
.இது நமது வாடிக்கையாளர்களுக்குப் போதாது. இதை விடச் சிறப்பாக. இதைவிட மேம்பட்டதாக
வேண்டும். நமது நிறுவனம் சாதாரண கணக்குப்
போடும் கம்ப்யூட்டர்களை தயாரிக்கப் போவதில்லை. என்வரையில் கம்ப்யூட்டர் என்பது மக்களின்
வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு நாம்
தயாரிக்கும் கம்ப்யூட்டர்களும் பங்களிக்க வேண்டும்.
இதைத் தான் எதிர்பார்க்கிறேன்”
“ஆனால் இது நம்மால்
முடியுமா. மக்களை எப்படி ஈர்ப்பது”
“ கவலை கொள்ளாதே
வாஸ். நீ வடிவமைப்பில் கவனம் செலுத்து. மற்ற நிறுவன வேலைகள் அனைத்திற்கும் நான் பொறுப்பு.”
ஸ்டீவின் அந்த
துறுதுறுப்பு என்னை அவரை நோக்கி இழுத்துச் சென்றது . கம்ப்யூட்டர் துறையை எப்படியெல்லாம்
கொண்டு செல்ல அவர் நினைக்கிறார் என என்னால் அன்றைக்கே காண முடிந்தது . அவர்கள் அருகே
சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
”வணக்கம் .நான்
ஜான் மெக்கின்ஸி. ஹோம்ப்ரூ க்ளைப்பில் நானும் உறுப்பினர்.”
“ஓ.நல்லது நண்பரே.
நான் ஸ்டீவ் ஜாப்ஸ். இவன் என் நண்பன் வாஸ்னியாக். பெரிய மூளைக்காரன்”
“நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை இவ்வளவு நேரம் கவனித்துக்
கொண்டிருந்தேன். எப்படி உங்களால் இந்த அளவு கனவு காண முடிகிறது ஸ்டீவ். உங்களுக்கு எனது வாழ்த்துகள்”
“நன்றி மிஸ்டர்
மெக்கின்ஸி. நான் அற்புதம் எதையும் செய்துவிடவில்லை. கொஞ்சம் மாற்றி யோசிக்கிறேன்.
அவ்வளவு தான். எப்போதும் போலவே ஒரே மாதிரி விஷயங்களைச் செய்வதில் என்ன சிறப்பு இருக்கப்
போகிறது. .வித்தியாசமாக எதையாவது செய்ய நினைக்கிறோம் .பார்க்கலாம்.“
”ஸ்டீவ். ஒரு வேண்டு
கொள். உங்கள் நிறுவனத்தில் நானும் இணைந்து கொள்ளலாமா? எனக்கு ஆர்வமாக இருக்கிறது. உங்களுடன்
பணி செய்வது நிச்சயம் எனக்குப் பெருமைதான்”
”இதில் பெருமைக்கு
எந்த இடமும் இல்லை மெக்கின்ஸி. திறமை இருக்கிறதா. அது போதும். உனக்கு இத்தனை ஆர்வம்
இருக்கிறது பார்த்தாயா. இந்த ஆர்வம் தான் எங்கள் நிறுவனத்திற்கு தேவை. நீ இனிமேல் எங்கள்
நிறுவனத்தில் உறுப்பினர். சந்தோசம் தானே”
அதை நான் எதிர்பார்க்கவே
இல்லை . நிச்சயம் ஸ்டீவ் மற்ற நிறுவனர்களை விட மாறுபட்டவர். அவருடைய தேடல் மாறுபட்டது.
அவருடைய தேவை மாறுபட்டது. எல்லாமே மாறுபட்டது.
சில ஆண்டுகளிலேயே
ஆப்பிள் மிகப்பெரிய ஒரு நிறுவனமாக வளர்ந்தது. பங்குச் சந்தையில் புதிய பங்குகளை விற்றது.
எண்ணற்ற மக்கள் ஆப்பிளின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் கொண்டனர். வாஸ்னியாக் உருவாக்கிய
ஆப்பிள் 2 கம்ப்யூட்டர் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முதன் முறையாக
வண்ணத் திரையோடு ஒரு கம்ப்யூட்டர் . மக்களின் வாழ்க்கையில் உதவும் ப்ரோக்ராம்கள். இதைவிடச்
சிறப்பு ஏது.
அன்று ஸ்டீவ் என்
அறைக்கு வந்தார். எதோ ஒரு புதிய யோசனையுடன் தான் வந்திருந்தார். அவரிடம் அந்த மகிழ்ச்சி
இருந்தது.
”மெக்கின்ஸி. நம்முடைய
நிறுவனத்திற்கு ஒரு சிறந்த விற்பனைத் தலைவரை நியமிக்க வேண்டுமென நினைக்கிறேன். என்ன
சொல்கிறாய்.”
”ஓ. நல்ல முடிவு
தான். ஆனால் யார் அந்த நபர். அவரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறோம்”
“”நிறைய நிறுவனங்களின்
விற்பனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பெப்ஸியின் ஜான் ஸ்கல்லி அந்த நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்துகிறார். அவர்
ஆப்பிளுக்கு வந்தால் , நம்முடைய வளர்ச்சி பிரம்மாண்டமாய் இருக்கும்”
அன்றைக்கு நானும்
ஸ்டீவும் ஜான் ஸ்கல்லியை அவருடைய வீட்டில் சந்திக்கச் சென்றோம். ஸ்கல்லியை ஆப்பிளுக்குக்
கொண்டு வருவது .அவ்வளவு சுலபமானதல்ல. ஸ்கல்லி அவ்வளவு எளிதாக இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். ஸ்கல்லி பணத்திற்கு ஆசைப்பட்டு
நிறுவனத்தை மாற்ற மாட்டார். இது ஸ்டீவுக்கும் தெரியும். ஆனால் அவரிடம் நம்பிக்கை இருந்தது.
ஏனெனில் பணத்தைத் தாண்டியும் ஸ்டீவிடம் நிறைய விஷயங்கள் இருந்தன . எதிர்கால கம்ப்யூட்டர்
உலகைப் பற்றிய தீர்க்கமான பார்வை .அது ஒன்று போதும். ஸ்கல்லி நம் பக்கம் தான். உறுதி.
ஸ்டீவ் முதலில்
உரையாடலைத் தொடங்கினார்.
“ஸ்கல்லி. நமக்குள்
அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். நேரடியாக கேட்டு விடுகிறேன். நீ ஆப்பிளின் விற்பனைத்
தலைவராக பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தான் நாங்கள் வந்துள்ளோம்”
“அப்படியா. மன்னிக்கவும்
மிஸ்டர் ஸ்டீவ் ஜாப்ஸ். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. “
“ஏன் ? என்ன வேண்டும்
உனக்கு. தயக்கம் ஏதுமின்றி கேட்டுவிடு ஸ்கல்லி . சம்பளமாக 1 மில்லியன் டாலர் தருகிறோம்.
சேருவதற்காக 1 மில்லியன் டாலர் இப்போதே . போதும் தானே “
“ஸ்டீவ் . உனக்கு
எத்தனை முறை சொல்வது. எனக்கு இதில் விருப்பமில்லை. கிளம்பி விடு”
”:2 மில்லியன்
டாலருக்கு பிரம்மாண்ட வீடு ஒன்றும் தருகிறோம். இப்போது என்ன சொல்கிறாய்”
“அட. என்ன இது.
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாயா. நீ எத்தனை கொடுத்தாலும் நான் வரமாட்டேன். புரிகிறதா. போய்விடு. எனக்கு நிறைய
வேலை இருக்கிறது”
அன்றைக்கு ஸ்கல்லி
ரொம்பவே தலைக்கணமாக பேசினார். ஸ்டீவ் கொஞ்சமும் அசரவில்லை. ஆனால் ஸ்டீவைப் பார்க்க
எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஏன் ஸ்கல்லி இப்படி ஸ்டீவை அவமதிப்பு செய்கிறார்.
நான் ஸ்டீவ் ஜாப்ஸிடம்
சொன்னேன் ” ஏன் ஸ்டீவ் இப்படி முரண்டு பிடிக்கிறாய்.
இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்காதா என்ன. இவர் பேச்சே சரியில்லை. ரொம்பத் தான் ஆடுகிறான்.
வா நாம் போகலாம். இவனை விட சிறப்பான விற்பனையாளர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்”
”இல்லை மெக்கின்ஸி.
ஸ்கல்லி மிகச்சிறந்த விற்பனையாளர். பெப்ஸியின் வளர்ச்சியை பார்க்கும்போது உனக்குப் புரியவில்லையா. எனக்கு நம்பிக்கை இருக்கிறது”
ஸ்டீவ் ,ஜான் ஸ்கல்லியிடம்
கடைசியாக ஒன்றைச் சொன்னார்.
“ஸ்கல்லி . இதோ
பார். நீ பணத்திற்கு மதிப்பளிப்பவன் இல்லை என்பது புரிகிறது. உனக்குத் தேவை வேலையில்
சுவாரஸ்யம் . அதுதான் எங்களுக்கும் தேவை. நீதான் ஆப்பிளுக்கு சரியான ஆள்.
நீ பெப்ஸியில்
இருந்துகொண்டு அந்த சர்க்கரைத் தண்ணீரை விற்றுக் கொண்டு காலத்தைத் தள்ள விரும்புகிறாயா
? இல்லை. எங்களோடு சேர்ந்து உலகை மாற்ற விரும்புகிறாயா”
ஸ்கல்லி அசந்து
போய்விட்டார். அவர் சொன்னது எத்தனை உண்மை. அந்த வார்த்தைகளை ஸ்கல்லி வாழ்க்கை முழுவதும்
மறக்கவே மாட்டார்.
”சர்க்கரைத் தண்ணீரை விற்க விரும்புகிறாயா ? இல்லை. எங்களோடு சேர்ந்து
உலகை மாற்ற விரும்புகிறாயா”
அதுதான் ஸ்டீவ்.
இத்தனை மக்களையும் ஆப்பிளை நோக்கி ஈர்த்தவருக்கு. ஜான் ஸ்கல்லியை ஈர்ப்பது அவ்வளவு
கடினமில்லை. ஸ்டீவ் நினைத்ததைச் செய்து விட்டார்.
அதன் பிறகு ஜான்
ஸ்கல்லி ஆப்பிளில் விற்பனைத் தலைவராக இணைந்து கொண்டார். ஸ்டீவ் தான் சொன்னது போலவே
அத்தனை பணத்தையும் ,வீட்டையும் அவருக்குக் கொடுத்தார். ஆப்பிளின் வளர்ச்சி ஸ்டீவ் நினைத்தது
போலவே அபரிமிதமாக இருந்தது.
ஸ்டீவின் வடிவமைப்பு
ஆர்வத்தைப் பற்றிச் சொல்ல அன்றைக்கு நடந்த ஒரு சம்பவம் போதும். மேக்கின்ட்டாஸ் கம்ப்யூட்டரை
வடிவமைக்கும் பொறியாளர்களோடு ஸ்டீவ் அன்று ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.
“வணக்கம் நண்பர்களே.
மேக்கின்ட்டாஸ் உருவாக்கத்தைப் பற்றி உங்களிடம் நான் நிறைய ஆலோசிக்க விரும்புகிறேன்.
முக்கியமாக அதன் வடிவம் பற்றி. மேக்கின்ட்டாஸ் கம்ப்யூட்டர் ஒரு காரைப் போல பயன்படுத்துவதற்கு
உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும்.”
ஒரு பொறியாளர்
கேட்டார். “ புரிகிறது. கார் என்றால் வோல்க்ஸ் வேகன் போல இருக்கலாமா?”
“அட !!!. அதெல்லாம்
இல்லை. நான் அதையெல்லாம் தாண்டி எங்கேயோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். கார் என்றால்
Porsche போல இருக்க வேண்டும்,”
“ஓ. Porsche போலவா.?
அதெல்லாம் சாதாரணம் இல்லையே. மிகவும் கடினம் எனத் தோன்றுகிறது”
“இங்கே பாருங்கள்
பொறியாளார்களே. நாம் இங்கே என்ன செய்யப் போகிறோம் என்பதில் முதலில் தெளிவாக இருங்கள்.
என்வரையில் மேக்கின்ட்டாஸ் என்பது ஒரு கலைப் படைப்பு. அழகிய ஓவியம் போல. சிறிய ஆபரணப் பெட்டி அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
அதற்கு உங்களை மட்டுமே நம்பியிருக்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானலும் என்னிடம்
கேளுங்கள், மறுப்பு என்பதே கிடையாது. உங்களையெல்லாம் உற்சாகமான ஒரு சுற்றுலாவுக்கு
நான் அழைத்துச் செல்லப் போகிறேன். சீக்கிரம் தயாராகுங்கள்”
பொறியாளர்களுக்கு
மிகுந்த ஆச்சரியம். சுற்றுலா செல்வதற்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பதற்கும் என்ன சம்பந்தம்
இருக்கமுடியும். இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஸ்டீவ் வேறுவிதமாக சிந்தித்தார்.
அந்தச் சுற்றுலா பொறியாளர்களின் மனதில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தியது . பொறியாளர்களை
ஓவியக் கண்காட்சிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்றார்.
“இதைத் தான் நான்
காண விரும்புகிறேன். இந்த ஓவியங்களைப் பாருங்கள். எத்தனை அழகு. எப்படிப் பட்ட கலைப்படைப்பு.
இதே போல நமது கம்ப்யூட்டரும் இருக்க வேண்டும் தானே. வாடிக்கையாளர்களின் கண்ணில் பட்டதும்
அவர்களை ஈர்த்துவிட வேண்டும்.”
அவர் நினைத்தது
போலவே மேக்கின்ட்டாஸின் அற்புதமாக வந்தது.
இன்றைக்கும் ஆப்பிளின் வரலாற்றில் மேக்கின்ட்டாஸ் முக்கியமான ஒரு படைப்பு.
ஆனால் ஸ்டீவிற்கு
அதிர்ஷ்டம் தொடரவில்லை.அவருடைய சிந்தனைகளுக்கும் ஆப்பிளின் நிர்வாகிகளுக்கும் பொருந்தவில்லை.
அவர்களுக்கிடையில் ஏகப்பட்ட மனக்கசப்பு. ஸ்டீவ் வெளியேறிவிட்டார். அவர் தொடங்கி இவ்வளவு
தூரம் வளர்த்த நிறுவனத்திலிருந்து அவரே விலகிவிட்டார். ஆனால் நான் ஆப்பிளிலேயே இருந்து விட்டேன். ஸ்டீவைப் போல எனக்கு தைரியம் வரவில்லை.
பின் ஸ்டீவ் “நெக்ஸ்ட்” என்ற நிறுவனத்தைத்
தொடங்கினார். ஆப்பிள் நிறுவனத்தில் அவர் பெற்ற அத்தனை பணத்தையும் அங்கே முதலீடு செய்திருந்தார்
ஆப்பிளுக்கு போட்டியாக அது இருக்கும் என நம்பினார். ஆனால் அது நடக்கவேயில்லை. ஆப்பிள்
போல ஸ்டீவுக்கு நெக்ஸ்ட் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக இயங்கவில்லை. அவருக்கு மிகப்பெரிய
நஷ்டம் உண்டானது. அவர் மிகவும் வேதனை அடைந்திருந்தார்.
ஒருநாள் அவரைச்
சந்திக்க அவர் வீட்டிற்கு போனேன்.
“வா மெக்கின்ஸி.
நாம் சந்தித்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. உங்களுடைய நிறுவனம் நன்றாக இருக்கிறதா”
“ஏன் ஸ்டீவ் இப்படி செய்கிறாய். உன்னுடைய இந்த நிலைக்கு நீதான் காரணம். உன் கோபம் தான் காரணம். நீ ஆப்பிளை விட்டு விலகியதில் இருந்து அங்கு எதுவுமே சரியில்லை. நீ ஆப்பிளுக்கு மறுபடியும் வரவேண்டும். “
“மெக்கின்ஸி. இத்தனை
வருடங்கள் நாம் நண்பர்களாக இருந்திருக்கிறோம். நீ இன்னும் என்னை புரிந்து கொள்ளவில்லையே.
நீயே இப்போது சொல். நானாகவா விலகினேன் . அங்கே என் பேச்சுக்கு எந்த மரியாதையும் இல்லையே.
பிறகு ஏன் நான் அங்கு இருக்க வேண்டும்”
“ஸ்டீவ். உனக்கு
ஏன் பிறரிடம் சமரசமாக போகத் தெரியவில்லை. எல்லவாற்றிற்கும் எரிந்து விழுகிறாய்”
“சமரசம். நல்ல
வார்த்தை. நான் அடங்கிப் போய் இருக்க வேண்டும் எனச் சொல்கிறாய். அதுதானே .”
“அப்படி நான் எப்போது
சொன்னேன்”
“இதோ பார் மெக்கின்ஸி.
என் 23 வது வயதில் என்னிடம் ஒரு மில்லியன் டாலர்கள் பணம் இருந்தது. 24 வது வயதில்
10 மில்லியன். 25ல் 100 மில்லியனுக்கும் மேல். ஆனால் இப்போது எதுவுமே இல்லை. எல்லாம்
நஷ்டம் .இதில் இருந்தே புரிந்துகொள் . நான் என் வாழ்க்கையில் எதையுமே பணத்திற்காக செய்ததில்லை.
எனக்குத் தேவையானது எல்லாமே வாடிக்கையாளார்களுக்கான சிறந்த கம்ப்யூட்டர்கள். அதற்காக
நிறைய கனவுகளை வைத்துள்ளேன். ஆனால் அங்கே எனது கனவுகளுக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை.
நான் அங்கேயே இருந்து என்ன பயன். அவர்கள் பெரிய முயற்சிகளைக் கண்டால் பயப்படுகிறார்கள்.
சாதாரண கம்ப்யூட்டர்களை வைத்தே காலத்தை ஓட்டலாம் என நினைக்கிறார்கள். அதற்கு நான் தடையாக
இருந்தேன் எனச் சொல்கிறார்கள். இனியும் அந்தத் தடை இருக்காது. நானே வெளியேறிவிட்டேன்”
“ஆனால் இப்போது
உன் பணம் எல்லாமே நஷ்டம் ஆகிவிட்டதே. இனி என்ன செய்யப் போகிறாய்”
”பழைய எல்லாவற்றையும்
மறந்துவிட்டாயா மெக்கின்ஸி. நாம் அன்றைக்கு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய போது நம்மிடம்
எவ்வளவு பணம் இருந்தது. பூஜ்ஜியத்தில் இருந்துதான் அதைத் தொடங்கினோம். ஆனால் அதை எவ்வளவு
தூரம் முன்னேற்றினோம். .எனக்கு பணத்தைப் பற்றிய கவலையே கிடையாது. என்னிடம் நம்பிக்கை
இருக்கிறது. பல புதிய யோசனைகள் இருக்கிறது. அதுவே எனக்குப் போதும்”
ஸ்டீவை சமாதானம் செய்ய யாராலும் முடியாது. பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
அதன்பிறகு அவர்
இல்லாமல் ஆப்பிளால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆப்பிள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துக்
கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இழுத்துமூடும் நிலையை அது அடைந்தது. ஆப்பிள் நிர்வாகிகள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள
குழம்பிக் கொண்டிருந்தனர். ஸ்டீவ் ஜாப்ஸை மறுபடியும் கூப்பிடலாமா என சிலர் ஆலோசனை கூறினர். சில நிர்வாகிகள் அதற்கு தயக்கம் காட்டினர். ஆனால்
அவர்களுக்கு வேறு வழியே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
அன்று நிர்வாகிகள்
கூட்டம் அந்த முடிவை எடுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியது.
1996 ஆம் வருடம் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் ஆப்பிள் புதிய பாதையை நோக்கிச் செல்லத்
தொடங்கியது.
ஆனால் இப்போது
ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர்கள் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் தாண்டி
பரந்த தளத்தில் சிந்திக்கத் தொடங்கினார். ஆப்பிளுக்கு திரும்ப வந்ததும் ஜாப்ஸ் கொண்டு
வந்த முதல் ப்ராடக்ட் “ஐபாட்” . அதற்கு முன்வரை பாடல் என்பது பெரிய சிடி ப்ளேயர்கள்
மூலம் ஒலிக்கப்பட்டது. ஸ்டீவுக்கு அது வெறுப்பைத் தந்தது.
“ஏன் இது இவ்வளவு
பெரியதாக இருக்க வேண்டும். சின்ன தீப்பெட்டி அளவிலான ஒரு இசை கேட்கும் கருவி. வரிசையாக
பாடலுக்காக காத்திருந்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை . விரும்பிய பாடலை உடனே தேர்ந்தெடுத்து
கேட்கலாம். அப்படி ஒரு ப்ராடக்ட் . தான் இந்த ஐபாட்”
அதன் பிறகு ஸ்டீவ்
எத்தனையோ சாதித்து விட்டார். ஐபேட்,ஐமேக் என உலகத்தையே வியக்க வைத்த சாதனங்கள்.
முக்கியமாக ஐஃபோன்.
அதுதான் தொலைபேசி வரலாற்றில் மிகப் பெரிய சாதனை . இன்றைக்கு இருக்கும் எல்லா ஸ்மார்ட்
ஃபோன்களுக்கும் ஆதார அடித்தளம் அன்று ஸ்டீவ் யோசித்த ஐஃபோன் தான் .
இத்தனை வெற்றிகளுக்கு
பிறகு ஸ்டீவால் முன்பு போல வேகமாக இயங்கமுடியவில்லை. அவர் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.
ஸ்டீவ் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. ஆனாலும் முழுதாக குணமாகவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஆப்பிளில்
பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டில் பட்டமளிப்பு விழா
நடந்தது. ஸ்டீவை அதற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
அங்கே அவர் பேசிய
உரை வரலாற்றிலேயே முக்கியமானது. கடைசி சில வரிகளைக் கேட்கும் போது நான் அழுவதை நிறுத்த
முடியவில்லை.
மேடையில் ஸ்டீவின்
குரல் அத்தனை கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“ வாழ்ந்து முடித்ததும்
எல்லோருமே சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் யாருமே சாவதற்கு
விரும்புவதில்லை. எத்தனை பெரிய முரண்பாடு இது.
இந்த உலகில் இறப்பு ஒன்று தான் அற்புதமான நிகழ்வு. பழைமையை முற்றிலுமாக அழித்து
புதியதாக ஒன்றை உருவாக்குகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையுமே கடைசி நாள் என
நினைத்து வாழுங்கள். என்றாவது ஒருநாள் நிச்சயம் எதையாவது சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்
.
இறந்த பிறகு சந்தனச் சவப்பெட்டியில் உறங்கிக் கிடக்க எனக்கு விருப்பமில்லை. தினமும்
தூங்கும் போது ”இன்றைக்கு சிறப்பாக ஒன்றைச் செய்திருக்கிறோம்” என நிம்மதியாக உறங்கச்
செல்ல வேண்டும். அதுபோதும் எனக்கு .
எந்த வெற்றியிலும்
போதுமென நினைத்துவிடாதீர்கள். வெற்றிக்கான பசி மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை வெற்றி வந்தாலும் ஏமாற்றமாக உணர வேண்டும். இது போதாது என நினைக்க வேண்டும்.
இதைத்தான் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். பசியோடு இருங்கள். ஏமாற்றத்தோடு இருங்கள்.
Stay Hungry, Stay Foolish ”
புற்றுநோய் தீவிரமாகி
ஸ்டீவ் படுக்கையில் வீழ்ந்தார். படுக்கையிலும்
ஆப்பிளின் சமீப நடவடிக்கைகள் பற்றி யாரிடமாவது விவாதித்துக் கொண்டுதான் இருந்தார்.
நேற்று நள்ளிரவில் ஸ்டீவின் உயிர் பிரிந்துவிட்டது. கம்ப்யூட்டர், தொலைபேசி துறையின்
முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த மூளை இன்றைக்கு செயலிழந்து விட்டது.
ஸ்டீவ் இறந்த இன்றைக்கு
,உலகம் முழுவதும் பல மக்கள் அழுது கொண்டிருக்கின்றனர்.
பில்கேட்ஸும், பராக் ஒபாமாவும் வருத்தச் செய்தியை வெளியிட்டனர் . ஆனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு விடுமுறை இல்லை. ஆப்பிள் ஊழியர்கள் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் ஸ்டீவ் ஜாப்ஸும் விரும்பியிருப்பார். நானும் ஸ்டீவ் இருக்கும் சவப்பெட்டியை சுமந்து சென்று கொண்டிருக்கிறேன். அதன் கைப்பிடியைக் கூட ஒழுங்கோடு பிடித்துத் தூக்க வேண்டுமென ஸ்டீவ் நினைப்பார். ஸ்டீவுக்கு அனைத்திலுமே ஒழுங்கு தேவை.
ஸ்டீவின் இறுதி ஊர்வலம் அத்தனை அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரு குரல் மட்டும் காற்றில் கலந்து எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது.
“பசியோடு இரு. எமாற்றத்தோடு இரு. Stay Hungry,Stay foolish”
(உதவிய புத்தகம் – ஆதாம் கடித்த மிச்சம் – அப்பு”
வாழ்த்துகள் தோழர் ! :)
ReplyDelete